என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95139"

    • திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?
    • ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இன்று பாரதிய ஜனதாவினர் சிறப்பு பூஜை நடத்தினர். கோவையை காத்த ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி இந்த பூஜையை அவர்கள் நடத்தினர்.

    பூஜையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்கள் கோவிலில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு இறைவன் அருளால் மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதால் இன்று வழிபாடு நடத்தினோம். நூற்றுக்கணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது.

    சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை. கோவைக்கும் வரவில்லை. இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்ந்து வந்திருக்க வேண்டாமா?

    போலீஸ் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசி இருக்க வேண்டாமா?

    இந்த சம்பவம் பற்றி அவர் இதுவரை பேசாதது, மவுனமாக இருப்பது கோவையை பழி வாங்கும் நோக்குடன் இன்னும் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது. உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்திருக்கின்றது.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் கோவைக்கு வர வேண்டும். கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் சரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். இப்போது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என களத்தில் இறங்க வேண்டும்.

    திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?

    ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்-அமைச்சர் கவுரவம் பார்க்க கூடாது.

    சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களை பற்றி தீர விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இன்று பா.ஜ.க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது.
    • சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் பேட்டியளித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜனதா அணியில் சேரமாட்டார். எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றி, வலிமையான அரசை நடத்தி வருகிறோம். சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம். அடுத்த வாரம் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள் என அண்ணாமலை கேள்வி
    • ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா?

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகரம் என்பது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது என்பது 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அனைவருக்கும் தெரிய வந்தது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் 58 பேர் பலியானார்கள்.

    2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகமை 5 பேரை கைது செய்தது. இதில் கைதான முகமது அசாருதீன், கேரளாவைச் சேர்ந்த அபுபக்கர் ஆகிய 2 பேர் ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்த்திய ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜக்ரன் ஹசீமுடன் தொடர்புடையவர்கள். இவர் பேஸ்புக் மூலம் நிறைய பேரை மூளைச்சலவை செய்துள்ளார்.

    2019 ஏப்ரல் மாதம் 21-ந்தேதி 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதியில் நடத்திய தாக்குதலில் 269 பேர் இறந்தனர். முகமது அசாருதீன், அபுபக்கர் ஆகியோர் இன்று ஜெயிலில் உள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடத்தியபோது அதில் ஜமேசா முபினும் ஒருவர். இவர்தான் கடந்த 23-ந்தேதி கோவையில் வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள்.

    ஜமேசா முபின் 2 நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசை மாற்றியுள்ளார். அதில், எனது இறப்பு செய்தி தெரிந்தவுடன் எனது தவறை மன்னித்து விடுங்கள். எனது குற்றத்தை மறந்து விடுங்கள். எனது இறுதி சடங்கில் கலந்து கொள்ளுங்கள். எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வைத்துள்ளார்.

    இது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அக்டோபர் 21-ந்தேதி இதை அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். சி.சி.டி.வி.யில் அவரது வீட்டில் இருந்து 2 சிலிண்டர்களை நாலைந்து பேர் காரில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

    இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர் விவரத்தையும் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தற்கொலை படை தாக்குதல் என்று போலீசார் எந்த தகவலயும் கொடுக்கவில்லை.

    ஜமேசா முபின் வீட்டில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம் எடுக்கப்பட்டது. அவர் தீபாவளி கொண்டாடவா? அதை வீட்டில் வைத்திருந்தார்.

    ஜமேசா முபின் போலி குண்டுடன் சென்றார். ஆனால் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று டி.ஜி.பி. சொல்கிறார். தமிழக மக்களை போலீசார் முட்டாள் என்று நினைக்கிறார்கள். டி.ஜி.பியும், காவல் துறையினரும் குழந்தை தனமாக பேட்டி கொடுக்கிறார்கள்.

    பால்ரஸ் குண்டு ஏன் வந்தது என்று பத்திரிகையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்டும் சரியான பதில் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் ஏன் வண்டி வெடிக்க வேண்டும். உங்களிடம் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளது. கோட்டைமேடு பகுதியில் இருந்து கார் கிளம்பியது முதல் கார் வெடித்தது வரை சி.சி.டி.வி. காட்சி உள்ளது.

    தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா? இன்னும் ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா? இதற்கு எவ்வளவு நாள் வேண்டும். பழைய தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள்.

    தமிழக உளவு துறையில் தற்போது சிறந்த அதிகாரிகள் இல்லை. தமிழக உளவு துறையில் சிறந்த அதிகாரிகளை முதல்-அமைச்சர் நியமிக்கவேண்டும். தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈேராடு ஆகியவை தற்போது ஐ.எஸ். கலவர பூமியாக மாறி வருகிறது. இந்த தாக்குதலை தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கு உள்ளது.

    4 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவனை போலீசார் கைது செய்தார்களா? இல்லையா? என்பதை தமிழக அரசு சொல்ல வேண்டும்.

    அவர் ஒரு வேளையில் வாங்கி அதை எடுத்துக்கொண்டு இந்து பண்டிகையில் மக்கள் அதிக மாக சேரும்போது அந்த வண்டியை எடுக்க சென்று பாரிஸ் ஸ்டைல் தாக்குதல் போல நடத்த வண்டியை வாங்கினாரா இல்லையா? அந்த வண்டியை வாங்கிய பிறகு வெளியில் உள்ள ஏஜென்சி அவருக்கு எச்சரிக்கை செய்து ஈரோட்டில் ஒருவரை சேலத்தில் ஒருவரை தமிழக போலீஸ் கைது செய்ததா இல்லையா? அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லாவற்றையும் மறைத்து மறைத்து எந்த விஷயத்தையும் வெளியில் தெரியாமல் செய்து வருகிறது. வேகத்தடை மீது கார் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலை பகுதி கழன்று விட்டது. காரை ஓட்டியவர் வெளியே வந்து ஏன் கழன்றது என்று சரி செய்யும் போது அது வெடிக்கிறது.

    இதை ஏன் காவல்துறை மறுக்கிறது. கோவையில் உள்ள ஒரு போலீஸ்காரருக்கு போன் செய்து கேட்டால் அவர் யார் விட்டில் இருந்து வண்டி கிளம்பியது. சி.சி.டி.வி. காட்சியில் என்ன இருக்கிறது? வண்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலைப்பகுதி கழன்றதால் வெடித்தது என்கிறார்.

    ஆனால் இதை தமிழக காவல்துறை மறுக்கிறது. முதல்-அமைச்சரும் மறுக்கிறார். இந்தியாவில் பெங்களூர், ஐதராபாத், புனே, டெல்லி, மும்பை பகுதியில் முன்பு 10 ஆண்டு காலம் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது.

    தீபாவளி நேரத்தில் இதுபோல் நடந்தது. இதில் கொத்துக்கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். 2008 நவம்பர் 26-ல் மும்பையில் தாக்குதல் நடந்தது. இது பெரிய தாக்குதல். எனவே தமிழகத்தில் ஐ.எஸ். தீவிர வாதிகள் ஊடுருவ முயற்சி செய்கிறார்களா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இது தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொண்டால் கோவைக்கு ஒரு என்.ஐ.ஏ. வேண்டும். இந்த விஷயத்தில் போலீசாரை மட்டும் குற்றம் சாட்டுவது வேதனையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
    • கோவை கார் வெடிவிபத்து சம்பவம் அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது என்றார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

    சென்னை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கோவை கார் வெடிவிபத்து சம்பவம் அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புவதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை தமிழ்நாடு பா.ஜ.க. வரவேற்கிறது.

    தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஸ்டெர்லைட போராட்டத்தில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
    • போராட்டத்தை தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, அதை கண்டுபிடிக்க வேண்டும்.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் 5 ஆண்டுகாலம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    'கிணத்தை காணோம்' என்ற வடிவேலு காமெடிபோன்று இருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பது ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை.

