என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருத்துக்கணிப்பு"
- சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் உள்ளது.
- நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியானது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் [78 வயது] ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகள்
இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இழுபறி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அட்லஸ் இன்டெல் போல்
குறிப்பாக முந்தைய கருத்துக்கணிப்புகளை போலல்லாது அட்லஸ் இன்டெல் போல் நிறுவனம் சார்பில் கடந்த நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப் 49 சதவீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 47.2 சதவீத ஆதரவு பெற்றுள்ளார். எனவே இருவருக்கும் இடையே 1.8 சதவீத வித்தியாசம் மட்டுமே உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.
ராய்ட்டர்ஸ் / இப்சோஸ்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் வெளியிட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
கடந்த வாரம் அக்டோபர் 29 ஆம் தேதி ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கடைசியாக வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 1 சதவீத வித்தியாசத்தில் டிரம்பை விட முன்னிலையில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு சற்றே குறைந்துள்ளதையும் பார்க்க வேண்டி உள்ளது.
நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் உள்ளதாக தெரியவருகிறது. அரிசோனாவில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
7 கோடி பேர்
50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். அதன்படி 7 மாநிலங்களிலும் சுமார் 40 சதவீத வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.
அவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதேசமயம் டிரம்ப்க்கு வாக்களிக்பவர்கள் அதிகம் பேர் இன்றைய தினம் நடக்கும் நேரடி வாக்குப்பதிவிலேயே தங்களது வாக்குகளை செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
இருவருக்கும் இடை சொற்ப சதவீதங்களே வாக்கு வித்தியாசம் உள்ளதால் கடைசி நேரத்தில் நிலைமை யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது.
- கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க தனது ஆதரவை தெரிவித்தார்.
கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை பெற்றார்.
இதன்மூலம் அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட் டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்று உள்ளார். டிரம்புக்கு 42 சதவீத ஆதரவு உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் டிரம்புக்கு எதிராக அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டதில் இருவரும் சம நிலையுடன் இருந்தனர்.
தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகி உள்ள நிலையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோபைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளராக கமலா ஹாரிஸ் உள்ளார்.
- இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
- அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகவும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்.
எனவே இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE - உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.
அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் அதிபர் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.
அதேசமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.
ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது.
- கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
- ரிஷி சுனக்கின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன
பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த ஜூன் 12 முதல் 14 வரை Savanta நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் இதழில் வெளியானது. அதில் தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த கெயர் ஸ்டாமருக்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சண்டே டைம்ஸ் இதழில் வெளியயான SURVATION நிறுவனம் மே31 முதல் ஜூன் 13 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும்(46%) என்றும், ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி வெறும் 72 இடங்களைப் பிடிக்கும் (24%) எனவும் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 இடங்கள் வெற்றி பெற்றிருந்ததே குறைந்த பட்ட எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது.
சண்டே அப்சர்வர் இதழில் வெளியான OPINIUM நிறுவனம் ஜூன் 12 முதல் 14 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், தொழிலாளர் கட்சி 40% இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23% இடைகளைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும்.
- காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியலமைப்பு விதி 370 ஐ கடந்த 2019 இல் மத்திய பாஜக அரசு நீக்கியது. வெளி மாநிலங்களை சேர்த்தவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்கக்கூடாது உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியல் ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் பொதுமக்களிடையேயும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு கடும் எதிரிப்பு கிளம்பியது.
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். எனவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று (ஜூன் 4) நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் 11 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 இடங்களுள் 4 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. 1 இடத்தில பாஜவின் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் JKNC தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பிரமுல்லா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். மேலும் அனந்தக் ராஜௌரி தொகுதியில் ஜம்மு காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதலவரும் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த மெகபூபா மூப்தி முன்னிலையில் உள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி 5 இல் 2 முதல் 3 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலை 9.00 மணி நிலவரப்படி பாஜக பின்னிலையில் உள்ளது.
- ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நடந்து முடித்த பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் முன்னிலை நிலவரங்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இதனைக் காங்கிரஸின் இந்தியா கூட்டணி மறுத்துள்ளது. பொய்யான கருத்துக்கணிப்புகளை பாஜக மக்களிடம் திணிக்கிறது என்றும் கருத்துக்கணிப்புக்கு நேரெதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் வடக்கில் முக்கிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலை 9.00 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக பின்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 60 முதல் 71 இடங்களை பாஜக வெல்லும் என்றும் இந்தியா கூட்டணி 10 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 20 வரை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 22 முதல் 35 இடங்களை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த கணிப்புகளுக்கு நேர் மாறாக பாஜக கூட்டணி இந்த 3 மாநிலங்களிலும் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடப்பது கவனிக்கத்தக்கது.
- நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
- மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான 4-ந்தேதிக்கு பிறகு ராகுல்காந்தி தியானத்துக்கு சென்றுவிடுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
'ஜூன் 4-ந்தேதி மாலை, இளவரசரும்(ராகுல் காந்தி) தியானத்திற்குச் செல்வார்.குகையைத் தேடும் பணி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, பிரதமர் மோடி தேசிய ஒற்றுமையின் உச்சம். காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோவில் கட்டியது. கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டுதல், முத்தலாக் நீக்கம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல். முழு உலகிலும் இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டியது உள்ளிட்டவை யெல்லாம் சாதாரண சம்பவங்கள் இல்லை.
இதனால்தான் பிரதமர் மோடி மீது இறைவனின் மகத்தான கருணை இருப்பதாக நான் எப்போதும் கூறுகிறேன். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தவுடன், அசுர சக்திகளை அழிக்க வேண்டும் என்பதற்காக ஆன்மிக பலம் பெற கன்னியாகுமரிக்கு தியானம் செய்யச் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிடவில்லை.
அதிகாரம் வருவதும் போவதும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை உணர்கிறார்கள். மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள் என்றார்.
- அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
- அ.தி.மு.க. தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து கவலையில் உள்ளனர்.
சென்னை:
நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலில் இந்திய அளவில் பாரதீய ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும் தமிழ கத்தில் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 170 இடங்கள் தான் கிடைக் கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் பரபரப்பாக ஒளிபரப்பப் பட்டன.
தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந் தது.
காரணம் அ.தி.மு.க. இந்த முறை பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென பா.ம.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்தத்தது.
இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்து போட்டி யிட்டது. எனவே அ.தி.மு.க. கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கேற்ப நேற்று வெளியான இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 26 முதல் 30 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 முதல் 8 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
சி.என்.என். நியூஸ் 18 கருத்து கணிப்பில் தி.மு.க. கூட்டணி 36 முதல் 39 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 1 முதல் 3 இடங்களிலும் வெற்றி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
டி.வி.9 கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 4 இடங்க ளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.
தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு டி.வி.யிலும் வெளியான கருத்துக் கணிப்பை பார்க்கும் போது அ.தி.மு.க.வுக்கு அதிகபட்சம் 8 இடங்கள், குறைந்த பட்சம் 2 தொகுதிதான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து கவலையில் உள்ளனர். ஆனாலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில, "கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும்" என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அரசியலை தீர்மானித்த அ.தி.மு.க. இப்போது இவ்வளவு பல வீனமாகி விட்டதே என்று அ.தி.மு.க. தொண்டர்கள் புலம்புவது கேட்க முடிந்தது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்து கடுமையாக உழைத்தாலும், கூட்டணியை சரியாக அமைக்காமல் கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் கட்சிக்காரர்கள் கூறி வருகின்னர்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன், சசிகலா என 4 அணியாக இப்போது காட்சியளிப்பதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ள தாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் கட்சியின் எதிர்காலம் ஒன்றாக இருக் கும் என்றும் பேசி வருகின்ற னர்.
ஆனால் அதே சமயம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கால் ஊன்ற முடியாது என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இப்போது அக்கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளதை அறிந்து பா.ஜனதாவினர் குதூகலம் அடைந்துள்ளனர்.
