search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள எச்சரிக்கை"

    • தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
    • தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது.

    இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளவை எட்டிவிட்டது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்போது 123.34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 234 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 867 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

    அதே போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே 84 அடி நீர்மட்டம் உயரம் உள்ள கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனது முழுகொள்ளளவையும் எட்டிவிட்டது. இந்த அணையில் 82.05 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு 32 ஆயிரத்து 867 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிலா ஆற்று தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.


    இன்று காலை 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நீரானது தமிழக -கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த வெள்ளபெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகள் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் காவிரி ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளான முதலை பண்ணை, சத்திரம், நாகர்கோவில், ஊட்டமலை, தளவகாடு ஆகிய பகுதிகளில் கரைகளை தொட்டு சென்று தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் வீடுகளில் சூழ்ந்து காணப்படுவதால், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று இடம் செல்ல முடியாதவர்களை ஒகேனக்கல்லில் உள்ள தனியார் மண்டபங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தடை நீடித்து வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளை போலீசார் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மதியம் 1 லட்சத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நேற்று 71-வது முறையாக 100 அடியை எட்டியது.

    நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை (ஆடி 18) மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு இதுவரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்குக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி (பிலிகுண்டு), தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களிடம் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் காவிரி கரையோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வருவாய்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் காரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    • ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
    • மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தற்போது நீலகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு அதிகரித்தது. இதனால் அதிகாலை 4 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து ஓராண்டுக்கு பிறகு 4 மதகுகள் வழியாக சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் 5 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்ததால் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு மீண்டும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. காலை 6 மணி நிலவரப்படி 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையொட்டி நெல்லித்துறை பத்திரகாளி அம்மன் கோவில், ஓடந்துறை, வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோரத்தில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையிலுள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், நகராட்சி தலைவர் பர்வீன், கமிஷனர் அமுதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    சோலையார் அணை 100 அடியை எட்டியது வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான சோலையார் அணை 5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் அணையாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.

    வால்பாறை 72 மில்லி மீட்டர் மழை அளவும், சின்கோனா 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 47 மில்லி மீட்டர் மழை அளவும், அதிகபட்சமாக சின்னக்கல்லார் 92 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

    • முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்.

    மதுரை:

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3வது கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 20-ந்தேதி அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர் தேக்க பரப்பளவில் நீர் இருப்பு கடந்த 20 நாட்களாக 89 அடிக்கும் மேலாக நீடித்து வந்ததால் அணைக்கு வருகின்ற நீர்வரத்து ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக அணையில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதைத்தொடர்ந்து அணையில் உள்ள ஷட்டர்கள், பிரதான கால்வாய் மற்றும் 9 கண் மதகுகளில் 6 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.92 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 711 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 963 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணைப்பகுதியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 11.8 செ.மீ., மழையும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 10.3 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

    உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீர் ஆதாரமாக உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீர் ஆதாரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை சென்றடைகிறது.

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் மத்தள ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறானது நல்லாறு, பாலாறு உள்ளிட்ட துணை ஆறுகள், ஓடைகளுடன் இணைந்து இறுதியில் கேரள மாநிலத்தை சென்று அடைகிறது. இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் பணியை செய்து வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடிவாரத்தை அடைந்த காட்டாற்று வெள்ளமானது ஆற்றின் 2 கரைகளையும் தழுவியவாறு சென்றது. அப்போது ரெட்டிபாளையம்-பொன்னாலம்மன் சோலை சாலையை அடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் அமராவதி அணையின் பிரதான நீராதாரத்தில் ஒன்றான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளமானது கட்டளை மாரியம்மன் கோவில் அருகே மலைவாழ் மக்கள் அமைத்திருந்த கடைகளை சூழ்ந்தவாறு செல்கிறது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    • இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு மற்றும் அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பருவமழையின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போது ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

