search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தேசிய காங்கிரஸ்"

    • ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனை.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற தொலை தொடர்பு ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர், டிஜிஎம் பழனி முருகன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனைகள் மேற்கொண்டதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிலிந்த் தியோராவின் தந்தை முரளி தியோரா 2014ல் காலமானார்
    • காங்கிரஸ் கட்சியுடனான 55 வருட உறவை தியோரா குடும்பம் முடித்து கொண்டது

    காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

    இன்று காங்கிரஸின் முக்கிய பிரமுகரான மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலகினார்.

    யார் இந்த மிலிந்த் தியோரா?

    காங்கிரஸ் கட்சி ஆதரவாளராக நீண்ட காலம் இருந்து வந்தவர் முரளி தியோரா (Murli Deora). மும்பை மேயராகவும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராகவும், கேபினட் மந்திரியாகவும் பதவி வகித்த முரளி தியோரா 2014ல் காலமானார்.

    முரளி தியோராவின் மகன், மிலிந்த் தியோரா.

    47 வயதாகும் மிலிந்த் தியோரா (Milind Deora), தந்தையை போல் காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாக இருந்தார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர்.

    2004ல் தெற்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று, பா.ஜ.க. வேட்பாளரை விட 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    2011ல் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.

    2012ல் கப்பல் போக்குவரத்து துறைக்கான அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

    மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கட்சியின் அமைப்புகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்தார்.

    2019ல் மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

    இன்று, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதன் மூலம் 55 வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடன் இருந்த உறவை தியோரா குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்தது.


    2019லிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத், ஹர்திக் படேல், அஷ்வனி குமார், சுனில் ஜகார், ஆர்பிஎன் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, அல்பேஷ் தாகோர், அனில் ஆன்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விட்டனர்.

    மிலிந்த் தியோராவின் விலகலுடன் 2019லிருந்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை 11 ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து பொறியியல் பட்டம் பெற்றவர் பவ்யா
    • 2018ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பவ்யா நரசிம்ம மூர்த்தி

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதிகள் மார்ச் முதல் வாரம், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

    இத்தேர்தலை சந்திக்க பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.


    கட்சியினர் ஆற்றும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை (communications coordinator) காங்கிரஸ் நியமித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக, பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    யார் இந்த பவ்யா நரசிம்ம மூர்த்தி?

    பவ்யா நரசிம்ம மூர்த்தி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிறந்து வளர்ந்தவர்.


    எம் எஸ் ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பிருந்தும், அரசியலில் ஈடுபட விரும்பி இந்தியாவிற்கு வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2018ல் அக்கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியுடன் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் மாநில மற்றும் மத்திய தேர்தல் அறிக்கையை தயாரித்தார்.


    பெண்கள் நல்வாழ்விற்காக இயங்கும் காங்கிரஸ் கட்சியின் "பிரியதர்ஷினி" அமைப்பில் தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார்.

    காந்திஜியின் சித்தாந்தங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவரான பவ்யா, பா.ஜ.க. கொண்டு வந்த சிஏஏ-விற்கு (CAA) எதிராக கர்நாடகாவில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

    இள வயதில் அரசியலில் நுழைந்தது குறித்து, "அரசியலில் நுழைய விரும்புபவர்கள் தயக்கமின்றி கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அதை தூய்மைப்படுத்த இள வயதினருக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால், இது நுழைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்கிறார் பவ்யா நரசிம்ம மூர்த்தி.

    • மிமிக்ரி செய்கையை ராகுல் படம் பிடிக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது
    • வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் நீங்கள் விவாதிக்கவில்லை என்றார் ராகுல்

    கடந்த டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அலுவல் நேரத்தில் கோஷங்களை எழுப்பினர்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக கூறி அவர்கள் கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டனர்.

    இரு அவைகளிலும் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது வரை 140க்கும் மேல் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று புதிய பாராளுமன்றத்தின் "மகர் துவார்" பகுதியில் பெரும்பாலான எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பேனர்ஜி, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் பேசுவதை போல் மிமிக்ரி செய்து காண்பித்தார். அதை பல எம்.பி.க்கள் நகைச்சுவையுடன் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தியும் தனது மொபைல் போனில் படம் பிடித்தார்.

    இவையனைத்தும் சமூக வலைதளங்களில் பரவியது.

    நேற்று மதியத்திற்கு பின் அவை கூடிய போது, தன்னை மிமிக்ரி செய்ததையும் அதனை வீடியோ படம் எடுத்ததையும் குறித்து துணை ஜனாதிபதி மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்தார்.

    அவையில் இருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் "என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என மூத்த அரசியல்வாதியான உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்" என கூறினார்.

    மேலும், பிரதமருடனும் பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய ஜக்தீப்பிற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி தனக்கு எதிராக தேவையற்ற விமர்சனங்களை கிளப்புவதாக ஊடகங்களை விமர்சித்தார்.

    ராகுல் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    யாரை யார் அவமானப்படுத்தினார்கள்? எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர். ஊடகங்களும் வீடியோ எடுத்தன; நானும் வீடியோ எடுத்தேன். என் வீடியோ எனது மொபைலில்தான் உள்ளது.

    சுமார் 150 எம்.பி.க்கள் அவைக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர். அதை குறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    அதானி குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை. ரஃபேல் குறித்தும் விவாதிக்கவில்லை.

    நாடு முழுவதும் பாதித்துள்ள வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது; அது குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைந்த மனதுடன் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களாகிய நீங்கள் மிமிக்ரி சம்பவம் குறித்து மட்டுமே விவாதிக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிரடி நடவடிக்கையாக 141 எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டனர்
    • சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் நீக்கப்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்

    நடைபெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 13 அன்று மக்களவையிலும், பாராளுமன்ற வளாகத்திலும் நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    ஆனால், அவர்கள் கோரிக்கைக்கு ஆளும் பா.ஜ.க. செவிசாய்க்கவில்லை. மேலும், அவை நடவடிக்கைக்கு எதிராக கண்ணியக்குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார்கள்.

    இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று, ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், சஸ்பெண்டு ஆன எம்.பி.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    போராடி வரும் உறுப்பினர்கள் "ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்" (save democracy) என எழுதப்பட்டிருந்த பேனர்களை தாங்கியபடி கோஷங்களை எழுப்பினர்.

    இப்போராட்டம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே கூறும் போது, "பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். சஸ்பென்ஷன் நடவடிக்கையை நீக்க வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும். நான் துணை ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு விரைவாக பதில் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார்.


    • சிம்ஹாஸ்த மேலா நடைபெற 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது
    • தகாத வார்த்தைகள் பேசியவருக்கு முதல்வர் பதவியா என ஜெய்ராம் விமர்சித்தார்

    மத்திய பிரதேச மாநில சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.

    வெளியான முடிவுகளின்படி 230 இடங்களில் 163 இடங்களில் பா.ஜ.க. வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.

    இத்தேர்தலுக்கான பிரசார காலம் முழுவதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையும் ம.பி.க்கான தேர்தல் அறிக்கையை மட்டுமே பிரசாரத்தில் முன்னெடுத்த பா.ஜ.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூறாமலே தேர்தலில் களம் இறங்கி வென்றது.

    வெற்றியை தொடர்ந்து இதுவரை முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், ஒரு புதிய முகம் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

    நேற்று, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உஜ்ஜயின் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் அடுத்த முதல்வர் என அக்கட்சி அறிவித்தது.

    ம.பி.யின் உஜ்ஜயின் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து திருவிழா "உஜ்ஜயின் சிம்ஹாஸ்த மேலா." இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்காக 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், விவசாய நிலங்கள் எனும் பிரிவிலிருந்து குடியிருப்புக்கான நிலங்கள் என யாதவ், யாதவின் மனைவி, யாதவின் சகோதரி ஆகியோர் பயன்பெறும் வகையில் திட்டம் மாற்றப்பட்டதாக நவம்பர் மாத தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது.

    மேலும், இது குறித்து மோகன் யாதவ் தகாத வார்த்தைகளால் பேசுகின்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

    இந்நிலையில், மோகன் யாதவ் முதல்வராக பா.ஜ.க.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஜெய்ராம் பதிவிட்டிருப்பதாவது:

    தேர்தல் முடிவுகள் வெளியான 8 நாட்களில் ம.பி.யின் முதல்வராக உஜ்ஜயின் நகர வளர்ச்சி திட்டத்தில் பெருமளவு நிலங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிம்ஹாஸ்தாவிற்காக ஒதுக்கப்பட்ட 872 ஏக்கர் நில திட்டம் யாதவ் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டது. பேசக்கூடாத வார்த்தைகளை யாதவ் பேசிய வீடியோவும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இதுதான் பிரதமர் மோடி ம.பி.க்கு அளிக்கும் உத்தரவாதமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • 2018ல் கே.சி.ஆர். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
    • கே.சி.ஆர். குடும்பத்தினரால் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி உள்ளது என்றார் ராகுல்

    தெலுங்கானாவில், வரும் நவம்பர் 30 அன்று அம்மாநில சட்டசபையின் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள், டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும்.

    கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் - தற்போது பி.ஆர்.எஸ். என பெயர் மாற்றப்பட்டுள்ள (பாரத் ராஷ்டிர சமிதி) அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வென்றது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சியமைத்தார்.

