என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    • சாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
    • அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பல்வேறு தலபெருமைகளை உடைய இந்த கோவிலில் அபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. 10 நாள் உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் அபிராமி அம்மன் எழுந்தருளிய தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.வீடுகள் தோறும் தீபாரதனை, அர்ச்சனை செய்து குடியிருப்பு வாசிகள் வழிபாடு செய்தனர்.

    அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது.
    திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வழிபாட்டிற்காக 27 அடி உயரமுள்ள 1800 எடை கொண்ட ஒருவேல் யாத்திரையாக எடுத்துவரப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து தமிழ் கட்சி மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார், பிரதமரின் மக்கள் நலத்திட்ட பிரசார இயக்க மாநிலத் தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்துதமிழ் கட்சி தலைவர் ராம். ரவிக்குமார் கூறும்போது, தமிழ்நாட்டில் வழிபாட்டின் மூலமாக மக்களிடம் ஆன்மிக எழுச்சியை உருவாக்க வேண்டும். பக்தி உடையவர்களை இந்து சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் வேல் வழிபாட்டு மன்றங்கள் உருவாக்க வேண்டும். அதர்ம சக்தி அழிந்து தர்ம சக்தி மேலோங்க வேண்டும்.

    இதற்காக அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது. தற்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து பூஜை செய்யப்பட்டது. நாளை (இன்று) பழனி முருகன் கோவிலில்பூஜை செய்யப்படுகிறது. மேலும் மற்ற முருகபெருமானின் படை வீடுகளுக்கும் வேல் வழிபாடு யாத்திரை செல்ல உள்ளோம் தெரிவித்தார்.
    பழமையான அகத்தீசுவரர் கோவிலின் பாதாள ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அந்த நேரத்தில் கோவிலின் வெளியே பக்தர்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
    மதுரை மாவட்டம் திருச்சுனை கிராமத்தில் பழமையான அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை மதுரை மண்டல அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக கோவிலை ஆய்வு செய்தபோது உற்சவர்கள் சிலைகள் இல்லாமல் இருந்ததும், கோவில் கருவறை அருகே ரகசிய பாதாள அறை ஒன்று இருந்ததும் தெரியவந்தது.

    இந்த அறை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கோவிலின் ரகசிய அறை பூட்டை உடைத்து திறந்தனர். அங்கு பழமை வாய்ந்த மூஷிக வாகன விநாயகர் மற்றும் சண்டிகேசுவரர், அம்மன் சிலைகளும், சூலாயுதம், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களும் அங்கிருந்தன. அவை எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டன.

    கோவிலின் ரகசிய பாதாள அறை திறக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். ஆனால் பாதுகாப்பு கருதி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    ஆந்தையை தன்னுடைய வாகனமாக கொண்டு, அதன் மேல் வீற்றிருக்கும் இந்த யோகினி, போர்க்களத்திற்கு தயாராவது போல் காணப்படுகிறார். கைகளில் வாள், கேடயம் தாங்கியிருக்கிறார்.
    இந்துமத வழிபாடுகளில் முக்கியமானது, சக்தி எனப்படும் அம்பாளுக்குரிய ‘சாக்தம்’ வழிபாடு. அந்த சக்தி வழிபாட்டில், பரிவார தேவதைகளாக விளங்கும் யோகினிகள் மிகவும் முக்கியமானவர்கள். அன்னை பராசக்தி தன்னுடைய உடலில் இருந்து, 8 யோகினிகளை தோற்றுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    அந்த 8 யோகினிகளும், தலா 8 பேர் வீதம் 64 யோகினிகளாக மாறினர். இவர்கள் அனைவரும் 64 கலைகளை குறிப்பிடுவதாகவும் சொல்வதுண்டு.

    அதில் ஒரு வித்தியாசமான யோகினி தேவியின் வடிவத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆந்தையை தன்னுடைய வாகனமாக கொண்டு, அதன் மேல் வீற்றிருக்கும் இந்த யோகினி, போர்க்களத்திற்கு தயாராவது போல் காணப்படுகிறார். கைகளில் வாள், கேடயம் தாங்கியிருக்கிறார்.