    இதுவரை அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றிரவு 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கு 1230 கனஅடிநீர் வருகிறது. இன்றுமுதல் அணையிலிருந்து நீர்திறப்பு 1300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 62.82 அடியாக உள்ளது. அணைக்கு 1906 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2149 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 137 கனஅடி.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    • முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பி காணப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக கேரளா, மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமும் இதே அளவில் தண்ணீர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 139.85 அடியாக உள்ளது. அணைக்கு 2023 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 140 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் 14 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். எனவே வண்டிபெரியாறு, சப்பாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பெரியாற்று கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது 142 அடியை எட்டினால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் 6-வது முறையாக இந்த அளவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக வைகை அணையும் நிரம்பி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2187 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 2319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகையாற்றில் இருகரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 122 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 176.97 கனஅடி. தேக்கடி 1.2, கூடலூர் 0.4, உத்தமபாளையம் 1, சண்முகாநதி 0.8, போடி 0.2, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.

    அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 136 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்து 138 அடியை கடந்தது.

    இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு 2-ம் கட்ட தகவலை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 142 அடியான பின் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்டம் பெரியாற்றில் திறந்து விடப்படும்.

    உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த வருடமும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் 6-வது முறையாக அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2515 கன அடியாக உள்ளது. நேற்று வரை 1867 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 105 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6937 மி.கன அடியாக உள்ளது. தற்போது மழை அளவு குறைந்துள்ள போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4944 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3699 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5720 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய்கள் மூலமாகவும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போதே வைகை அணையின் கரையோரப்பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி கடல்போல் உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முறையே 214 மற்றும் 236 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    • 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
    • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறு, முல்லைக்கொடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதும் தமிழக பகுதிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கேரளாவுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது.

    இதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியார், உப்புத்துறை, சப்பாத்து ஆகிய முல்லைப்பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7405 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியான பின்பு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அதற்கு மேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்ட பெரியாற்றில் திறந்து விடப்படும்.

    தற்போது தொடர்மழை நீடித்து வருவதால் 6-வது முறையாக 142 அடியை எட்டுமா என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் டிசம்பர் மாதத்தில் 142 அடியாக நிலைநிறுத்தலாம் என்று ரூல் கர்வ் நடைமுறை தெரிவித்துள்ளது. ஆனால் அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டிய போதே இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை முதல் அணையை ஒட்டியுள்ள ஷட்டரில் இருந்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கேரள பகுதிக்கு திறக்கப்படும் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே மக்களை பீதியடைய செய்யும் வகையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பட்டது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள்தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 2,270 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,240 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு 4,480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    இதனிடையே, அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக தென்பெண்ணை ஆற்றில் செல்வது தொடர்ந்தவாறு உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 3 முறை சங்குகள் ஒலிக்கப்பட்டு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2693 கன அடி நீர் வருகிறது. தற்போது அணையில் இருந்து 69 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5562 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

    இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கரையோரம் இருந்த மக்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்பதால் கால்நடைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 126.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1855 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4169 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. வரத்து 122 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 368.39 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியிலேயே நிற்கிறது. இதனால் அணைக்கு வரும் 299 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6-ம் நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பிள்ளையார் அருவி, மேகமலை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்வதால் மலைச்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பெரியாறு 1, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 6.2, சண்முகாநதி அணை 14, போடி 2.3, வைகை அணை 30.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 10, பெரியகுளம் 12, வீரபாண்டி 3.8, அரண்மனைப்புதூர் 26.8, ஆண்டிபட்டி 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக கொட்டக்குடி, வராக நதி, சுருளியாறு, வரட்டாறு, மஞ்சளாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நீர் பெருக்கு வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது. இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி அதற்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 125.85 அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒரே அடி உயர்ந்து 126.85 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 980 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 2605 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4018 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 412 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 5-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 35.2, தேக்கடி 46, கூடலூர் 21.2, உத்தமபாளையம் 50.4, சண்முகாநதி அணை 16, போடி 21.3, மஞ்சளாறு 10.4, சோத்துப்பாறை 52, வைகை அணை 23.4, பெரியகுளம் 14, வீரபாண்டி 21.8, அரண்மனைப்புதூர் 12.2, ஆண்டிபட்டி 61.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    ×