search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95210"

    சொக்கலிங்கபுரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் சிவன் கோவில் அருகில் உள்ள தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அவதியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

    இதனால் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது. சில கண்மாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ந்து விளைச்சல் வரும் சமயத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதமாகி உள்ளன.

    மேலும் பல கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனால் தங்கள் வீடுகளை காலி செய்து மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கொட்டாம்பட்டி அருகே உள்ளது சொக்கலிங்கபுரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் சிவன் கோவில் அருகில் உள்ள தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அவதியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் மெஹ்ராஜ் பேகம், அமானுல்லா ஊராட்சி செயலாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதேபோல் கொட்டாம்பட்டி யூனியன் கசிராயன் பட்டி அருகே உள்ள அருமன்பட்டி பகுதியிலுள்ள பல கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    அதேபோல் மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சி பகுதியை சேர்ந்த கண்மாய் நீர் வெளியேறி கிராமத்திற்குள் புகுந்தது.

    இதுபற்றி தகவலறிந்த மேலவளவு காவல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்தப்பகுதிகளில் மக்களை மீட்டு அவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடம் மற்றும் நாடக மேடைகளில் தங்க வைத்துள்ளனர்.

    அந்தப்பகுதி மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வழங்கி வருகிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உடனடியாக இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மலம்பட்டி கணேசன் என்பவரின் வீடும், ஒத்தக்கோவில்பட்டியில் அடைக்கண் என்பவரது வீடும் இடிந்து சேதமானது.

    இதே போல் கிடாரிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதே போல் திருமங்கலம் மற்றும் பேரையூரில் பெய்த கனமழையால் பேரையூர் ஜவகர் தெருவில் ஞானம்மாள் (70) என்பவரின் வீடு மற்றும் கூடம்மாள் (54) என்பவரது வீடும் இடிந்து சேதமாயின.

    உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஜென்னட்மேரி (40) என்பவரின் வீடும் இடிந்து விழுந்தது.

    பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் என்ற பகுதியில் விவசாயி ஒருவர் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டு முன்பு கட்டியிருந்த ஒரு ஆட்டுக்குட்டியை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை தாக்கியது. இதையடுத்து ஆடுகள் சத்தம் போட்டது. இதையடுத்து வீட்டுக்குள் படுத்திருந்த விவசாயி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து கொன்று ரத்தத்தை குடித்துக் கொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆட்டுக்குட்டி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை கால்நடைகளை தாக்கி வேட்டையாடி வருகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

    இது பற்றி தெரிய வந்ததும் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயக்கோபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆம்போதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தையொட்டி 8 கி.மீ தொலைவில் சிறுமுகை வனப்பகுதி உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த சிலர் ஒடை அருகே மாடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள் உடனடியாக தங்கள் கால்நடைகளை அவசர, அவசரமாக பட்டிக்கு கொண்டு வந்து அடைத்தனர். சிறுத்தை வந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து மக்கள் தனியாக செல்வதற்கும், குழந்தைகளை வெளியில் விடவும் மிகவும் அச்சப்படுகின்றனர்.

    இதற்கிடையே நேற்று காலை மீண்டும் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமுகை வனசரகர் செந்தில் குமார் தலைமையிலா வனத்துறையினர், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையிலான போலீசார் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அதனை தேடி பார்த்தோம். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் பதிவு செய்தோம். ஆய்வில் அது காட்டுப் பூனையின் கால்தடம் போல் தெரிகிறது.

