என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருநெல்வேலி மாவட்டம்"
- தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
- வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்கரலிங்க புரம். இங்குள்ள 2-வது தெருவில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரும் கண்பார்வை இழந்தவர்கள்.
ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்வினை அடியோடு புரட்டி போட்டு உள்ளது.
இவர்கள் வாழ்ந்த ஓட்டு வீடு ஏற்கனவே லேசாக சேதம் அடைந்து காணப்பட்ட நிலையில் தொடர் மழைக்கு முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. தொடர் மழையின் போது வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தது தெரியாமலும், மழைநீர் உள்ளே வருவது தெரியாமலும் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளனர்.
தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விழக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்போது அந்த வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
தொடர்மழை காரணமாக ஏற்கனவே தங்களுடைய ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி விற்பனை செய்ய முடியாத நிலை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய வீடு என தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர்.
தொடர் மழையின் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து, வீட்டையும் இழந்து பரிதவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மாற்றுத்திறனாளி தம்பதியினர்.
- மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
- முதல் 2 நாட்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் சூழ்ந்திருந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 17-ந் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் ஒருசில இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வெள்ளத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் தூத்துக்குடி வந்து மின் இணைப்பு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் தூத்துக்குடியில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சி ஊழியர்கள் தூத்துக்குடி வந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-
தூத்துக்குடியில் வெள்ள நீரை அகற்றுவதற்காக சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சியை சேர்ந்த 600 பம்பிங் ஆப்ரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வந்தனர்.
அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட மீட்பு குழுவினருடன் சேர்ந்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகரில் வடக்கு, மேற்கு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மாநகரில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி சவாலாக இருந்தது. எனினும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்கள், அதிக சக்தி கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது மாநகரில் 80 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த பம்பிங் ஆப்ரேட்டர்கள் கூறும்போது, முதல் 2 நாட்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் சூழ்ந்திருந்தது. வடிகால் பகுதிகளில் பல இடங்களில் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவது கடினமாக இருந்தது. மேலும் மாநகர் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் தண்ணீரை எங்கிருந்து பம்பிங் மூலம் வெளியேற்றுவது என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனினும் கடின முயற்சிக்கு பின்னர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டது என்றனர்.
தூத்துக்குடி மக்கள் கூறும்போது, மாநகரில் பல இடங்களில் தண்ணீர் வடிந்த நிலையிலும் இன்னும் சில இடங்களில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் தான் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், வேலைக்கும் சென்று வருகிறோம். வரும் புத்தாண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
- 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.
இடைவிடாது பெய்த மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
குறிப்பாக தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நெல்லை- திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
2 மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைபட்டது. இதைப்போல மின்வினியோகம், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ள சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார்.
மேலும் மத்திய குழுவினரும், நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சாலை, மின்வினியோகம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தூத்துக்குடி நகரில் புதிய பஸ்நிலைய பகுதிகள், குறிஞ்சி நகர், இந்திராநகர், பச்சாது நகர், பாரதிநகர், தங்கமணிநகர், காந்திநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.
சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகரில் பல இடங்களில் இயல்புநிலை திரும்பினாலும் வெள்ளம் வடியாத பகுதிகளில் 9-வது நாளாக இன்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
தொடர்ந்து வெள்ளத்தில் நடப்பதால் கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்தப்பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
புன்னக்காயல் உள்ளிட்ட சில கிராமங்களில் 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் பலர் வீடுகள் இழந்தும், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
- 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
- லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமானது தாமிரபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடியது.
இந்த வெள்ளத்தினால் ஆற்றில் குடிநீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணறுகள் மூழ்கியது. பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரையிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கி அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் பல்வேறு வகையான கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் எடுத்துச்செல்ல ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.
தொடர்ந்து வெள்ளம் சற்று தணிந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளில் மோட்டார்கள் பழுது பார்க்கப்பட்டு குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக ஆறுகளில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்த கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தொழில்நுட்ப குழு வரவழைக்கப்பட்டது. அதன்படி 9 பேர் கொண்ட குழு வந்து 2 நாட்களாக குடிநீர் திட்டங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் உறைகிணறுகளை சுற்றிலும் நீர் அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொழில்நுட்ப குழுவினர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு பணி செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி பாளை சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உரை கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் சிவந்தி பட்டியில் உள்ள நெடுஞ் சான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் அதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, வேளாண்துறை, நீர்வளத் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து சீரமைப்பு பணிகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சீவலப்பேரி பகுதியில் ஆய்வு செய்த பின்னர் தற்போது சிவந்திபட்டியில் குளம் உடைந்த பகுதியை ஆய்வு செய்துள்ளேன்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 328 உடைப்புகள் இதுவரை சரி செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள குளங்களில் உடைப்புகளை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவந்திப்பட்டியில் ஏற்பட்டுள்ள குளம் உடைப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குளங்கள் அடைக்கப்பட்டு சரி செய்யப்படும். நீர்வளத் துறை மூலமாக மீண்டும் இந்த குளங்களுக்கு அந்தந்த அணைகள் மூலமாக தண்ணீர் நிரப்பி விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.
