என் மலர்
நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"
- சின்னாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது.
- தருமபுரி மாவட்ட விவசாயிகள் தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காண பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் வழியாக தமிழ்நாட்டுக்கே வளம் கொழிக்க வைக்கும் 2 முக்கிய நதிகள் ஓடியும் குடிநீருக்கே பல நேரங்களில் தட்டுப்பாடு ஏற்பாடு நிலை உருவாகும். இதனால் பொதுமக்களும், விவசாய வேலைகள் முடங்கி விவசாயிகளும் வேதனையில் மூழ்குவதும் வாடிக்கை.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை இந்த நிலையை மாற்றியுள்ளது. இந்த மழை எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள சின்னாறு, கேசர்க்குழி, நாகாவதி, தொப்பையாறு, தும்பலஹள்ளி, வாணியாறு, வரட்டாறு, ஈச்சம்பாடி உள்ளிட்ட 8 அணைகளிலும் சுமார் 91 சதவிகித நீர் நிரம்பியுள்ளது.
குறிப்பாக சின்னாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதேபோல நாகாவதி அணை முழு கொள்ளளவான 156 அடியையும், ஈச்சம்பாடி அணை முழு கொள்ளளவான 37 அடியையும் முழுமையாக எட்டியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தருமபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் வெள்ள அபாயம் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே எல்லா அணைகளும் நீர் நிரம்பி உள்ள நிலையில் மேற்கொண்டு வெள்ளநீர் வரத்து அதிகரித்தால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் நீரில் மிதக்கும் சூழல் ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள், அவற்றுக்கு நீரை கொண்டு செல்லும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும் சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளதாலும் உபரி நீரை சேமிக்க வழியற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அனைத்து வாய்க்கால்களையும், ஏரிகளையும் தூர்வாரி உபரிநீரை சேமிக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் இதனால் உபரி நீர் விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் புகாமல் தடுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடந்தால் வறட்சியை மட்டுமே சந்தித்து வரும் தருமபுரி மாவட்ட விவசாயிகள் தற்போதுள்ள நீர் இருப்பை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காண பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
- இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
- தீபகற்ப பகுதியின் பல இடங்களிலும், கிழக்கு-மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பான மழை பெய்யக்கூடும்.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பி இருப்பது பருவமழையைத்தான். பருவமழை பொய்த்துப்போகிறபோது அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் 52 சதவீத சாகுபடி நிலங்கள், பருவமழையைத்தான் நம்பி உள்ளன.
இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட குறைவான அளவே இருக்கும் என்று தனியார் வானிலை மையமான 'ஸ்கைமெட்' தெரிவித்தது. இது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஆனால் விவசாயிகள் நிம்மதிப்பெருமூச்சு விடவைக்கும் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, இயல்பான அளவுக்கு பெய்யும் என்று அது அறிவித்துள்ளது. எல்நினோ நிலைமைக்கு மத்தியிலும் மழை இயல்பான அளவு இருக்கும்.
இந்தியாவில் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.
இந்திய புவி அறிவியல்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், பருவமழை தொடர்பாக டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) இயல்பான அளவுக்கு மழை பெய்யும். இது தோராயமான நீண்ட கால சராசரியான 96 சதவீதமாக (இதில் 5 சதவீதம் தவறலாம்) இருக்கும்" என தெரிவித்தார்.
இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குனர் மிருதியுஞ்சய் மொகபத்ரா கூறியதாவது:-
இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவீதம் வாய்ப்பு உள்ளது. வடமேற்கு, மேற்கு-மத்தி, வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பு முதல் இயல்புக்கு மேல் மழை பெய்யும்.
தீபகற்ப பகுதியின் பல இடங்களிலும், கிழக்கு-மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பான மழை பெய்யக்கூடும்.
ஜூலை மாதத்தில் எல் நினோ நிலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தின் இரண்டாம் பாதியில் அவற்றின் தாக்கம் உணரப்படலாம்.
எல்லா எல்நினோ ஆண்டுகளும் மோசமான பருவமழை ஆண்டுகள் என்று கூறி விட முடியாது. 1951 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் 15 எல் நினோ ஆண்டுகள் இருந்தன. அவற்றில் 6 பருவ மழைக்காலத்தில் இயல்பு மற்றும் இயல்புக்கு மேல் பருவமழை பெய்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
50 ஆண்டு சராசரியான 87 செ.மீட்டரில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை இயல்பான மழை அளவாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
- தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்குவது வழக்கம்.
- கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாதம் 29-ந்தேதியே தொடங்கியது.
திருவனந்தபுரம்:
இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில் பெய்யும் மழை அளவில் சுமார் 80 சதவீதம் மழை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கும்.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாதம் 29-ந்தேதியே தொடங்கியது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி அல்லது 7-ந்தேதி பருவ மழை பெய்ய தொடங்கும் என கூறியுள்ளது. அதற்கான அறிகுறிகளே இப்போது தென்படுவதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தெற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் முன்கூட்டியே தென்படவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், அவ்வாறு தென்பட்டால் மழை முன்கூட்டியே தொடங்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும்போது, கடந்த 2005-ம் ஆண்டு முதல் இப்போது வரை அதாவது 18 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் சரியாக இருந்தது. 2015-ம் ஆண்டு மட்டும் இதில் தவறு ஏற்பட்டது.
அதன்பின்பு எந்த தவறும் ஏற்பட்டதில்லை. அதுபோல இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும். தாமதமாக தொடங்கினாலும் மழை பொழிவில் குறைவிருக்காது என்று ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
- மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும்.
- புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும்.
புதுடெல்லி:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப மழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வந்தன.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மேலும் தாமதமாக கூடும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமேட் கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவத் கூறியதாவது:-
பசிபிக் பெருங்கடலில் மேவார் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வருகிற 27 அல்லது 28-ந் தேதி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஏற்படும் தாக்கம் காரணமாக அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும். புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும். இந்த புயலால் ஏற்படும் பாதிப்பு காரணமாக காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும். இதன் காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான மேகங்களை வடகிழக்கு திசை நோக்கி தள்ளும். இதன்காரணமாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தனியார் வானிலை ஆய்வு மையத்தின் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. இவை அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளன. அறிவியல் மாதிரிகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை, என கூறியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு அதாவது 96 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் ஸ்கைமேட் தனியார் வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக அதாவது 94 சதவீதம் அளவுக்கே பெய்யும் எனக்கூறியுள்ளது.
- கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது.
- டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.
புதுடெல்லி :
கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக தெறித்தது. மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர்.
இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்க, சில இடங்களில் மழைத்துளியும் விழுந்தது.
இதற்கிடையே, இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இனி வானில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்படும் எனவும், கோடைகாலத்துக்கு முந்தைய மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
மலைப்பாங்கான இடங்களில் கனமழை பெய்யும் என்றும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேற்கண்ட மாநிலங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறியுள்ளது.
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
- கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
வழக்கமாக இதற்கான அறிகுறிகள் அனைத்தும் அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதியில் தென்படும். இந்த ஆண்டு இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது. இதனால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் எனக்கூறப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மழை தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகள், அந்தமான் கடல் பகுதியிலும் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
- இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை,ஈசல்தட்டு,பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை ,பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய்,நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு,தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அது மட்டுமின்றி ஆடு,மாடு,கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை. மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டது. ஆனால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர்.
மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத் தொழில் தடைபட்டதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்தனர்.மேலும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளை நிலங்களை தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து. இதமான சீதோசன நிலை நிலவுகிறது. அத்துடன் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களும் புத்துணர்வு பெற்று உள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன் சாகுபடி பணிக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட காத்திருக்கின்றனர்.
- கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
- தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளது.
தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலைகளை காட்டுகிறது. எனவே இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர்.
- லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின.
- தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும்.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இந்த நிலையில்தான் அரபிக்கடலில் பிபோர்ஜோய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
தற்போது பிபோர்ஜோய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதற்கேற்ப மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இது விவசாயத்திற்கு உகந்தது என்பதால் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் சாகுபடி பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. பிபோர்ஜோய் புயல் காரணமாக மழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று கூறியுள்ளது.
- தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது.
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.
அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜோய் அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை கேரளா முழுவதும் பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப நேற்று முதலே மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோல கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு வரையிலான கடல்பகுதியில் கடல் சீற்றம் காணப்படும் என்றும், அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது பிபோர்ஜோய் புயல் காரணமாக பருவமழை பொழிவில் பாதிப்பு இருக்காது என்றும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
நெல்லை:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இதனால் கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களான நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.