search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாராயணபுரம் ஏரியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாராயணபுரம் ஏரியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்

    சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு ஆய்வு

    சென்னை மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்மா உணவங்களிலும் இலவசமாக சாப்பிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதால் பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னையில் கடந்த 6-ந்தேதி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழை நீர் வடிவதற்குள் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து நேற்று வரை கன மழை பெய்தது. இன்றும் ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்கிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்மா உணவங்களிலும் இலவசமாக சாப்பிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள் ஆங்காங்கே உதவி செய்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 7-ந்தேதி முதல் தினமும் சென்று பார்வையிட்டு வருவதுடன் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு தினமும் மழை நீரில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உணவுகள் வழங்கி வந்தார்.

    மழை நீர் வடிய வைக்க துரித நடவடிக்கைகள் எடுத்து வந்தார். கூடுதலாக அதிகாரிகளையும் கண்காணிப்பு பணிக்கு நியமித்துள்ளார். அனைத்து பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்து தினமும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.

     

    இலவச மருத்துவ முகாம்

    வெள்ள பாதிப்பை கண்டறிந்து மக்களுக்கு உதவ அமைச்சர்கள் குழுவையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 6-வது நாளாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இன்று காலையில் தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அங்கும் அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றார். அங்கு ஒவ்வொரு பகுதியிலும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பள்ளிக்கரணை ரேடியல்ரிங் ரோடு நாராயணபுரம் ஏரிக்கு சென்று தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அங்கு ஏற்பட்டுள்ள மழை சேதங்களையும் கண்டறிந்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இதன் பிறகு வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்டில் உள்ள மாம்பாக்கம் சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கியிருந்த மக்களை சந்தித்தார்.

    அங்கு தங்கியிருந்த 34 இருளர் குடியிருப்பைச் சேர்ந்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார். இதன் பிறகு அடையாறு ஆறு உருவாகும் ஆதனூரில் உள்ள ஜீரோபாயிண்ட்டுக்கு சென்று பார்வையிட்டார்.

    அங்கிருந்து தாம்பரம்- மண்ணிவாக்கம் சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். முடிச்சூர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார்.

    முடிச்சூர் வரதராஜபுரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று அங்கு தங்கியிருந்த மக்களுக்கு வேட்டி-சேலை, போர்வை, பிரட், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உணவும் வழங்கப்பட்டது.

    அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, கலெக்டர் கோகுல் நாத் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று இருந்தனர்.

    முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று 2-வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

     

    எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கீழ்க்கட்டளை அம்பாள் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கெட்டிவாக்கம், தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலப்பூர் தெப்பகுளம், வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள அருந்ததியர் நகர் ஆகிய இடங்களுக்கும் மழை நீரில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, டி.கே. எம்.சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், தன்சிங், கே.பி.கந்தன், வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், மாணவர் அணி துணை செயலாளர் வக்கீல் பழனி, ஆகியோரும் சென்று இருந்தனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை கோட்டூர்புரம் சித்ரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, பிரட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதிகளுக்கும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவருடன் ஜே.சி.டி.பிரபாகரன், விருகை ரவி, எம்.எம்.பாபு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

    சசிகலா இன்று சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இன்று காலை அவர் தி.நகர் கிரியப்பா சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, பாய், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், உணவுப்பொருட்களையும் வழங்கினார்.

    அதன்பிறகு அவர் அங்கிருந்து கோட்டூர்புரம் விநாயகர் கோவில் பகுதிக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தார்.

    பின்னர் சைதாப்பேட்டை ஆடு தொட்டி பகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் கே.கே.நகர் சென்றார். அங்குள்ள நாகாத்தம்மன் கோவில் பகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார்.

    பிற்பகலில் அவர் மாதவரம், ஓட்டேரி பாலம் ஆகிய இடங்களுக்கு சென்று மழையால் ஏற்பட்ட சேத பகுதிகளை பார்வையிடுகிறார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமணி மெயின் ரோடு, தந்தை பெரியார் நகர் பகுதியில் ஆய்வை தொடங்கிய கமல்ஹாசன் வேளச்சேரி சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்றார்.

    அதன் பிறகு மேற்கு மாம்பலம் பகுதிக்கும் சென்று வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள மேட்லி சுரங்கப்பாதை, காந்தி தெரு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வடசென்னை பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். கொருக்குப்பேட்டை, ராஜீவ் காந்தி நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

    அப்போது அவர்களிடம் வெள்ள பாதிப்பால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றியும் ஜி.கே.வாசன் கேட்டறிந்தார்.

    சென்னையில் மழை பாதிப்பு பகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு உணவு உள்ளிட்ட நிவாரண உதவி செய்து வருவதுடன் மழை சேதத்தையும் நடந்து சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்... காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

    Next Story
    ×