    தற்போது அவருக்கு எதிராக தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இக்கட்சிகளை தவிர அசாதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சியும் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கம்மம் மாவட்ட பினபாகா மற்றும் வாரங்கல் மாவட்ட நரசம்பேட்டை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு தேடி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் வெற்றி எனும் புயலை எதிர்கொள்ள கே.சி.ஆர். தயாராக வேண்டும். மக்களாட்சியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. தெலுங்கானாவில் நிலவும் ஊழல் மக்களை சலிப்படைய செய்து விட்டது. பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள அனைத்து துறைகளையும் தன் குடும்பத்தின் வசம் வைத்து கொண்டு ஊழலை வளர்த்திருக்கிறார், கே.சி.ஆர். காங்கிரஸ் இலவசமாக ஏழைகளுக்கு அளித்த விவசாய நிலங்களை கே.சி.ஆர். அரசு டிஜிட்டல்மயமாக்கல் எனும் பெயரில் பதிவுகள் இல்லாமல் அழித்து விட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆர். குடும்பம் ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள செல்வத்தை மீட்டு மக்களுக்கு செலவு செய்வோம். தனி தெலுங்கானா அமைய பாடுபட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான். ஐதராபாத் நகரை "மென்பொருள் துறை தலைநகர்" (IT Capital) என மாற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகியவை மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளன.

    தெலுங்கானாவில் மக்களாட்சி அமைந்ததும், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    • அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் "மோடி" என உள்ளது என்றார் ராகுல்
    • 2023 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ராகுல் எம்.பி. பதவியை இழந்திருந்தார்

    கடந்த 2019ல் இந்திய பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்று கர்நாடகாவில் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி, மோடி, மோடி என ஏன் உள்ளது? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..." என கருத்து தெரிவித்திருந்தார்.

    ராகுலின் கருத்து தங்கள் மோடி இனத்தையே அவமதிப்பதாக கூறி 2019, ஏப்ரல் 16 அன்று பா.ஜ.க.வை சேர்ந்த பூர்ணேஷ் மோடி (58) எனும் குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர், கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றை குஜராத் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பானது.

    அதனை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் அவர் குற்றவாளி என தீர்ப்பு உறுதியாகி 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனது.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராகுல் பாராளுமன்ற உறுப்பினரானார். இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வழக்கினால், 2023 மார்ச் 24 முதல் 2023 ஆகஸ்ட் 7 வரை ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தாத்ரா நகர் மற்றும் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும், கோவா, டமன் மற்றும் டியு யூனியன் பிரதேசத்திலும் உள்ள பா.ஜ.க.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை பொறுப்பாளராக பூர்ணேஷ் மோடியை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

    இப்பதவி பூர்ணேஷ் இதுவரை ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
    • காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்

    ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

    முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.

    நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    "இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"

    இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
    • காந்தியின் கோட்பாடுகளே அரசியல் அமைப்பின் அடித்தளம் என்றார் பிரியங்கா

    கடந்த அக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

    இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.

    ஜோர்டானின் தீர்மானத்திற்கு ஐ.நா. உறுப்பினர் நாடுகளில் 120 நாடுகள் ஆதரவும், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

    இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    "இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. ஆனால், அது குறித்து தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் காசாவில் கொல்லப்படுவதும் கவலையளிக்கும் செயல். இதனால் இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது" என இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து ஐ.நா. சபைக்கான இந்திய துணை நிரந்தர தூதர் யோஜ்னா படேல் (Yojna Patel) தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கண்டித்துள்ளார்.

    அவர் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

    'தன் கண்ணை பிடுங்கியவனின் கண்ணை பிடுங்க வேண்டும் எனும் எண்ணமும், செயலும், உலக மக்கள் அனைவரையும் குருடர்களாக்கி விடும்' என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருந்தார். அகிம்சையும், உண்மையுமே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளம். உணவு, குடிநீர், மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் அனைத்தும் காசா பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஜோர்டானின் போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் பங்கேற்காததன் மூலம் நம் நாடு எந்த உயர்ந்த எண்ணங்களை தாங்கி பல காலங்களாக நிலை நிற்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இப்போது இந்தியா எடுத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு. இந்த முடிவிற்காக ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    • மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ளார் சோனியா காந்தி
    • கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் பொது செயலாளருமான  பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் சார்பில் அக்கட்சி எம்.பி. கனிமொழி முன்னிலையில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு சோனியா மற்றும் பிரியங்கா, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    முன்னதாக கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுமாறு நிர்வாகிகளுக்கு சோனியா அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

    சுமார் 5 வருடங்கள் கழித்து சோனியா, தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×