search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94568"

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் அடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறந்து கிடக்கும் விலங்குகளை பாதுகாப்பாக ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் அடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும். இவற்றின் மூலம் கடலூர் மாவட்ட மக்களை நோய்ப் பரவலில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம், ஒருங்கிணைந்த வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, காவிரி பாசன மாவட்டங்கள், திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

    மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு மட்டும் தான் பற்றாக்குறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு குறைந்தது ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் எதுவுமில்லை.

    அண்டை மாநிலமான புதுச்சேரியில், தமிழகத்தை ஒப்பிடும் போது, மழை வெள்ள பாதிப்பு குறைவு தான். ஆனால், அந்த மாநிலத்தில் மஞ்சள் குடும்ப அட்டை, சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, அதாவது அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கு பெய்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 340 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. பெரும்பாலான குளங்ளும் நிரம்பியுள்ளது.

    பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    1903-ம் ஆண்டுக்கு பிறகு காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்க்க 3-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகைதந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை பார்த்து மிகிழ்ந்தனர்.

    பெருக்கெடுத்து ஓடும் பாலாற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.

    வேலூர்:

    ஆந்திரா- தமிழகத்தில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் வழியாக பாலாற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள வட விரிஞ்சிபுரம் காமராஜபுரத்தில் 191 வீடுகள் உள்ளன. இதில் பாலாற்றங்கரையில் வலது பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூட தெருவில் ஆற்றின் கரையோரமாக 28 வீடுகள் இருந்தன. இவற்றில் 130-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந்தேதி முதல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரையும் வருவாய்த் துறையினர் வெளியேற்றினர். அவர்கள் வட விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வடுகன்தாங்கல் உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடு

    இந்த நிலையில் நேற்று காலை முதல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த 28 வீடுகளில் 12 வீடுகள் மண் அரிப்பால் அடுத்தடுத்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்தன. இன்று காலையில் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. 13 வீடுகள் ஆற்றுக்குள் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.

    வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.

    தங்களின் வீடுகள் எல்லாம் தங்கள் கண் முன்பாகவே இடிந்து விழுந்தது கண்டு பொதுமக்கள் அழுது துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி டி.எஸ்.பி. பழனி, தாசில்தார் சரண்யா மற்றும் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

    அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    பள்ளிக்கூடத் தெருவில் மீதம் உள்ள வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மீதமுள்ள 15 வீடுகளும் இடிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு வீடு ரூ.40 லட்சம் செலவில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது. ஒரு வாரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த உள்ளதாக அந்த பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படியுங்கள்... ஆந்திராவில் பெய்த கனமழையால் விஜயவாடா- சென்னை சாலையில் பாலம் துண்டிப்பு

    ரெயில்பாதை சேதமடைந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 4 மாவட்டங்களில் நேற்று வரை 3,756 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன.

    திருப்பதி:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கரையை கடந்தது. இதன் காரணமாக சித்தூர், கடப்பா, நெல்லூர், ஆனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஏற்கனவே பருவமழை காரணமாக ஆந்திராவில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கொட்டித் தீர்த்த மழையால் மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கால்நடைகள் மற்றும் ஆட்டோ, பைக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

    இதே போல் சித்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் மண்டலம் ராயல செருவு பெரிய ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவை எட்டியது. ஏரிக்கரை பலவீனமாக இருந்ததால் எப்போது வேண்டுமானாலும் ஏரி உடையும் அபாயம் உள்ளது. ஏரி உடைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படையும் என உணர்ந்த மாவட்ட நிர்வாகம் பி.வி.புரம், பாலாஜி பள்ளி, எஸ்.ஆர்.புரம், கங்கிரெட்டி பள்ளி, கம்ம கண்டிரிகா, நென்னூர், கொத்த நென்னூர் உட்பட 18 கிராம மக்களை மீட்டு பள்ளி, கல்லூரி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதேபோல் நெல்லூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள பெண்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெண்ணா ஆற்றின் கரை உடைந்து கோடூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. மழை வெள்ளத்தின் அளவு அதிகமாக இருந்தால் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டன.

    இதனால் மேம்பாலம் துண்டிக்கப்பட்டு விஜயவாடா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனால் அந்த பாதையில் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    ஒரே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரெயில் பாதையிலும் பாதிப்பு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்தை கடப்பா-சித்தூர் வழித்தடத்தில் அதிகாரிகள் மாற்றிவிட்டனர். ரெயில்பாதை சேதமடைந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 4 மாவட்டங்களில் நேற்று வரை 3,756 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 1,131 வீடுகள் இடிந்து விழுந்தன. 2, 007 வீடுகள் சேதமடைந்துள்ளன. 44,275 கிராம மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் மழை வெள்ளம் முற்றிலும் குறைந்தது. இதனால் நடைபாதையில் விழுந்துள்ள பாறைகள், மரங்கள் மற்றும் மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதையும் படியுங்கள்... நான் இந்தியாவில்தான் இருக்கிறேன்: விசாரணைக்கு ஆஜராக தயார்- மும்பை முன்னாள் கமிஷனர் கோர்ட்டில் தகவல்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை சற்று ஓய்ந்ததுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

    வட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது.