    இரண்டு விரல்களால் ‘விசில்’ அடிக்கும் தொனியில் காணப்படுகிறார். போர் தொடங்குவதற்கு முன்பாக எழுப்பப்படும் ஒலியை, இப்படி விரல்கள் மூலம் இந்த யோகினி எழுப்புவதாக கருதப்படுகிறது.

    உத்தரபிரதேசம் அல்லது மத்திய பிரதேசத்தில் இருந்த, 10-11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை, தற்போது அமெரிக்காவின் சான் அன்டனியோ கலை அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
    எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.
    இன்று (சனிக்கிழமை) எம துவிதியை தினமாகும். இந்த தினத்தை சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை தினமாக ஆதி காலத்தில் இருந்து கொண்டாடுவதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சூரியனின் குழந்தைகளான எமனும், யமுனையும் அண்ணன், தங்கையாகும்.

    இவர்களது அண்ணன், தங்கை பாசம் மிக உயர்வானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யமுனாதேவி ஒரு சமயம் தனது சகோதரன் எமனை தனது வீட்டிற்கு வரவழைத்தாள். எமனும் தனது சகோதரியின் அழைப்பை ஏற்று நிறைய உடைகள், நகைகள் முதலிய சீர்களுடன் யமுனையின் வீட்டிற்குச் சென்றார்.
    யமுனையும் தனது கையாலேயே பலவிதமான உணவு வகைகளை தயார் செய்து சாப்பிடச் செய்து சகோதரனை உபசரித்தாள்.

    எமனும் பரிசுகளை கொடுத்து சகோதரியை மகிழ்வித்தார். அந்த திருநாள்தான் தீபாவளிக்குப் பிறகு வரும் எம துவிதியை ஒற்றுமையை வளர்க்கும் நன்னாள் என்று மரமாகி உள்ளது.

    இந்த நாளில் ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் தனது வீட்டில் சாப்பிடக் கூடாது. தனது உடன்பிறந்த சகோதரியின் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். சகோதரிக்கு நிறைய பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். பெண்ணாகப் பிறந்தவர்கள் தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து விருந்து சாப்பாடு போட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதனால் ஒருவருக்கொருவர் அன்பு வளரும். இருவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், உடல் வலிமை, செல்வம் முதலிய நன்மைகள் உண்டாகும். எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.

    சகோதரிகளின் வீட்டிற்கு செல்ல முடியாதவர்கள் தனது சகோதரிக்கு சிறிய பணம், பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம். உடன்பிறந்த சகோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா பெண், மாமா பெண், பெரியம்மா பெண், சின்னம்மா பெண் முதலியவர்களை உடன் பிறந்த சகோதரியாக பாவிக்கலாம். எந்த ஒரு உபவாசமோ, பூஜையோ, மந்திரமோ இல்லாத சுலபமாக செய்யப்படும் இந்த எம துவிதியை விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு நன்மையை அடைவோம்.
    இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்
    ஆன்மிகத்தில் ‘பணிவு’க்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிவு வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்து விடுகிறது. பணிவு இல்லாவிட்டால், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளை உறவு, ஆசிரியர் - மாணவர் உறவு, அதிகாரி - பணியாளர் உறவு என அனைத்தும் சிதறிப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் சமுதாயத்திலும், குடும்பத்திலும் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்சினைகள் உருவாகும். எனவே எங்கும், எவ்விடத்திலும், எப்போதும் பணிவோடு இருங்கள்.

