என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய மந்திரிகள்"
- பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
- தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.
மதுரை:
மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைக்க வேண்டும். அப்போதுதான் மீன்வளம் அதிகரிக்கும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி, தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.
எனவே எல்லா காலக்கட்டத்திலும் அதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மற்றும் கச்சத்தீவு என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.
அதன்படி பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கைகளை விடுக்க உள்ளேன்.
பா.ஜனதா கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். காமராஜர் தோல்வியுற்றபோது, நாம் தோற்று விட்டோமே என கட்சிக்காரர்கள் கூறினார்கள். அதற்கு காமராஜர், இதுதான் ஜனநாயகம் என பதில் அளித்தார்.
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. ஆனால் மோடி, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.
பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறி இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.
பா.ஜனதாவுக்காக நான் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. அ.தி.மு.க. தனது கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. ஆனால், பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
- சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி:
டெல்லியில் வருகிற 9, 10-ந்தேதிகளில் ஜி-20 சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.
ஜி-20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக அவர் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு அனுப்பி உள்ளார்.
வெளியுறவு அமைச்சகம் தயாரித்து வழங்கிய அந்த அழைப்பிதழ் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அதில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் "பாரத ஜனாதிபதி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல ஜி-20 மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் 26 பக்க சிறு புத்தகத்திலும், "பாரதம்-ஜனநாயகத்தின் தாயகம்" என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் மத்திய அரசு இதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே இன்று இந்தோனேஷியா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பற்றிய அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் பெயரை இந்தியா என்றும் பாரதம் என்றும் அழைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2 பெயர்களையும் பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருக்கிறது.
ஆனால் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் அதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாரதம் என்று பெயர் மாற்றும் நடவடிக்கை இருக்காது என்று மத்திய அரசு மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். என்றாலும் எதிர்க்கட்சிகள் பாரதம் பெயரை மத்திய அரசு அதிரடியாக மாற்றக்கூடும் என்று சந்தேகிக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இந்தோனேஷியா நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் முன்பு அவசரமாக மத்திய மந்திரி சபை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பாரதம் பெயர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் பற்றியும் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தெரிய வந்துள்ளது.
மத்திய மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடந்தது. அந்த கூட்டத்தில் பொருளாதார ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜி-20 மாநாட்டை நடத்தி முடித்ததும் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
- ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது
கிள்ளியூர் :
இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க சாகர் பரிக்கிரமா என்ற யாத்திரையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோரப் பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த யாத்திரை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை இன்று குமரி மாவட்டம் தேங்காபட்டணம் வந்தடைந்தது. இந்த குழுவில் மத்திய மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீனவ பிரதிநிதிகள் தேங்காபட்டணத்தில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவும், மாயமான மீனவர்களை தேட வசதியாக ஹெலிகாப்டர் தளம், விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ், துறைமுக மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறிய தாவது:-
தமிழகத்தில் முதன் முறையாக தேங்கா பட்டணத்தில் மீனவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிபடி மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்படுத்தினார். மீனவர் மேம்பாட்டுக்காக சுமார் ரூ38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்தியா இன்று மீன் ஏற்றுமதியில் 4-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்து 800 கோடி ரூபாய் தமிழக மீன்பிடி துறை மேம்பாட்டுக்கு 9 வருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தேங்காபட்டணம் பிரச்சினை சம்மந்தமாக கமிட்டி அமைத்து துறைமுகம் சீரமைக்கப்படும். இங்கு பொது மக்கள் அளித்த அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் கவுசிக், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், தொழில் அதிபர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மற்றும் மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்தூர், வள்ளவிளை, குறம்பனை, வாணியக்குடி, குளச்சல், முட்டம் மீனவ கிராமங்களுக்கும் மத்திய மந்திரிகள் குழு சென்றது. அங்கும் மீனவர்களை சந்தித்து பேசினர்.