    எனினும் இன்னும் அது எந்த விலங்கு என்று உறுதிபடுத்தப்படவில்லை. கால்நடைகளை சிறுத்தை தாக்குவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக ஆம்போதி மற்றும் அக்கரை செங்கம்பள்ளி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    ராமநாதபுரம் அருகே வெங்குளம் கிராமத்தில் குடிநீருக்காக கிராம மக்களே நிதிதிரட்டி கிணறுதோண்டி உள்ளனர்.
    ராமநாதபுரம்:

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளா ஊராட்சி. இங்குள்ள வெங்குளம் கிராமத்தில் கடந்த காலங்களில் யூனியன் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதன்பின்னர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் போடப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. கண்மாயில் உள்ள கிணற்றில் தண்ணீர் வறண்டு ஊற்று ஊறியதும் ஒரு மணி நேரம் காத்திருந்து மக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கிராம மக்கள் குடிப்பதற்கும், அன்றாட உபயோகத்திற்கும் தேவைப்படும் தண்ணீருக்காக அவதிப்படும் நிலையை கண்ட இளைஞர்கள்,கிராமமக்கள் தாங்களே கிணறு தோண்ட முடிவு செய்தனர். இதற்காக இளைஞர்கள், கிராம மக்கள் நிதி அளித்து கண்மாய்க்கு 2 கிணறுகள் தோண்டி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் கிணறுகளை தோண்டியதில் ஒரு கிணற்றில் உவர்ப்பு தன்மையுடனும், மற்றொன்றில் ஓரளவு நல்ல தண்ணீரும் கிடைத்துள்ளது.

    தற்போதைய நிலையில் இந்த கோடை வறட்சியை இந்த தண்ணீரை கொண்டு சமாளித்து கொள்ளலாம் என்று கிராமத்தினர் தெரிவித்தனர். தண்ணீருக்காக அரசை நம்பி எதிர்பார்த்து காத்திருக்காமல் வெங்குளம் கிராம மக்கள் தாங்களே நிதி திரட்டிகிணறு தோண்டி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது பாராட்டுக்குரியது.
    பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை எடுத்து மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் காலி குடங்களுடன் மக்கள் தண்ணீர் லாரிக்காக வீதிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட திரிசூலம் அருகே உள்ள ஈஸ்வரி நகர் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு பைப்புகளில் தண்ணீர் வராததாலும், டேங்கர் லாரிகளில் நீர் சப்ளை இல்லாததாலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈஸ்வரி நகர் பகுதி மக்களின் ஒரே நம்பிக்கையாக அப்பகுதியில் உள்ள கிணறு உள்ளது. அதில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    நெரிசலை தடுப்பதற்காக பொதுமக்களே வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல் மூலம் தண்ணீர் எடுப்பவர்களின் வரிசை தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் மட்டும் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும். ஒரு குடும்பத்துக்கு 4 குடம் தண்ணீர் எடுக்கலாம்.

    இதற்காக கிணற்றை சுற்றி கம்பிகள் அமைத்து உள்ளனர். அதில் 13 கப்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

    தேர்ந்து எடுக்கப்படும் குடும்பத்தினரில் 60 பேர் காலை 6 மணிக்கும், 80 பேர் மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்த கிணறு 30 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டது.

    நாங்கள் இந்த கிணற்றை தூர்வாரி பயன்படுத்தி வருகிறோம். தற்போது கிணற்றில் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    விருத்தாசலம் அருகே செம்மண் கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக இப்பகுதி மக்களுக்கு செம்மண் கலந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் அலைந்து திரிகின்றனர். அதனால் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அனுமார் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக அந்த பகுதிக்கு மின்சாரம் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 2 முறை புகார் மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.  
    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    துணை மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. பழுதான வயர்களை சரி செய்வது, மரங்கள், விளம்பர பலகைகள் போன்றவை மின் வயர்கள் செல்ல இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றுவது மிக முக்கியமான பணியாகும்.

    மேலும் இந்த பராமரிப்பு பணியின் போது அனைத்து மின் கம்பங்கள் மற்றும் வயர்கள் சோதனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வருகிறது.

    நேற்று முன் தினம் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர். கொசுக்கடியில் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர். மேலும் பகல் பொழுதிலும் அவ்வப்போது மின்சாரம் வருவதும் தடை படுவதும் என இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டுக்குள் இருக்க முடியவில்லை.