    ‘சைவ சமயம்’ என்பதற்கு ‘தாழ்வு என்னும் தன்மையோடு சைவமாம் சமயம் சார்தல்’ என்று சைவ சமயத்தினர் இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள். தாழ்வு, அடக்கம், பணிவு போன்றவை, சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று அந்த சமயம் வலியுறுத்துகிறது. பணிவு என்ற ஒன்று அமையும்போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெறுவதாகவும் அந்த சமயம் சுட்டிக்காட்டுகிறது. “புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு” என்பது கிருஷ்ண சைதன்யரின் முக்கியமான உபதேசமாகும்.

    விவேகானந்தரின் குருவாக இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பணிவு குறித்து இவ்வாறு சொல்கிறார். “மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்” என்கிறார்.

    நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தால், அதுவாகவே தலையை சாய்க்கும். அதுபோல் வாழ்க்கையில் உயர உயர மனிதர்களிடமும் பணிவு வளர வேண்டும். வாழ்க்கையில் உயர்வுபெற விரும்புபவன், பணிவுடையவனாக இருக்க வேண்டியது அவசியம். எல்லோருக்கும் பணிவு இருக்க வேண்டும் என்பதைத்தான், திருவள்ளுவர் தன்னுடைய குறளில், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்று கூறுகிறார்.
    திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று பொருள். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பதாகும்.
    1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.

    அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப, அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

    நற்பலன் தரும் திதிகள்:

    ஞாயிறு-அஷ்டமி,
    திங்கள்-நவமி,
    செவ்வாய்-சஷ்டி,
    புதன்-திரிதியை;
    வியாழன்-ஏகாதசி,
    வெள்ளி-திரயோதசி,
    சனி-சதுர்த்தசி திதி.

    இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதில் வெற்றியே கிட்டும்.

    சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:

    ஞாயிறு-சதுர்த்தசி,
    திங்கள்-சஷ்டி,
    செவ்வாய்-சப்தமி,
    புதன்-துவிதியை,
    வியாழன்-அஷ்டமி,
    வெள்ளி-நவமி,
    சனி-சப்தமி.

    மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
    ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் சாம்பராணி புகை போட்டு வந்தால் பல வகையான நன்மைகள் கிடைக்கும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
    குங்கிலியம் என்னும் சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது, தூபம் என்று பொருள். இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    குங்கிலியம் என்னும் சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது, தூபம் என்று பொருள். இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    * ஞாயிற்றுக்கிழமை - ஆத்ம பலம், செல்வாக்கு, புகழ் உயரும். ஈஸ்வர அருள் கிடைக்கும்.

    * திங்கட்கிழமை - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி கிடைக்கும். அம்பாள் அருளைப் பெறலாம்.

    * செவ்வாய்க்கிழமை - எதிரிகளின் போட்டி, பொறாமை நீங்கும். தீய - எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான கண் திருஷ்டி கழியும். கடன் நிவர்த்தியாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.

    * புதன்கிழமை - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல சிந்தனை வளரும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சுதர்சனரின் அருளைப் பெறுவீர்கள்.

    * வியாழக்கிழமை - அனைத்து விதமான சுப பலன் களையும் பெறுவீர்கள். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

    * வெள்ளிக்கிழமை - லட்சுமி கடாட்சம் இல்லத்தில் நிறையும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

    * சனிக்கிழமை - சோம்பல் நீங்கும். துன்பங்கள் அனைத்தும் விலகும். சனீஸ்வரன் மற்றும் பைரவரின் அருளைப் பெறலாம்.

    மிக அரிதான வல்லகி யோகமான இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். நற்குணங்கள் காரணமாக, பல வகை நன்மைகளை வாழ்வில் பெறுவார்கள்.
    செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

    ஒருவரது சுய ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களும், ஏழு ராசிகளில், ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருப்பது வல்லகி யோகத்தை ஏற்படுத்துகிறது. மிக அரிதான யோகமான இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    நற்குணங்கள் காரணமாக, பல வகை நன்மைகளை வாழ்வில் பெறுவார்கள். சுய முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதுடன், தாம் வசிக்கும் பகுதியில் பிரபலம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெற்ற அன்னையிடமிருந்து பல உதவிகளை பெறும் யோகமும் இவர்களுக்கு உண்டு. திருமண வாழ்க்கை இனிமையாக அமையப்பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

    உழைப்பால் உயர்ந்து, வீடு, வாகனம், அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து என்று வளர்ச்சி காண்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டதால், சிலர் இசைக்கலைஞர்களாகவும் இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்பட துறைகளில் ஈடுபட்டு பொருள் மற்றும் புகழ் பெறுவார்கள்.

    சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது.
    ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.

    சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது. வசுமதி என்றால் செல்வச்செழிப்பு என்பது பொருளாகும். ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசிக்கு, சுப கிரகங்களாக சொல்லப்படும் புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உபஜெயஸ்தானம் என்ற வீடுகளான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பது வசுமதி யோகம் ஆகும்.

    இந்த யோகத்தை அடைந்தவர்கள் சுய முயற்சியின் மூலம் வீடு, நிலம், வாகனம் ஆகிய நலன்களுடன் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். மேற்குறிப்பிட்ட உபஜெய ஸ்தானங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் இருந்தால் நடுத்தரமான பொருளாதார நிலையையும், ஒரு சுபக்கிரகம் இருந்தால் சாதாரண பொருளாதார நிலையும் இருக்கும் என்பது ஜோதிட விதி. சுபக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் யோகம் வலிமையாக இருக்கும்.

    ஆனால், அவை நீச்சம், பகை பெற்று இருந்தால் யோகம் பெரிய அளவில் இருப்பதில்லை. வசுமதி யோகம் அமைந்தவர் வாழ்க்கையில் தனம் சேர்வது உறுதி என்பது ஜோதிட வல்லுனர் வராகமிகிரர் கருத்தாகும். அதே சமயம், அந்த சுபக்கிரகங்கள் கண்டிப்பாக பாவ கிரகங்களின் தொடர்பு பெறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோகத்தின்படி ஒருவரது ஜென்ம லக்னம் அல்லது ராசிக்கு, குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்து, சுக்கிரன் அல்லது புதன் சேர்க்கை பெற்றிருப்பது விசேஷம் ஆகும்.
    ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. லட்சுமி தேவி எந்த இடத்தில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறாள் என்று அறிந்து கொள்ளலாம்.
    லட்சுமிதேவி வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகிறாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் பிரிதி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

    திருமால் கோவில்களில் பகவத் சன்னதியில் உள்ள பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

    ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. மாதுளங்கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மை என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகா ராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள் கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் அவள் போற்றப்படுகிறாள்.
    இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை தாகத்தில் வாட்டி வதைக்கிறது. அணைகளும், நதிகளும் வறண்டு போய்விட்டன. பயிர்கள் வாடுகின்றன. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என பல இடங்களில், இறைவனை நோக்கி வேண்டி நிற்கிறார்கள், விவசாய பெருமக்கள்.

    மக்களுக்கு மட்டும்தானா தாகம். உலகில் வாழும் ஜீவராசிகளுக்கெல்லாம் தாகம்தான். அந்த தாகம் தீருமா? மழை வருமா? என இறைவனை வழிபடும் ஆன்மிக அன்பர்களும் ஏராளம். இப்படி மழைக்காக நம் நாட்டில் பல வகையான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கொஞ்சம் வித்தியாசமானது, குற்றால மலை உச்சியில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு செய்யும் பூஜை. இந்த பூஜையில் சப்த ரிஷிகளில் தலைமை ரிஷியான அத்ரி மகரிஷிக்கும், பதினெட்டு தவ முனிவர்களில் தலைமை முனிவரான அகத்தியர், அவரது சீடர் தேரையர் ஆகியோருக்கு வழிபாடு நடைபெறுகிறது.

    தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் தோன்றும் ஒவ்வொரு நதியும் தமிழக மக்கள் வளத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் வானம் பொய்த்து விட்டால், பூமி வறண்டு விடும். அந்த வேளையில் நமக்கு ஒரே நம்பிக்கை இறைவழிபாடுதான். அப்படி ஆண்டு தோறும் மழைக்காக நடத்தப்படும் வழிபாடுகளில் ஒன்றுதான் இது.

    குற்றால மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பழங்கள் உள்பட பூஜை பொருட்களை சேகரித்துக்கொண்டு கடுமையான மலை பயணத்துக்கு தயாராகி விடுவார்கள். இந்த பயணம் குற்றாலம் மலையின் உச்சியில் உள்ள தெற்கு மலை எஸ்டேட் ஆன்மிக பயணம் என அழைக்கப்படுகிறது. நினைத்தநேரத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. வருடத்துக்கு ஒரு நாள் வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பயணத்தை தொடர முடியும். இதனால் மழை வேண்டி பூஜை செய்ய வனத்துறை அனுமதி பெற்று கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    சிற்றாறு, மலை முகட்டில் ஓடி வரும் கரை வழியேதான் இந்த பயணம் செல்கிறது. பல இடங்களில் இந்த நதியில் இறங்கி, ஏறி மறுகரை சென்று, வளைந்து நெளிந்து பள்ளதாக்கில் ஏறி சென்றுதான் பூஜை செய்கிறார்கள்.

    குற்றாலம் மெயின் அருவியும், அருகில் உள்ள சிற்றருவியும், புலியருவியும் பலரும் அறிந்த அருவிகள். ஆனால் அதைத் தாண்டி மலை பயணத்தைத் தொடர்ந்து, செண்பகாதேவி அம்மன் கோவிலும், அதன் அருகே ஒய்யாரமாய் விழும் செண்பகாதேவி அருவியும் இன்னும் கூட சிலர் அறியாத இடமாக உள்ளது. இவ்விடங்கள் எல்லாமே தவசித்தர்கள் வாழும் பகுதி என்று சொல்கிறார்கள். அகத்தியர், குற்றாலத்தில் பெருமாளை, சிவலிங்கமாக மாற்றிவிட்டு, செண்பகாதேவி காட்டு வழியாக அத்ரிமலை மற்றும் பொதிகை மலைக்கு சென்ற வழித்தடம்தான் இது.

    இவ்விடத்தில் அபூர்வக் குகைகள் பல உள்ளன. இங்கு தட்சிணாமூர்த்தி குகை, வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தவமேற்றிய கசாய குகை, செண்பகாதேவி அருகில் உள்ள அகத்தியர் குகை உள்பட பல குகைகள் தவத்திற்கு ஏற்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 18 சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் சப்த ரிஷிகள் உள்பட பல ரிஷிகளும் தவமிருந்த இடம். சித்திரா பவுர்ணமி அன்று இந்த செண்பகாதேவி அருவியில் அம்மன் நீராட சப்பரத்தில் வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

    தட்சிணாமூர்த்தி குகையில் அமர்ந்திருந்தால், அருவியே நமது மேல் கொட்டுவது போன்ற அற்புதத்தை உணரலாம். தொடர்ந்து கரை வழியே சென்றால் கசாய குகை. அதில் சித்தர்கள் நீராடும் தடாகம் இருக்கிறது. மீண்டும் நதியில் பயணத்தை மேற்கொண்டால், அற்புதமான தேனருவி காட்டுக்குள் நுழையலாம். தேனருவி என்பது ‘சிவமதுகங்கை’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு சித்ரா பவுர்ணமி தோறும் ஈசனை, அம்பாள் உள்பட தேவர்கள் அனைவரும் தேனால் அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை. எனவேதான் இங்குச் சித்ரா பவுர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. இந்த மஞ்சள் மழை துளிகளை, அங்குள்ள பாறைகளில் காணலாம். இப்போதும் கூட வெள்ளை வேஷ்டியை முதல் நாள் விரித்து வைத்து விட்டு, மறுநாள் போய் பார்த்தால் அந்த வேஷ்டி மஞ்சளாக இருப்பது அதிசயம்தான். இதுபோன்ற அபூர்வ இடங்களை கொண்டது தான் சித்தாற்றங்கரை. தற்போது தேனருவி செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது.