தேங்காப்பட்டணம் துறைமுகம் வருவதற்காக மத்திய மந்திரிகள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் புறப்பட்டனர். அவர்களை வரவேற்று துறைமுகம் அழைத்து வருவதற்காக தனியார் படகுகள் கடலுக்குச் சென்றன. தேங்காப்பட்டணம் துறைமுகம் அருகே கடற்படை படகு வந்த போது காற்று அதிகமாக இருந்தது. அலையும் வேகமாக காணப்பட்டது. இதனால் கடற்படை படகில் இருந்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளால் துறைமுகத்திற்கு வரும் தனியார் படகில் ஏற முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் கடற்படை படகில் இருந்தபடி தவிப்புக்குள்ளானார்கள். இந்த சம்பவம் சிறிது நேரம அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- வருகிற 19-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் தொடங்குகிறது.
- பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு நடைபயணத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். 5 கட்டங்களாக வருகிற ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
முதல் கட்ட யாத்திரை வருகிற 22-ந்தேதி நெல்லையில் முடிவடைகிறது. நேற்று முன்தினம் ஓய்வு என்பதால் அண்ணாமலை சென்னை புறப்பட்டு வந்தார்.
நேற்று மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும், அந்த கூட்டத்தில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசுவதாகவும் இருந்தது. ஆனால் பாராளுமன்ற கூட்டம் காரணமாக மத்திய மந்திரி வர இயலவில்லை.
இதனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அண்ணாமலையின் யாத்திரை இன்று தொடங்குவதாக இருந்தது. இப்போது அதுவும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. நாளை விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது.
வருகிற 19-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் தொடங்குகிறது. 21-ந்தேதி ஓய்வு, 22-ந்தேதி நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு நடைபயணத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.
- 5 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
- பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க மும்முரம் காட்டி வருகிறது. அதே வேளையில் பா.ஜ.க.வை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதை தொடர்ந்து இரு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களில் பிரதானமாக உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான 26 கட்சிகளை ஒருங்கிணைத்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி(இந்தியா) என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் கடந்த 13, 14-ந்தேதிகளில் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 5 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் களநிலவரங்களை பார்த்தால் பா.ஜ.க.வுக்கு, காங்கிரஸ் கட்சி 'டப்' கொடுக்கும் வகையில் உள்ளது.
தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியை முறியடிக்க பா.ஜ.க.வும் பல்வேறு அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறது.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணி கட்சியினர் கடந்த 17-ந்தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள். இதில் எதிர்க்கட்சி கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.
இவர்களை 11 குழுக்களாகப் பிரித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு, 21 மத்திய மந்திரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வருகிற நாளை (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தொடர திட்டம் வகுக்கப்படுகிறது. பிராந்தியம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள இக்குழுக்களுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் 2 மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் இருப்பார்கள்.
முதல் சந்திப்பு நாளை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது. 83 எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் இந்த சந்திப்பில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய மந்திரி நிதின் கட்கரியும் இடம் பெறுகிறார்கள். 2-வது சந்திப்பில் மந்திரிகள் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் இடம் பெறுகின்றனர்.
பிரதமருடனான இந்த சந்திப்பில் இடம்பெறும் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி, மத்திய அரசு திட்டங்களின் நிலை, மக்களின் பிரச்சினைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க உள்ளனர். இந்த சந்திப்புகளின் மூலம் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற பா.ஜ.க. முயற்சிக்கிறது. அடுத்து வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெல்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளது.
இவற்றில் தங்கள் கட்சி 20 வருடங்களாக ஆட்சி செய்யும் மத்தியபிரதேசம் பா.ஜ.க.விற்கு முக்கியமாக உள்ளது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் இதர கட்சிகளின் சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
ஆனால் காங்கிரஸ் முக்கியத் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுத்து பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. எனவே ம.பி.யில் தங்கள் ஆட்சியை 5-வது முறையாக தக்க வைப்பது பா.ஜ.க.விற்கு பெரும் சவாலாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பொறுத்தே பா.ஜ.க.விற்கு மக்களவை தேர்தலிலும் எம்.பி.க்கள் கிடைக்கும். தற்போது ம.பி.யின் 29 மக்களவைத் தொகுதிகளில் 28 இடங்கள் பா.ஜ.க. வசம் உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும் பொறுப்பை மந்திரி அமித்ஷாவும், தலைவர் நட்டாவும் ஏற்றுள்ளனர்.
அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே மத்திய மந்திரிகள், பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்