சாலைகளை பொறுத்த வரை இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 175 இடங்களில் சாலைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 150 இடங்களில் சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். அதன் பின்னர் சாலைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.
அதேபோல் மின்சார இணைப்புகளை பொருத்த வரை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று 2 இடங்களில் மட்டும் வெள்ளம் வடியாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் மின்விநியோகம் கொடுக்க முடியாமல் உள்ளது.
இதுபோல் தூத்துக்குடி பகுதியிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்விநியோகம் வழங்கப்பட வேண்டி உள்ளது. ஏரலில் இரவு முழுவதும் மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையிலும் அனைவரும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு மின் வினியோகம் வழங்கி உள்ளனர்.
இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், கால்நடை துறை உள்ளிட்டவையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 2 மாவட்டங்களிலும் உள்ள 101 கூட்டு குடிநீர் திட்டங்களில் 71 திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இன்னும் 36 திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளை பொறுத்தவரை இதுவரை நெல்லை மாவட்டத்தில் 13 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
அதன் பின்னர் முழுமையான விவரம் தெரியவரும். இது தவிர நெற்பயிர்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்தது தொடர்பான கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறு வணிகர்கள், தொழிற்சாலை உள்ளிட்டவர்களின் பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கும். இது போன்ற வணிகர்கள் மற்றும் தொழிற் சாலை நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக உதவுவதை தவிர வங்கிகள் மூலமாகவும், காப்பீடு திட்டங்கள் மூலமாகவும் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த கால கட்டங்களில் கேரளாவுக்கு நிவாரண பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து அதிக உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது கேரளாவில் இருந்து நீர்வளத்துறைக்கு டெக்னிக்கல் குழு இங்கு வந்துள்ளது. அவர்கள் குடிநீர் சப்ளை பணிகளுக்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்.
இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தற்போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.
- தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.
திருச்சி:
பெரியார் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் பெரியார். சனாதானத்தை நமது பகை தொடர்ந்து வேரறுப்பது மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகுக்கு உணர்த்திய அவரது அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதான சக்திகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை, அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது.
மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். வருகிற 29-ந் தேதி தமிழக, முழுவதும் ஏ.வி.எம். எந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு திருச்சியில் நடைபெற இருந்த 'வெல்லும் சனநாயக மாநாடு' தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.
முதலமைச்சரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம். அமைச்சர் பொன்முடி வழக்கை முனைப்போடு எதிர்கொள்வதற்கு தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள்.
பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சி.ஏ.ஜி. மெகா ஊழல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் இந்த ஆட்சி ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது.
ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய 900 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி. ஆனால் பாதிப்புக்கு ஏற்றார் போல புயல் மழைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.
அதை பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவே இல்லை. ரூ.21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி ஒரு பைசா காசு கூட வழங்கவில்லை.
வழக்கம் போல ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்வது போன்ற முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல தொணியை ஏற்படுத்துகிறார். எந்த வகையில் ஏற்புடையது அல்ல.
இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
- தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஒரு வேளை உணவு, குடிநீர், பால், உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நானும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் அவர்களை தினசரி சந்தித்து எங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இது. வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை எடை போட்டு பார்க்க கூடாது.
அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை விட அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நெல்லை வந்தார்.
அவர் பாளை வெள்ளகோவில் பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுக்கக்கூடிய 6000 ரூபாயை ரேசன் கார்டு அடிப்படையாகக் கொண்டு கொடுக்காமல் கியாஸ் சிலிண்டர் முகவரிகளை கணக்கில் கொண்டு அதன்படி கொடுக்க வேண்டும்.
மேலும் நிவாரணமாக கொடுக்கக்கூடிய ரூ.6 ஆயிரம் என்பது பொதுமக்களுக்கு போதாது. எனவே அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் நேரடியாக சென்று விசாரித்து பாதிப்பை அறிந்து பொதுமக்களிடம் கேட்டு கொடுக்க வேண்டும். வானிலை மையத்தை தமிழக அரசு குறை சொல்லக்கூடாது. உலக அளவில் சவால் விடும் வகையில் இந்தியாவின் வானிலை மையம் நவீன கருவிகள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது.
- வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்து ஏற்பட்ட வெள்ளம் கடந்த ஒரு வாரமாகியும் இதுவரை பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. இன்றளவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அங்கு படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
மாவட்டத்தில் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி பிரதான சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆழ்வார்தோப்பு, ஏரல், பழைய காயல், புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தனித்தீவுகளாக காட்சியளித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கிராம சாலைகள், நகர்ப்புற சாலைகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட வைகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவற்றை கணக்கெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதன்பின்னர் பாலங்கள், சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு சில கிராமங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் பொதுமக்கள் இருளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் வரையிலும் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் ஆய்வு செய்து வெள்ள நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொன்னன்குறிச்சி, வல்லநாடு, முறப்பநாடு, அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மின்மோ ட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி பல்லாயிரம் கன அடி நீர் வீணாக ஆற்றில் கலக்கும் சூழ்நிலையிலும் அப்பகுதி மக்கள் குடிக்க ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
இதனால் ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்யும் பணி, கோரம்பள்ளம் ஆறு, சிற்றாறு பகுதிகளில் பாதிப்பை சரி செய்யும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி, கோவை, மதுரை மண்டலங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்கள், 20 உதவி செயற்பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு முழுமையாக இயல்புநிலை ஏற்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், இது தவிர களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்டவைகள் வெள்ளத்தால் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களாக வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னர் கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன்பின்னரே வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.
இதற்கிடையே வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த கிராமங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விநியோகம் சீரடைந்துள்ளது. மாவட்டத்தில் இன்று சுமார் 110 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
- பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது.
- பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்களாக விடாமல் பெய்த பெரு மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக மாறின. மழை ஓய்ந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏரல் பகுதியில் பாலம் உடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அங்கு தற்காலிகமாக மாற்று சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதே போல ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில், 84 இடங்களில் சாலைகள் செப்பனிடபட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர், பாளையங்கோட்டை சாலையில் 3 இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தன. தற்போது 2 இடங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் 3 மீட்டர் நீளத்திற்கு சாலை உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனை சீரமைக்க பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.
ஏரல் பாலமும், ஆத்தூர் பாலமும் ரூ.19.94 கோடி ரூபாய் மதிப்பில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன. அணுகு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் உறுதியாக இருக்கிறது.
நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது. அதில், ஒரே ஒரு தூண் மட்டுமே கீழே இறங்கி உள்ளது. என்ஜினீயர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப குழுவை உடனடியாக வரவழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரைப்பாலம் வழியே வாகனங்கள் செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் மழை பெய்ததால் சாலைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 46, தூத்துக்குடி மாவட்டத்தில் 112, தென்காசி மாவட்டத்தில் 13, விருதுநகர் மாவட்டத்தில் 13, நாகர்கோவிலில் 5 சாலைகள் என நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரை ரூ.1000 கோடி அளவுக்கு சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 65 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
- வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிகன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.
6 நாட்கள் ஆகியும் இன்று வரை சில பகுதிகள் இன்னும் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீளவில்லை. அதில் புன்னக்காயல் கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலுக்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி கரையோர கிராமமான இங்கு கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புன்னக்காயல் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 அடிக்கும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் தற்போதும் சில பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் புன்னக்காயலில் மட்டும் இன்று வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
இதனால் அங்கு செல்ல முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்ல முடியாமல் புன்னக்காயல் தனித்தீவாக காட்சியளிக்கிறது.
பலத்த சேதம் அடைந்துள்ளதால் இன்று வரை அங்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் கடந்த 6 நாட்களாகவே இருளில் தவித்து வருகிறார்கள்.
வெள்ளத்தில் பல வீடுகள் முழுவதும், பகுதியாகவும் இடிந்து உள்ளது. தற்போது வெள்ள நீர் குறிப்பிட்ட அளவு வடிந்து இருந்தாலும் பொதுமக்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.
வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு அருகில் உள்ள திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியன் பட்டிணத்தில் இருந்து படகுகள் மூலம் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் வடிந்த பகுதியில் வீடுகளில் சேறும், சகதிமாக காணப்படுகிறது. எனவே வீடுகளை பாராமரிப்பு செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
10 அடி மட்டத்திற்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த டி.வி. மிக்சி, கிரைண்டர் என அனைத்து பொருட்களும் நாசமாகின. இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, கன மழை எங்கள் கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது. தனித்தீவில் இருப்பது போல் நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எனவே மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி நாங்கள் மீண்டும் வீடுகளில் குடியேற வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது. எங்கள் வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்து விட்டது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்