    ஒருபுறம் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அது சரியான நடவடிக்கையா தவறான நடவடிக்கையா? என்பது விவாதத்திற்குரிய விஷயம். துப்பாக்கி சூடு ஒருவர் நடத்தியிருக்கலாம். இதில் ஒரு செயின் ஆப் கமாண்ட் இருக்கிறது. ஒரு ஐஜி, டிஐஜி, எஸ்பி என செயின் ஆப் கமாண்டில் அனைவர் மீதும் துறைரீதியான நடவடிக்கையை பரிந்துரை செய்திருப்பது பாஜக ஏற்றுக்கொள்ளாது. செயின் ஆப் கமாண்டில் இருக்கக்கூடிய அதிகாரிகள் என்றால், ஏன் டிஜிபி மீது நடவடிக்கை இல்லை? ஏன் ஏடிஜிபி மீது நடவடிக்கை இல்லை? அப்படியே இழுத்துக்கொண்டே சென்றால் யாராவது ஒரு காவலர் தனக்கு கிடைத்த கவலை தவறாக பயன்படுத்தி துப்பாக்கியால் 17 முறை சுட்டிக்கிறார். அது தவறுதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அதிகாரிகள் மீதும் நடவடிக்கை என்றால் இது எங்கே போய் நிற்கும்? இது டிஜிபி அலுவலகம் வரை வந்து நிற்கும்.

    இந்தியாவில் இதைப்போன்ற நடவடிக்கையை எங்கேயும் பார்த்ததில்லை. யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக எல்லா போலீஸ் அதிகாரிகளையும் பலிகடா ஆக்குவேன் என்று கமிஷன் சொல்லியிருப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

    இதில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதைப்பற்றி ஊடகங்கள் இன்றும் அதிகமாக பேசவேண்டும். ஏனென்றால் கூடங்குளம் போராட்டம் நடக்கும்போது மன்மோகன் சிங் இதை வார்த்தையை சொன்னார். கூடங்குளம் போராட்டம் தூண்டப்பட்டதாக கூறினார். ஸ்டெர்லைட்டுக்கும் அதேதான் நடந்திருக்கிறது. அதைப்பற்றி இந்த ஆணையம் சுட்டிக்காட்டவில்லை. பொத்தாம்பொதுவாக ஒரு வரியில் மிஷனரி தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த மிஷனரியை ஒருங்கிணைத்தது யார்? பணம் எங்கே இருந்து வந்தது? சம்பளமாக தினமும் எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டது? அதைக் காணோம். எனவே, இந்த விசாரணை அறிக்கையைப் பொருத்தவரை, ஆசையைக் காட்டியிருக்கிறதே தவிர, உண்மையை அதில் காட்டவில்லை. எனவே, இதை மாநில அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் அறிக்கையில் உள்ள பாயிண்டுகளை ஆராய்ந்து, தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, அதை கண்டுபிடிக்க வேண்டும்.

    தூத்துக்குடி வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை. கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம். திருமாவளவன், சீமான், கனிமொழி, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா? ஆனால் காவல் துறை அறிக்கை வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும். ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது.

    துப்பாக்கி சூடு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பாரத்ததாக சொன்னார். அது எப்படி தவறு என சொல்ல முடியும்? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தில் பல தகவல்களை டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோர் முதலமைச்சருக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறியதை வைத்து எடப்பாடி பொய் சொன்னார் அல்லது வேண்டுமென்றே வார்த்தையை மாற்றி சொன்னார் என ஆணையம் கூறியிருக்கிறது. அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி பார்த்தால் ஒரு முதலமைச்சர் எடுக்கும் முடிவை கேள்வி கேட்பதற்கு ஆணையத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த தருணத்தில் முடிவு எடுத்திருக்கிறார்.

    நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியது சரியா? எங்களுக்கு தெரியாது. அந்த நேரத்தில் காவல்துறைக்கு வேறு வாய்ப்பு இல்லை, நடத்தியிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய விதம் தவறு. ஆனால், எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொல்வது சரி இல்லை.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
    • முதல் கல்விக்கொள்கை, இரண்டாவது கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு மொழியாக இருந்தது.

