என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tollbooth"

    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
    • திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறது.

    இது தொடர்பாக திருமங்கலம் உள்ளூர் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள்-சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அவ்வப்போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் தொடரும்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண விலக்கு அளித்தது. கடந்த 1-ந் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் மாதாந்திர கட்டணமாக ரூ.310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதை கண்டித்து கடந்த 22-ந் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன.

    இந்த போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.

    இதில் பேசியவர்கள் அமைச்சர் மூர்த்தி தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.

    கப்பலூர் சுங்கசாவடியில் உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என்று அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு பலனை அளிக்கும்.

    அடுத்த கட்ட நடவ டிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்று கையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சுங்கச்சாவடியை அகற்ற முடியும் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்று வதற்கானசுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளோடு கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    • அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.

    அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

    • சாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சமரச கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூய்மைப் படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வாய்க்காலில் கால்நடைகள் விழுந்து இறந்து பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கால்வாயை சுத்தப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சமரச கூட்டம் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஐயப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். அப்போது வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. மேலும் கட்டண விவரங்களையும் வெளியிட்டது.

    இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் இந்த போராட்டத்தை யொட்டி கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

    இதுபற்றி கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பஸ்கள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடாது.

    இந்த பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றார்.

    அதன்படி இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள்.

    அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் சென்றனர். இதனால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைத்து பஸ்களையும் கொத்தட்டை சுங்கச்சாவடிக்கு கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    அதேபோல் கொத்தட்டை சுங்கச்சாவடி சுற்று வட்டார கிராம மக்களும், அனைத்து கட்சியினர், சமூகநல அமைப்பினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×