search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.

    அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 136 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்து 138 அடியை கடந்தது.

    இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு 2-ம் கட்ட தகவலை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 142 அடியான பின் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்டம் பெரியாற்றில் திறந்து விடப்படும்.

    உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த வருடமும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் 6-வது முறையாக அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2515 கன அடியாக உள்ளது. நேற்று வரை 1867 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 105 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6937 மி.கன அடியாக உள்ளது. தற்போது மழை அளவு குறைந்துள்ள போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4944 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3699 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5720 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய்கள் மூலமாகவும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போதே வைகை அணையின் கரையோரப்பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி கடல்போல் உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முறையே 214 மற்றும் 236 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×