    சென்னை:

    மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமான "ரோஜ்கார் மேளா" திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

    சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க தி.மு.க. என்ன செய்துள்ளது? தமிழில் வைப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்சனை? தமிழகத்தில் குறிப்பாக என்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு தமிழ் கட்டாயம் என அறிவிக்கட்டும், நாங்கள் வரவேற்கிறோம். மருத்துவக் கல்லூரிகளில் தமிழ், நாங்கள் வரவேற்கிறோம்.

    புதுச்சேரியில் மருத்துவக் கல்வி தமிழில் கற்பிக்கப்படும் என மூன்று தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்கள். எதையுமே சொல்லாமல் நீங்களாகவே ஆங்கிலத்தை ஊக்குவிக்கிறீர்கள், இந்தியை ஊக்குவிக்கிறீர்கள், தமிழை வளர்க்கவில்லை. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால் திமுகவின் நாடகம் பொய் என தமிழக மக்களுக்குத் தெரியும். அதனால்தான் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் யாரும் இதைப்பற்றி பேசவில்லை. மாணவரணி, இளைஞரணி நீங்கள் பேசுகிறீர்கள். அடுத்து சட்டசபையில் உங்கள் எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள். அதுதானே தவிர, இது மக்கள் பிரச்சனையே கிடையாது. இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அது நடந்தது எல்லாமே காங்கிரஸ் காலகட்டத்தில். அப்போது திமுக கூட்டணியில் இருந்தது.

    முதல் கல்விக்கொள்கை, இரண்டாவது கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயம் மூன்றாவது மொழியாக திணிப்பு மொழியாக இருந்தது. இதற்கெல்லாம் முதலமைச்சர் பதிலே சொல்ல மாட்டார். காங்கிரஸ்காரர்கள் யாரும் பேசமாட்டார்கள்.

    முதல் கல்விக்கொள்கையை நாங்கள் 1968ல் கொண்டு வந்தோம், நாங்கள்தான் மூன்றாவது மொழியாக இந்தியை திணிப்பு மொழியாக வைத்தோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். 1986ல் ராஜீவ்காந்தி இந்தியை கொண்டு வந்தார், அதுவும் திணிப்பு மொழி. 92ல் ரிவிஷன் கொண்டு வந்தார்கள், அதுவும் திணிப்பு. ஆனால் 2019ல் வந்த புதிய கல்விக்கொள்கையில்தான் இந்தி என்ற வார்த்தையை எடுத்துவிட்டு உங்களுக்கு பிடித்த மொழி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஏன் பேச மறுக்கிறார்கள்? ஏன் முதலமைச்சர் பேசவில்லை. ஏன் காங்கிரஸ்காரர்கள் பேசவில்லை? ஏனென்றால் உண்மை அவர்கள் பக்கம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வலுவாக இல்லாத பூத்களை வலுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
    • வாரம் தோறும் பணி விவரங்களை மாவட்ட தலைவர், மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    பா.ஜனதா வலுவாக இல்லாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வருகிற தேர்தலில் கணிசமான எம்.பி.க்களை பெறுவதற்கான வழிமுறைகளை டெல்லி மேலிடம் வகுத்து வருகிறது.

    முதற்கட்டமாக மத்திய மந்திரிகளை மாவட்ட வாரியாக அனுப்பி மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவு மக்களை சென்றடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றிய அறிக்கை இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியிடம் வழங்கப்படுகிறது.

    அடுத்ததாக தேர்தல் பணிகளை பூத் வாரியாக மேற்கொள்ளவும் பார்வையிடவும் முழு நேர ஊழியர்களை நியமிக்கிறார்கள்.

    தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு ஊழியர் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் வரை வழங்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர பெட்ரோல் அலவன்சும் வழங்கப்படும்.