    இதேபோல் ஆந்திராவில் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பொன்னை ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பொன்னை ஆற்றின் இரு கரையை தொட்டபடி பாலாற்றில் கலந்தது.

    இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று வரலாற்றில் 1903-ம் ஆண்டுக்கு பிறகு 118 ஆண்டுகள் கழித்து விநாடிக்கு சுமார் 1 லட்சத்து,40 ஆயிரத்து 54 கன அடி வெள்ளநீர் பெருக்கெடுத்து இரு கரையையும் தொட்டபடி சீறிப்பாய்ந்தோடியது. வரலாறு காணாத வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கண்டுகளித்தனர்.

    தற்போது பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை பாலாற்றில் 48 ஆயிரம் கனஅடி வெள்ளம் வந்தது. பொன்னை ஆற்றில் 11,687 கனஅடியாக குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி, வாலாஜா அணைக்கட்டு நீர்த் தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 51,593 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    காவேரிப்பாக்கம், கலவை, பூண்டி, மகேந்திரவாடி, மூதூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சோதனைச் சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.


    ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லூரில் உள்ள சொர்ணமுகி ஆற்றின் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சோதனைச் சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வாகன போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் கவரப்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக 21.11.2021 திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    22.11.2021: கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    23.11.2021: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    மழை

    24.11.2021, 25.11.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று முதல்-அமைச்சர் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தப்பாத்தியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ. சங்கர நாராயணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ. 43 லட்சத்து 89 ஆயிரத்து 628 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் இருக்கும் மக்களுக்காக நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

     

    முக ஸ்டாலின்

    வீடுகட்டி தருவது, கடன் உதவி வழங்குவது, அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் முகாம்களில் இருப்பவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்று பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 முகாமில் இருப்பவர்களுக்கு ரூ. 56 லட்சம் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரண தொகை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது, அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் கோரிக்கைகளை முன் வைத்து பேசுவோம்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று முதல்-அமைச்சர் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... பாஜக செய்த கொடுமையை கண்டு விவசாயிகள் பயப்படவில்லை - மம்தா கருத்து

    சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது.

    அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

    இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும்  ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட எல்.கே.பி. நகர், தனலட்சுமி நகர் ஆகிய பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. மழைநின்று ஒரு வாரமாகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. வீடுகளை சுற்றிலும், சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கியே நிற்கிறது.

    வீடுகளை சுற்றி முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில்தான் இந்த பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், இரவில் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளதால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் ஒரு நாள் மட்டும் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றியதாகவும், ஆனால் அந்த மோட்டார் பழுதடைந்ததால் மழை நீரை அகற்றும் பணி பாதியில் நின்று போனதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    வீட்டுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரில் கட்டில் போட்டு வசித்து வருகின்றனர். வீட்டில் மின்சாரமும் இருப்பதால் மழைநீரில் நின்றபடி மின்சார சுவிட்ச்சை தொட வேண்டியது இருப்பதாகவும், மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு விடுமோ? என எந்நேரமும் அச்சத்துடன் வசித்து வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் கவலை தெரிவித்தனர்.

    வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    மழை வெள்ளத்தில் இருந்து பூமிக்கடியில் கட்டப்பட்ட சேமிப்பு தொட்டி தங்களை காப்பதால் ஜப்பான் மக்கள் அதனை பூமிக்கடியில் ஒரு கோவில் என்றுதான் சொல்கின்றனர்.
    வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை.

    வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கிறோம். நமக்கு வெயிலாலும் பிரச்சினை. மழை பெய்தாலும் பிரச்சினை.

    ஆண்டில் 10 நாள் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சேமித்து வைத்தாலே, சென்னையில் ஒரு ஆண்டுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். வெயில் காலத்திலும் குடிநீருக்கு கவலையின்றி வாழலாம். ஆனால் நம்மிடம் நீரை சேமிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.