    நேற்றும் இந்த நிலை தொடர்ந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின் விசிறி ஓடிய போதும் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் மின் தடை மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிறு வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மின் தடையால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக தடையற்ற மின்சாரம் வினியோகம் இருந்தது. ஆனால் தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின் வினியோகம் நிறுத்தப்படுவதால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அரசு உதவித் தொகைக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க செல்லும் போது மின் வினியோகம தடைபடுவதால் அந்த பணிகள் பாதிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் நேரம் விரயமாகிறது. விடுமுறை எடுத்து இந்த பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் கடுமையாக சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதைப்பற்றி கவலை படாமல் அலட்சியமாக உள்ளனர். அவர்களிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

    விருத்தாசலம் அருகே நள்ளிரவில் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை காந்தி (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் கடத்தியதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த நேமம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று நள்ளிரவு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தில்லை காந்தியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியதாக தான் தில்லைகாந்தியை பிடித்து வந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உள்ளோம். அவரை விட முடியாது என்று போலீசார் கூறினர். இதனால் பொதுமக்கள் நள்ளிரவு 12 மணி வரை போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கோட்டயம் அருகே போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மன்னர்காடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (33). காய்கறி வியாபாரி.

    கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் நவாஸ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தகராறு செய்தார். இது குறித்து மன்னர்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவாசை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் அடைத்தனர்.

    நேற்று மதியம் நவாஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இந்த நிலையில் அவர் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை போலீசார் தேடி சென்றனர். அப்போது நவாஸ் போலீஸ் நிலைய கழிவறையில் வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நவாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் நவாஸ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து மன்னர்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    இந்த தகவல் மாநில டி.ஜி.பி. லோகநாத் ஜெகதாவுக்கு கிடைத்தது. அவர் நவாஸ் மரணம் குறித்து விசாரணை நடத்தவும், அப்போது பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

    போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட நவாஸ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

    குடிநீர் வாரியம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.

    பெரம்பூர் தீட்டிதோட்டம் 1-வது தெரு முதல் 7-வது தெரு மற்றும் ஜானகிராமன் நகர் பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. குழாய்களில் குடிநீர் வரும்போது கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நிறம் மாறி வரும் தண்ணீர் குடிக்க இயலாத நிலையில் இருப்பதால் அதனை வீட்டு உபயோகத்திற்குதான் பயன்படுத்தும் நிலை உள்ளது.


    குடிநீர் தேவை அதிகரித்து வரும் கோடை காலத்தில் இப்பிரச்சினையை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பேப்பர் மில் சாலைக்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் வழியில் நிறுத்தப்பட்டன. கார், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத படி நின்றன.

    தகவல் அறிந்து செம்பியம் மற்றும் திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    ஆனாலும் 2 மணி நேரம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாற்று பாதை வழியாக சென்றனர்.

    சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையால், லாரி தண்ணீருக்கு பொதுமக்கள் 12 நாட்களாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் கடும் கோடையால் வறண்டு விட்டன.

    பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் தண்ணீரை தேடி வீதி வீதியாக அலைந்து வருகிறார்கள்.

    தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர், வீராணம் தண்ணீர், திருவள்ளூர் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். இருந்த போதிலும் குடிநீர் பற்றாக்குறையால் சென்னை மாநகர பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர மக்களுக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. லாரி தண்ணீருக்கு பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    குடிசை பகுதி மக்களுக்கு லாரி தண்ணீர் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 3282 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    வீடுகளுக்கு லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்துள்ளவர்கள் 12 நாட்களாக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து கோடம்பாக்கத்தை சேர்ந்த குடியிருப்புவாசி கோபி கூறியதாவது:-

    பருவமழை சரியாக பெய்யாததாலும் கடும் கோடை வெயிலாலும் சென்னை மாநகர மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது.

    குடிதண்ணீர் தேவைக்காக லாரி தண்ணீரை நம்பி இருக்கிறோம். லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்து 12 நாட்களுக்கு காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அன்றாட பணிகள் செய்ய முடியவில்லை. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கூடுதல் லாரிகள் மூலம் வீடுகளுக்கு லாரி தண்ணீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×