என் மலர்
நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர் மாற்றம்"
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
- பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).
இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.
பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.
தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந்தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி:
திருச்சி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சசிகுமார் (வயது 28). இவரும் திருவெறும்பூர் நெடுஞ்சாலை வாகனத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த சங்கர் ராஜபாண்டியன் (32), நவல்பட்டு போலீஸ் நிலைய போலீஸ்காரர் பிரசாத் (26). ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் கடந்த 4-ம் தேதி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு சாதாரண உடையில் சென்று மது அருந்திவிட்டு, காதலனுடன் முக்கொம்பு பூங்காவுக்கு வந்த துவாக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டினர்.
இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 4 பேரையும் காவலில் எடுத்து இரண்டு நாள் விசாரணை மீண்டும் நேற்று ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்காத ஜீயபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி, பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று திருச்சி சமயபுரம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் விபசாரத்தை தடுக்க தவறிய அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களுக்காக திருச்சி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஆகவும், மங்கள மேடு இன்ஸ்பெக்டர் நடராஜன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அரியலூர் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவினை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
- 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
- விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரக பகுதியில் குட்கா புகையிலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பணபேரம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த விசாரணையின் அடிப்படையில், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவக்குமார் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த சந்தனகுமார் ஆகிய 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு பணி செய்து வந்த பாரதி நகரை சேர்ந்த சேகர்(வயது40) என்பவரை முறைகேடாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து சிவக்குமார் மற்றும் சந்தன குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கும் மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சுரவணன் உத்தரவிட்டுள்ளார்.