search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம்"

    • விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
    • அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

    சிவகங்கை:

    2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தற்போதே தங்கள் களப்பணிகளை தொடங்கியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா, பூத் கமிட்டி அமைப்பு என்று பம்பரமாக சுழன்று வரும் நிர்வாகிகளுக்கு அந்தந்த கட்சி தலைமையும் ஏராளமான பொறுப்புகளை அள்ளிக்கொடுத்துள்ளது.

    அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சற்று முதல் வரிசையில் உள்ளது. முதலாம் ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய கட்சி தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து அதற்கான செயலாளர்களையும், நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதே போல் பல்வேறு அணிகளையும் உருவாக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

    எதிரணியினரின் விமர்சனங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன், த.வெ.க. தலைவர் இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்போது கட்சியின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் சிவகங்கையில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன், த.வெ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. அதேபோல் அந்த பகுதியில் இயங்கிவரும் குவாரியால் கிராமத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மேற்கண்ட கிராமத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனற்ற நிலையில், போலீஸ் நிலையம், கோர்ட்டு மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்கிடையே கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் உள்ளிட்டோரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலர் முத்துபாரதி தலைமையில் நகரச் செயலர் தாமரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், கிராம மக்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசவே வந்தோம். மாவட்டம் முழுவதும், கிராவல் மண் கொள்ளை நடக்கிறது. அதை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை. அமைச்சர்கள் கனிம வள கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.

    வேம்பங்குடி கிராமத்தில் அரசு விதியை மீறி பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்துள்ளனர். வேம்பங்குடியில் நடந்துள்ள கிராவல் மண் கொள்ளையை, அதிகாரிகள் ஆய்வு செய்து, அதில் அரசு விதியை மீறி, மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதேபோல் உண்ணாவி ரதப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசினர். அ.தி.மு.க.வுடன் த.வெ.க.வும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றது சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பேசும்பொ ருளாக மாறியுள்ளது.

    இதுகுறித்து த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துபாரதி கூறுகையில், இந்த மணல் கொள்ளை, குவாரி பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை கிராமமக்களுக்காக நடத்தி இருக்கிறோம். கிராமமக்கள் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.

    மக்களுக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கட்சி தலைமை எங்களுக்கு உத்தர விட்டுள்ளது. அந்த வகையில் தான் நாங்கள் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம். மற்றபடி தேர்தல், கூட்டணி என்பது தொடர்பாக நாங்கள் யோசிக்கவில்லை. கிராம மக்களையும், விவசாயத்தையும் காப்பதற்காகவே எந்தவித பாகுபாடும் பார்க்காமல் நாங்கள் பங்கேற்றோம் என்றார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்ததெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி சேரப்போகிறது, களம் மாறலாம், சூழ்நிலையும் மாறலாம் என்ற கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

    ×