search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களுடன் முதல்வர் திட்டம்"

    • ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
    • மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் மூலமாக 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2-வது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, நாகை, வேலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.

    இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (11-ந்தேதி) ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.

    இதை தொடர்ந்து 20 புதிய நகர பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் விழா மேடை வந்தடைகிறார்.

    இதனை அடுத்து கலெக்டர் சாந்தி வரவேற்புரையாற்றுகிறார்.

    காலை 11 மணிக்கு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கலெக்டர் சாந்தி நினைவு பரிசுகளை வழங்குகிறார். விழா அரங்கில் திட்டப்பணிகளின் குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து 11.10 மணிக்கு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.20 மணிக்கு பேரூரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வரை சாலையில் வழிநெடுங்கிலும் தொண்டர்கள் தி.மு.க. கட்சி கொடியை கட்டி வருகின்றனர்.

    • முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு
    • புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி அன்று தருமபுரிக்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11-ந் தேதி காலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    பாடு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

    ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

    குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதியன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    • மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் பெறும் மனுக்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
    • மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகரன்.

    இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கடந்த 1988-ம் ஆண்டில் 21 செண்ட் நிலத்தை கிரயம் வாங்கினார். பின்னர் இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யும் நடவடிக்கையில் சந்திரசேகரன் ஈடுபட்டு வந்தார். ஆனால் 35 ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இனி நம்மால் பட்டா மாற்றம் செய்யவே முடியாது என்ற விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைதீர்க்கும் திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.

    அதன்படி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வலையப்பேட்டை வருவாய் கிராமத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்திலும் நடைபெற்றது. இதனை அறிந்து சந்திரசேகரன் தனது 35 ஆண்டுக்கால எதிர்பார்ப்பான பட்டா மாற்றம் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார்.

    அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கடந்த 2-ந் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் தாலுகா அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது. இந்த தகவலை இணையத்தின் மூலம் அறிந்து விவசாயி சந்திரசேகரன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

    அதாவது முகாமில் வழங்கிய விண்ணப்பம் மீது அடுத்த 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கபட்டுள்ளது.

    35 ஆண்டுக்கால பிரச்சினையை வெறும் மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் தீர்வு கண்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதை எண்ணி அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    இதனால் அவர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்புகள், பயன்கள் குறித்து மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

    • மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    இந்த புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை போலீசாருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.
    • முகாம்களில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி அனைத்து மனுக்களுக்கும் 100 நாளில் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.

    அதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை திறம்பட கையாண்டு அவற்றை நிறைவேற்றிடும் வகையில், முதல்வரின் முகவரி துறை என்ற தனித்துறையை உருவாக்க உத்தரவிட்டார்.

    இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    தற்போது திராவிட மாடல் ஆட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே பொதுமக்களின் பிரச்சனையை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது தான். அதாவது மனுக்கள் வாங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும்.

    இந்த உன்னதமான திட்டத்தின் தொடக்க விழா கோவை மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ள இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு,குறு, நடுத்தர தொழில்கள் போன்ற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெறுவதற்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

    முதற்கட்டமாக வருகிற 18-ந்தேதி முதல் வருகிற ஜனவரி 6-ந்தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படும்.

    இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடிவுற்றவுடன், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31-ந்தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து மனுக்களை பெற வசதியாக இருக்கைகள் போடப்பட்டு இருந்த காட்சி.


    மக்களுடன் முதல்வர் திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் நடத்தப்படும். இந்த முகாம்கள் முடிவடைந்த பின்னர், அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.

    இந்த முகாம்களில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அனைவரும் ஒரே குடையின் கீழ் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள்.

    முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

    முதலமைச்சர் இந்த திட்டத்தை கோவையில் தொடங்கி வைக்க கூடிய அதே நேரத்தில் அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் இந்த முகாம்களை தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த முகாம்களில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளை பெற்றுக்கொள்ளவும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும், எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காணவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    • 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.
    • திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள்.

    நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.

    * கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

    * விடியல் பயணம்

    * முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

    * புதுமைப்பெண் திட்டம்

    * இல்லம் தேடிக் கல்வி

    * இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

    * நான் முதல்வன்

    - போன்ற நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட 'கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.

    இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா!

    உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது திராவிட மாடல்-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே!

    அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது மக்களுடன் முதல்வர் திட்டம்!

    இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்...

    அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    ×