    மழை பொழிந்தால், நீர் தனது இருப்பிடமான ஏரியை நோக்கி செல்கிறது. ஆனால் சென்னையில் ஏரிகள் மாயமாகிவிட்டதால் அந்த நீர் குடியிருப்பை சூழ்ந்து நின்று வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சென்னையின் வளர்ச்சிக்கு பின்னால் மாபெரும் இயற்கை அழிப்பு அரங்கேறி உள்ளது. இயற்கை நமக்கு அளித்த நீர்நிலைகள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டுவிட்டன.

    சென்னையில் கடந்த 1893-ம் ஆண்டில் 60 ஏரிகள் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 28 ஏரிகள்தான் உள்ளன. 32 ஏரிகளும், அதன் வழித்தடங்களும் இல்லாமல் போய் விட்டன. தற்போது இருக்கும் 28 ஏரிகளுக்கும் நீர் வரும் வழித்தடங்கள் எல்லாம் சுருங்கி போய், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன.

    இதனால் மழைநீர் வழிந்தோடுவதில் தடை உள்ளது. கடந்த காலங்களில் வங்கக்கடலில் புயல் உருவானால் அது ஆந்திராவையும், ஒடிசாவையும் தான் பெருமளவில் தாக்கும். ஆனால் இயற்கை மாற்றத்தால் தற்போது சென்னையை தாக்கும் நிகழ்வுகள் தொடங்கி விட்டன. சென்னை மாநகரம் அவ்வப்போது நீரில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்க வேண்டிய மழை, சென்னை மக்களை இப்போது பயமுறுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காண நீர் நிலைகள் மீது கட்டப்பட்டு இருக்கும் அத்தனை கட்டிடங்களையும் இடித்து மீண்டும் நீர்நிலைகளை உருவாக்க முடியுமா?

    அப்படி செய்ய முடிவெடுத்தால் சென்னையில் மூன்றில் ஒரு பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். இது கடலில் விழுந்த மழை துளியை தேடுவதற்கு சமம் ஆகும்.

    உலகெங்கும் நகரங்கள் உருவானபோது பல நாடுகளிலும் இதுபோன்ற இயற்கை அழிப்புகள் நடந்து இருக்கின்றன. அதற்கு அந்த நாடுகள் தற்போது தீர்வும், பரிகாரமும் தேடிக்கொண்டு இருக்கின்றன. இயற்கையை அழித்து விட்டு, அவற்றை செயற்கையாக தற்போது உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

    பூமிக்கடியில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத சுரங்கப்பாதை

    அதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தது. அங்குள்ள வீடுகள் எல்லாம் பல நாட்கள் நீரில் மிதக்கும். அதற்கு அவர்கள் கண்ட தீர்வுதான் பூமிக்கடியில் நீர் வெளியேற்றும் வாய்க்கால் திட்டம்.

    டோக்கியோவின் மேல்பரப்பில் இருந்த வாய்க்கால், நீர்நிலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் எழும்பி விட்டன. அதனால் அவர்கள் செயற்கையாக பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் மழை நீர் செல்லும் மிகப்பெரும் சுரங்கத்தை (செயற்கை வாய்க்கால்) உருவாக்கினர். இந்த சுரங்கத்தின் முடிவில், பூமிக்கடியில் மிகப்பெரும் நீர் சேமிப்பு தொட்டிகளை கட்டினர். இந்த தொட்டிகள் 6 கால்பந்து மைதானம் அளவு கொண்டது. சுரங்கத்தின் வழியாக வரும் மழை நீர், சேமிப்பு தொட்டியில் வந்து சேருகிறது. பின்னர் இந்த சேமிப்பு தொட்டியில் இருக்கும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு அதன் அருகில் உள்ள எடவா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. சேமிப்பு தொட்டிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீரை ஆற்றில் வெளியேற்றுகிறார்கள்.

    நீர் சேமிப்பு தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் காட்சி

    இந்த திட்டத்தின் மூலம் தற்போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து டோக்கியோ நகரம் முழுமையாக தன்னை காத்து கொள்கிறது. வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்தல் மற்றும் மழை நீரை முழுவதுமாக சேகரித்தல் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை இந்த திட்டத்தின் மூலம் செய்து வெற்றி பெற்று இருக்கிறது ஜப்பான்.


    நீர் சேமிப்பு தொட்டிக்கு செல்லும் நுழைவுவாயில்

    இந்த திட்டம் 1992-ம் ஆண்டு தொடங்கி 2006-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்காக செலவான தொகை இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். மழை வெள்ளத்தில் இருந்து பூமிக்கடியில் கட்டப்பட்ட சேமிப்பு தொட்டி தங்களை காப்பதால் ஜப்பான் மக்கள் அதனை பூமிக்கடியில் ஒரு கோவில் என்றுதான் சொல்கின்றனர். ஜப்பானின் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா உள்பட பல நாடுகளும் பின்பற்றி வருகின்றன.



