என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் முறைகேடு"

    • பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது.
    • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார்.

    புதுடெல்லி:

    நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து வருகிறது.

    இந்த மோசடியை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது உள்ளிட்ட அதிரடிகளை தொடர்ந்து வருகின்றனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்திருக்கிறது. இவை ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதில் பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஜார்கண்டின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இவ்வாறு விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டார்.

    பீகாரின் நாலந்தாவை சேர்ந்த இவர் தலைநகர் பாட்னா அருகே அதிகாரிகளிடம் சிக்கினார். இவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார்.

    கைது செய்யப்பட்ட ராகேஷ் ரஞ்சன் பின்னர் பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ராகேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாட்னா மற்றும் புறநகரில் 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    முன்னதாக பீகார் மற்றும் ஜார்கண்டில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பல்வேறு ஆதாரங்கள மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது.

    நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சி.பி.ஐ.யிடம் சிக்கியிருப்பது இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

    • நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர்.
    • 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை சுமார் 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் 12 பேரை சிபிஐ கைது செய்த நிலையில், மீதமுள்ளவர்களை பல்வேறு மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 22 பேர் இதுவரை ஜாமீன் பெற்று இருக்கிறார்கள்.

    நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை விசாரித்த கோர்ட்டு அவர்களை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுத்தது.

    இதை எதிர்த்து சிபிஐ பாட்னா ஐகோர்ட்டை நாடியது. இந்த வழக்கை நீதிபதி சந்தீப் குமார் விசாரித்தார்.

    விசாரணை முடிவில் பீகார் போலீசார் கைது செய்த 13 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அவர்களை இன்றே (நேற்று) சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய சிறை நிர்வாகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அந்த 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது.

    பீகாரில் நீட் மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 13 பேருக்கும் அவருடனான தொடர்பு உள்ளிட்டவை குறித்து சிபிஐ விரிவான விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதன் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும்.
    • தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், நீட் தேர்வு ஒரு ஊழல், இதை நாங்கள் கடந்த 3-4 ஆண்டுகளாக கூறி வருகிறோம்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நுழைவு தேர்வை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.

    அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும். அகில இந்திய தேர்வை அரசு கைவிட்டு, மாநிலங்களை சேர்க்காமல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும்

    இது மிகப் பெரிய நாடு, தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அமைப்பு மற்றும் அமைப்பில் உள்ள கசிவுகளுக்கு தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

    • பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
    • முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.

    அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.

    அதன்பேரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

    அந்த வகையில் இந்த வழக்குகளில் ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் உள்பட மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.

    ஜார்கண்டின் பொகாரோ நகரை சேர்ந்த குமார், பீகாரின் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அதே போல் வினாத்தாள்களை திருடி கசியவிடுவதில் குமாருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங்கை ஹசாரிபாக்கில் கைது செய்தோம்" என கூறினார்.

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
    • விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங் ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவ மாணவர்களின் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு மாணவர்கள் 4 பேரையும் ரகசியமான இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    • 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு அம்மாணவியை சிபிஐ கைது செய்தது.
    • பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.

    ராஞ்சி:

    இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பீகாரிலும், ஜார்கண்டிலும் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

    ஹசாரிபாக்கில், தேசிய தேர்வு முகமை கட்டுப்பாட்டில் இருந்த நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன சிவில் என்ஜினீயர் பங்கஜ் குமாரை கைது செய்துள்ளது. அவருக்கு உதவி செய்த ராஜு சிங் என்பவரும், சுரேந்தர் சர்மா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் சிபிஐ வளையத்தில் சிக்கினார். அவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார்.

    கடந்த 17-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட சிபிஐ அதிகாரிகள், அம்மாணவியை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். நிர்வாகம் அனுமதி அளித்தநிலையில், மாணவியிடம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் விசாரணை நடத்தினர்.

    2 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்று அம்மாணவியை சிபிஐ கைது செய்தது. அவர் பெயர் சுரபி குமாரி.

    பங்கஜ் குமார் திருடி எடுத்து வந்த வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையை குறித்துக்கொடுக்க சுரபி குமாரியையும், பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.

    அவர்கள் குறித்துக்கொடுத்த விடைகளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதே பங்கஜ் குமாரின் திட்டம்.

    கைது குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

    இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில் நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.
    • 'பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம்'

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்த காரசாமான விவாதம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மொத்த நாட்டுக்கும் நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில்  நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.

    அமைச்சர் [மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்] இந்த பிரச்சனைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டிவருகிறார். அவருக்கு இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படையான புரிதல் இல்லை.

    நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று கவலையுடன் உள்ளனர், இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

    நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணமும் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் தற்போது கருதுகின்றனர். அதையே எதிர்தரப்பில் உள்ள நாங்களும்  கருதுகிறோம் என்று பேசியுள்ளார். முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, அதிக மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    • நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது.
    • பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டை தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்து உள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகார் மையத்தில் 4297 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 2037 பேர் 650-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய 2250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை. 9,400-க்கும் அதிக மானவர்கள் நெகடிவ் மதிப்பெண் பெற்றனர். ஒரு மதிப்பெண் கூட பெறாததற்கு எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்று அர்த்தமல்ல. சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்து இருக்கலாம். சரியான பதிலுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு, தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே எந்த மதிப்பெண்ணும் பெறாததற்கு காரணமாகும்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் கே.பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது;-

    நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது. ஆனால் மே 3-ந் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில் தான் வினாத்தாள் இருந்துள்ளது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார்.

    அப்போது முக்கிய பிரச்சனையை விவாதிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    • தேசிய தேர்வு முகமையின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்.
    • தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      புதுடெல்லி:

      நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கேட்டார்.

      அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

      தேசிய தேர்வு முகமையின் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அங்கு தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      ஆனால் போட்டித்தேர்வுகளின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட மையப்பணிகளை வெளி ஊழியர்களுக்கு அளிப்பது இல்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.
    • திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மையக் கண்காணிப்பாளர் ஆகியோரின் உடந்தையுடன் நீட் தேர்வு வினாத்தாள் திருடப்பட்டது. அவர்கள், அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.

    திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
    • ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வினாத்தாள்களை மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை நடந்ததாகவும் சர்ச்சையானது. இது தொடர்பாக மாணவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியது.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீட் தேர்வில் ஒட்டுமொத்த விதிமுறைகளை மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை. 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த நிலையில் நீட் மறு தேர்வு நடத்தாதது ஏன்? என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரிவான விளக்கத்தை கொடுத்தனர்.

    மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கூடுதல் வழிகாட்டுதல்களை நிபுணர் குழுவினருக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி,

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க சைபர் செக்யூரிட்டி நவீன தொழில் நுட்பத்துடன், இணைய பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வினாத்தாள்களை தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் பரிசோதனைகளை உறுதி செய்ய வேண்டும். வினாத்தாள் கையாளுதல், சேமித்தலை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    வினாத்தாள்களை அந்தந்த மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

    வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தேசிய தேர்வு முகமை சரி செய்ய வேண்டும். கல்வி அமைச்சகம் ஒரு மாதத்தில் நடைமுறைபடுத்தப்படும் திட்டத்தை உருவாக்கி 2 வாரங்களுக்கு பிறகு அந்த முடிவை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

    தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தனது பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ×