என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடத்தல் முயற்சி"
- சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
- ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த 'கியூ' பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ' பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
- சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.
மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.
அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
- கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை முறியடித்தது.
புதுடெல்லி:
அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வந்து அந்த கப்பல்களை கடத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டில் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தக் கப்பலை அவர்கள் தங்களது கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.
இதற்கிடையே இந்திய கடற்கரையிலிருந்து 2,800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உடனே இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் முயற்சியில் கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டன.
சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்திய ஹெலிகாப்டர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. சுற்றி வளைக்கப்பட்டதால் கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையில் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கப்பல் ஊழியர்கள் 17 பேரை மீட்டனர். இவர்கள் 100-நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். எம்.வி.ரூயென் கப்பல் தற்போது முழுமையாக இந்திய கடற்படை வசம் உள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட னர். 17 ஊழியர்கள் எந்த வித காயமுமின்றி மீட்கப்பட்ட னர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
- 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்ததால், முஜித் காரை நிறுத்தி உள்ளார்.
- டைல்ஸ் விற்கும் கடை நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள கட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜித். இவர் அங்குள்ள மார்க்கெட் சந்திப்பில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இவர் இரவில் கடையை அடைத்து விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரவு 10 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் கார் சென்றபோது இருளில் மறைந்திருந்த 3 பேர் திடீரென வந்து காரை மறித்துள்ளனர்.
அவர்களில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்ததால், முஜித் காரை நிறுத்தி உள்ளார். அவர்கள், அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் இருந்து வருவதாகவும், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் முஜித்திடம் கூறி உள்ளனர். ஆனால் அதனை நம்ப அவர் மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து 3 பேரில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முஜித், கூச்சலிட்டார். இதனை கேட்டு அந்தப்பகுதியில் மக்கள் திரண்டனர். இதனால் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் பற்றிய விவரம் கிடைத்தது. போலீஸ் உடையில் இருந்தவர்கள், பொன்முடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கிரண் மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் வினீத் என்பதும் மற்றொருவர் அவர்களது நண்பர் அருண் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டைல்ஸ் விற்கும் கடை நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்