    இவர்கள் தினமும் பூத்களுக்கு சென்று பார்வையிட வேண்டும். கிளை கமிட்டி நிர்வாகிகளிடம் பேச வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் வாக்காளர்களில் 40 சதவீதம் பேரை பா.ஜனதா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வலுவாக இல்லாத பூத்களை வலுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். வாரம் தோறும் பணி விவரங்களை மாவட்ட தலைவர், மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் வரை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஊழியர்கள் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் அனைத்து தொகுதிகளிலும் பணிகள் தொடங்க உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை.
    • பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அதனால், அவர்கள் பணக்காரர்கள் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர், "ஆத்மா மற்றும் பரமாத்மா என்பது மக்களின் நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்பினால் அது தெய்வம். இல்லை என்றால் அது வெறும் கற்சிலை. கடவுள், தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தர்க்கரீதியான முடிவு, நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

    பஜ்ரங்பாலி (ஆஞ்சநேயர்) சக்தி கொண்ட தெய்வம் மற்றும் வலிமையை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லையா? நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிவுக்கு வரும்" என்று கூறினார்.

    பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • 36 மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து தாமரையை மலர வைக்கப் போகிறார்களாம்.
    • இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவோ, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கவோ முடியாது.

    சென்னை :

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்திற்கு 36 மத்திய மந்திரிகள் படை எடுக்கிறார்களாம். மத்திய மந்திரி ஒருவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்பதுபோல பட்ஜெட்டில் சொன்னார். உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மற்ற எதிர்க்கட்சியினரும் ஆதாரம் கேட்டதற்கு பதிலே இல்லை.

    இதுவரை 16 மத்திய மந்திரிகள் வந்து ஆய்வு செய்து, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த முனைப்புடன் பிரசாரம் செய்துவிட்டார்களாம். அடுத்து மேலும் 36 மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து தாமரையை மலர வைக்கப் போகிறார்களாம். இது திராவிடக் கடல், சமூகநீதிக் கடல் இங்கு, ஒட்டுமொத்த மத்திய மந்திரிகளும் தமிழகத்திற்கு வந்து குடியேறினால்கூட, இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவோ, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கவோ முடியாது.

    முதலில் தனித்து நின்று தமிழகத்தில் 5 இடங்களில் வென்று காட்டுங்கள் என்று சுப்பிரமணிய சாமி கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள். சில மாநிலங்களில் ஆளும் கட்சியில் 'குதிரை பேரம்' நடத்துவது போன்று, தமிழகத்தில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியாது. அதில் வெற்றி பெறவும் முடியாது என்பதைப் புரிந்து, ஜனநாயக முறையில் கட்சிப் பணியை நடத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார்.
    • அப்போது பேசிய அவர், நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் இன்னும் தொடர்பில் உள்ளார் என்றார்.

    பாட்னா:

    பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை.

    தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜ.க.வுக்குச் சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார்.

    பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்துள்ளது.

    • சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

    இந்நிலையில், தி.மு.க. அரசைக் கண்டிக்கும் வகையில் வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது.
    • புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.

    புதுடெல்லி:

    13 தனியார் அறக்கட்டளைகள் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இதில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் தி புருடென்ட் மற்றும் ஏ.பி.ஜெனரல் எலக்ட்ரோல் டிரஸ்ட் மட்டும் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 8 அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.464.81 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பதாக கூறி உள்ளது.

    இதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் ரூ.336.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ரூ.18.4 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த அறக்கட்டளை உள்பட மொத்தம் 5 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.481.05 கோடியை வழங்கி உள்ளன.

    இதில் 72 சதவீத நிதியை பாரதிய ஜனதா பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 3.8 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது.

    2020-21-ம் ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து ரூ.258.4 கோடி நன்கொடைகளை வழங்கி உள்ளது. இதில் பாரதிய ஜனதா ரூ.215.5 கோடி(82 சதவீதம்), மற்றும் காங்கிரஸ் ரூ.5.4 கோடி(2.1 சதவீதம்) பெற்றுள்ளன.

    2021-2022-ம் ஆண்டில் காங்கிரசை விட மாநில கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது. இதில் புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.

    புரூடென்ட் அறக்கட்டளையிடம் இருந்து டி.ஆர்.எஸ். கட்சி பெற்ற நிதி ரூ.40 கோடி ஆகும். இதே அறக்கட்டளை சமாஜ்வாடி கட்சி ரூ.27 கோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 கோடி, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரசுக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளது.

    ×