    சென்னை மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்மா உணவங்களிலும் இலவசமாக சாப்பிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதால் பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னையில் கடந்த 6-ந்தேதி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழை நீர் வடிவதற்குள் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து நேற்று வரை கன மழை பெய்தது. இன்றும் ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்கிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்மா உணவங்களிலும் இலவசமாக சாப்பிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள் ஆங்காங்கே உதவி செய்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 7-ந்தேதி முதல் தினமும் சென்று பார்வையிட்டு வருவதுடன் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு தினமும் மழை நீரில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உணவுகள் வழங்கி வந்தார்.

    மழை நீர் வடிய வைக்க துரித நடவடிக்கைகள் எடுத்து வந்தார். கூடுதலாக அதிகாரிகளையும் கண்காணிப்பு பணிக்கு நியமித்துள்ளார். அனைத்து பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்து தினமும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.

     

    இலவச மருத்துவ முகாம்

    வெள்ள பாதிப்பை கண்டறிந்து மக்களுக்கு உதவ அமைச்சர்கள் குழுவையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 6-வது நாளாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இன்று காலையில் தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அங்கும் அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றார். அங்கு ஒவ்வொரு பகுதியிலும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பள்ளிக்கரணை ரேடியல்ரிங் ரோடு நாராயணபுரம் ஏரிக்கு சென்று தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அங்கு ஏற்பட்டுள்ள மழை சேதங்களையும் கண்டறிந்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இதன் பிறகு வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்டில் உள்ள மாம்பாக்கம் சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கியிருந்த மக்களை சந்தித்தார்.

    அங்கு தங்கியிருந்த 34 இருளர் குடியிருப்பைச் சேர்ந்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார். இதன் பிறகு அடையாறு ஆறு உருவாகும் ஆதனூரில் உள்ள ஜீரோபாயிண்ட்டுக்கு சென்று பார்வையிட்டார்.

    அங்கிருந்து தாம்பரம்- மண்ணிவாக்கம் சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். முடிச்சூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார்.

    முடிச்சூர் வரதராஜபுரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று அங்கு தங்கியிருந்த மக்களுக்கு வேட்டி-சேலை, போர்வை, பிரட், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உணவும் வழங்கப்பட்டது.

    அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, கலெக்டர் கோகுல் நாத் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று இருந்தனர்.

    முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று 2-வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

     

    எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கீழ்க்கட்டளை அம்பாள் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கெட்டிவாக்கம், தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலப்பூர் தெப்பகுளம், வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள அருந்ததியர் நகர் ஆகிய இடங்களுக்கும் மழை நீரில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, டி.கே. எம்.சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், தன்சிங், கே.பி.கந்தன், வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், மாணவர் அணி துணை செயலாளர் வக்கீல் பழனி, ஆகியோரும் சென்று இருந்தனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை கோட்டூர்புரம் சித்ரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, பிரட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதிகளுக்கும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவருடன் ஜே.சி.டி.பிரபாகரன், விருகை ரவி, எம்.எம்.பாபு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

    சசிகலா இன்று சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இன்று காலை அவர் தி.நகர் கிரியப்பா சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, பாய், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், உணவுப்பொருட்களையும் வழங்கினார்.

    அதன்பிறகு அவர் அங்கிருந்து கோட்டூர்புரம் விநாயகர் கோவில் பகுதிக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தார்.

    பின்னர் சைதாப்பேட்டை ஆடு தொட்டி பகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் கே.கே.நகர் சென்றார். அங்குள்ள நாகாத்தம்மன் கோவில் பகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார்.

    பிற்பகலில் அவர் மாதவரம், ஓட்டேரி பாலம் ஆகிய இடங்களுக்கு சென்று மழையால் ஏற்பட்ட சேத பகுதிகளை பார்வையிடுகிறார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமணி மெயின் ரோடு, தந்தை பெரியார் நகர் பகுதியில் ஆய்வை தொடங்கிய கமல்ஹாசன் வேளச்சேரி சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்றார்.

    அதன் பிறகு மேற்கு மாம்பலம் பகுதிக்கும் சென்று வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள மேட்லி சுரங்கப்பாதை, காந்தி தெரு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வடசென்னை பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். கொருக்குப்பேட்டை, ராஜீவ் காந்தி நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

    அப்போது அவர்களிடம் வெள்ள பாதிப்பால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றியும் ஜி.கே.வாசன் கேட்டறிந்தார்.

    சென்னையில் மழை பாதிப்பு பகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு உணவு உள்ளிட்ட நிவாரண உதவி செய்து வருவதுடன் மழை சேதத்தையும் நடந்து சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்... காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

    ×