அண்ணாமலையின் உழைப்பு பிரதமர் மோடி யின் பிரசாரம் பா.ஜனதா கட்சியை வளர்ச்சியை நோக்கி கொண்டு சென் றுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது 4-ந்தேதி தெரிந்து விடும்.
அதன் பிறகுதான் தி.மு.க., அ.தி.மு.க.வில் என்னென்ன நடவடிக்கைகள் இருக்கும் என்பது தெரிய வரும்.
- 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
- வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.
மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ந்தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
- கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது.
- மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்.
சென்னை:
2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பா.ஜ.க. தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியா கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 5 முதல் 23 வரை 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. கடந்த பாராளுமன்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் இந்த எண்ணிக்கை 335-ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, குஜராத் (26), மத்திய பிரதேசம் (29), ராஜஸ்தான் (25), அரியானா (10), டெல்லி (7), உத்தரகாண்ட் (5), இமாச்சல பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகளில் 17 இடங்களையும், ஜார்க்கண்டில் 14-ல் 12 தொகுதிகளிலும், ஒடிசாவில் 21-ல் 10 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள அசாமில் 14 தொகுதிகளில் 10 இடங்கள் அக்கட்சியின் வசமாகும். மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 21 இடங்களைப் பெறும் என்று இந்தியா டி.வி-சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.
- மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கொங்கு மண்டலம் எனப்படும் கோவை பகுதி அ.தி.மு.க. வுக்கு செல்வாக்குள்ள பகுதி. ஒவ்வொரு தேர்தலிலும் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கோவையில் பா.ஜனதா வென்றது. அதன் பிறகு அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கோவை தெற்கு தொகுதியை கைப்பற்றியது.
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி யாருக்கு சாதகமாக இருக் கும் என்று 'நியூஸ் கிளவுட்' என்ற தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி முழுக்க ஏழை, நடுத்தரம், பணக்காரர்கள் எனவும், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனவும், பல்வேறு சாதியினரிடேயும் மொத்தமாக சேர்த்து 1596 பேரிடம் கருத்து கேட்டு உள்ளார்கள்.
இதில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 663 வாக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 593, அ.தி.மு.க. கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது.மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த கருத்துகணிப்பின் முடிவு பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. பா.ஜ.க.வின் இந்த அபார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை, பண்பு, அவரின் தலைமையில் பா.ஜ.க. என்ற காரணங்கள் ஒரு பக்கம் உள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க. சார்பாக கோயம்புத்தூர் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் தி.மு.க.வினரின் ஊழல், கறைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை ஆகியவையும் உள்ளது.
1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என தி.மு.க., விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் ஆவேசமடைகின்றனர்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வினரும் தி.மு.க.விற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பேசி வருவதும் கோவை பகுதியில் அ.தி.மு.க. செல்வாக்கு சரிவிற்கு மிகமுக்கிய காரணம் ஆகும்.
மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது ஆகியவையும் தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.
தொடர்ந்து அண்ணாமலையும் தி.மு.க.வின் ஊழல் பட்டியல்களை தி.மு.க. பைல்ஸ் என தொடர்ந்து வெளியிட்டு வருவது பொதுமக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் அனுமர் வால் போல் நீள்கிறது. இது கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.
அதே சமயத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களோடு மக்களாக, என் மண்-என் மக்கள் நடைபயணத்தை மேற் கொண்டதும் கோயம்புத்தூர் மக்கள் மனதில் பா.ஜ.க.வின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.
மேலும் கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தர வேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்க மறுத்து, வாய் மூடி மவுனம் காப்பதும், தி.மு.க. கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதையும் கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டி உள்ளது.
கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை-சென்னை, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இ.எஸ்.ஐ. மருத்து வமனையை மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது என கோயம்புத்தூரை மையப்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு திட்டங்களை அறிவித்ததும் கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் பா.ஜ.க. வின் செல்வாக்கு உயர காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்