என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாங்குநேரி சம்பவம்"

    • பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தனர்.
    • பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

    நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார்.
    • பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள்

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிக்கின்றன. பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன.

    பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். அது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிக்கிறது. மாணவர் சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலேயே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சி தாளாமல் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததும் நடந்திருக்காது.

    பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதி வெறிக்கு இடமளிக்கப்படக் கூடாது. அவை சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும். அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒட்டு மொத்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.

    நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
    • தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    அப்போது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

    தமிழக அரசு உங்களது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அமைச்சரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளேன். நீங்கள் தைரியமாக இருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    நாங்குநேரியில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்த உடன் முதலமைச்சர் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    முதலமைச்சரும் நேரடியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடம் பேசியிருக்கிறார். குழந்தைகள் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்கும் எனவும் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    • சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
    • போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், அது குறித்து அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், தனது சகோதரன் சின்னத்துரையை காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இன்றைக்கு, தமிழகமெங்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் சீரழிவை சந்திப்பது தினசரி நிகழ்வாக உள்ளது. இளைய சமுதாயத்தினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க பலமுறை தி.மு.க. அரசை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    அ.தி.மு.க. அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலும், சாதி, இன மோதல்கள் இன்றி, மக்கள் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். சாதி, இன மோதல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழக மக்கள் அமைதியாக தங்களது பணிகளை செய்து வந்தனர்.

    ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 27 மாத காலத்தில், நாள்தோறும் ஏதேனும் ஒரு குற்றச் சம்பவம் நடைபெறுவதும்; பிறகு, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதும், அறிக்கை விடுவதுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. வரும் முன் காப்போம் என்ற எண்ணமே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்று கேட்கும் இந்த விடியா அரசு இனியாவது, மாணவர்களின் மத்தியில் நன்னெறி,

    நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.

    சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டு பிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
    • கொலைபாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பெருந்தெருவைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கையையும் பள்ளியில் நடந்த பிரச்சனையால் கடந்த 9-ந்தேதியன்று சக மாணவர்களால் தாக்கியும், மிகக் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் உள்ளார்கள்.

    உடன் படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த கொலைபாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தங்கையும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்குநேரி சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது.
    • இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உயர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்து தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.

    இச்சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

    இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உயர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

    இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.
    • மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் சக மாணவர்களால் பள்ளி மாணவர் தாக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளார்.

    பள்ளி மாணவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.

    அவர் நாங்குநேரி பகுதியில் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்பட்டுள்ளதா?, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை படித்த வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியிலும் உறுப்பினர் ரகுபதி ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    • வருங்காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும்; எண்ணங்களும் ஏற்படாதவாறு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
    • மாணவர் சமுதாயம் வருங்கால இந்தியாவை உருவாக்க கூடிய சமுதாயம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாங்குநேரியில் நடந்த சம்பவம் சாதிப் பிரச்சினை அடிப்படையில் நடந்துள்ளது. குறிப்பாக மாணவர்களிடையே இது போன்ற உணர்வு ஏற்படக் கூடாது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்களிடையே சாதி ரீதியான வெறுப்புணர்வை யாரும் தூண்டக் கூடாது. இது போன்ற சம்பவங்களும், எண்ணங்களும் நாட்டை பின்நோக்கி தள்ளிவிடும், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். வருங்காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும்; எண்ணங்களும் ஏற்படாதவாறு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    அரசு பள்ளிக் கல்வித்துறையும் சரி, அரசு பள்ளியின் தலைமையும் சரி இதுபோன்ற சம்பவங்களில் தொடர் கண்காணிப்புத் தேவை. மாணவர் சமுதாயம் வருங்கால இந்தியாவை உருவாக்க கூடிய சமுதாயம். அரசும், பெற்றோர்களும,; ஆசிரியர்களும் அவர்களை நல்வழிப் படுத்தக் கூடிய, நன்மைபயக்க கூடிய வழிமுறைகளை போதிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி தாக்கப்பட்டு உள்ளனர்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தேவையான உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2006-2011 தி.மு.க. ஆட்சியைப் போல, கடந்த 27 மாத கால தி.மு.க. ஆட்சியிலும் சாதிய மோதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாதி பாகுபாட்டினால் ஏற்பட்ட பிரச்சினையால் நெல்லை மாவட்டம், நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி தாக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தத் தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு அச்சாரமாக விளங்கக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தேவையான உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மாணவனை தாக்கியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
    • ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் காவல்துறையும் கல்வி துறையும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததினால் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராவை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது அவருடன் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காவல்துறையும் கல்வி துறையும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததினால் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் நடக்கும் மாணவர் அசெம்பிளி கூட்டத்தில் கண்டிப்பாக மாணவ-மாணவிகள் ஜாதி மதம், பேதமின்றி சகோதரத்துவத்துடன் வாழ்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

    பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் வருகை புரிந்து மருத்துவ பரிசோதனை செய்து வருவது பாராட்டுக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

    கடலூர்:

    திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் மாணவன் சின்னத்துரை, சக மாணவர்களால் வெட்டப் பட்டும், அதனை தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருங்கிணைப்பில், பல்வேறு கட்சிகள் சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மனிதநேய வணிகர் சங்கம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

    ×