    தண்டத்திற்கு நடைபெறும் பழ அபிஷேகம்

    இந்த நதிக்கரையில்தான் மழை வேண்டி நடைபெறும் அபூர்வ பூஜை நடக்கிறது. இதற்காக காலை 7 மணிக்கு ஊர்மக்கள் குற்றாலம் சிற்றருவி அருகே ஒன்று கூடுவார்கள். பூஜை பொருட்களை எல்லாம் டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஓரளவு வயதானவர்கள் இந்த டிராக்டரில் ஏறி கொள்வார்கள். மற்றவர்கள் நடைபயணம்தான். முதலில் நாம் செல்வது, ‘பிரிஞ்சு பார்த்தான் பாறை' (இந்த பாறையில் இருந்து குற்றாலம் அழகை ரசிக்கலாம்). தொடர்ந்து மூலிகை தோட்டம் அதைத் தாண்டி மேலே செல்லவேண்டும்.

    டிராக்டர் வழித்தடத்தில் சென்றால் நேரம் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழியாக உள்ள ஏற்றம் வழியாக ஏறி காத்தாடி மொட்டை என்ற பகுதிக்கு வந்து, மேலே ஏறிச்செல்லும் போது புங்கன்சோலை வருகிறது. அடர்ந்த காடு. எங்கும் வித்தியாசமான பறவைகளின் இன்னிசை. சோர்வு தெரியாமல் இருக்க நமது முகத்தில் அடிக்கும் தென்றல், புது உற்சாகத்தைத் தரும். இந்தச் சோலையை அடுத்து மேலே ஏறினால் ‘நெல் தீ மொட்டை' என்ற பகுதி வருகிறது. அங்கு உள்ள மஞ்சள் மாரியம்மனை வணங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்.

    தெற்கு மலை எஸ்டேட்டுக்குள் நுழைகிறோம். இது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட். இங்கு மங்குஸ்தான் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் தேனருவிக்கு மேல்தளத்தில் தான் இவ்விடம் உள்ளது. உள்ளே நுழைந்து சிற்றாற்றை கடக்கிறோம். அங்கு நிறைய நறுவளி செடிகள் ஆற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் காலை வைத்தால் ஆன்மிக அதிர்வை உணரலாம். இந்த அதிர்வுதான் குற்றாலத்தில் குளித்தால் மனநோய் தீருகிறது என்பதைச் சொல்லும் அறிவியல் உண்மை.

    அடுத்து தபால்காரன் பாறை. அந்த காலத்தில் குற்றால மலைக்கு மேலே கண்ணாடி பங்களாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு, தபால் வந்தால் இந்த பாறையில் தான் உள்ளூர் தபால்காரர்கள் கொண்டு வந்து வைப்பார்களாம். ஆங்கிலேயர்கள் குதிரையில் வந்து தபாலை எடுத்து செல்வார்களாம். தபால்காரன் பாறையை அடுத்து, பரதேசி புடை உள்ளது. இதை அடைவதற்கு மீண்டும் சிற்றாற்றின் எதிர்கரைக்கு வரவேண்டும். இந்த புடையானது அகத்தியர் தவம் இருந்த பகுதி.

    தொடர்ந்து பயணித்தால், ‘யானை உச்சான் பாறை' வரும். யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று இந்த பாறைகளில் உரசிக்கொண்டு நிற்பதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்து யானை ஓய்வெடுக்கும் ‘யானை அசண்டி.' அதைத் தாண்டினால், ‘சென்ற ராமன் கல்' என்ற இடம் உள்ளது. இவ்விடம் ராமன் சீதாபிராட்டியுடன் கடந்து சென்ற இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அகத்தியர், ராவணன் இசைப் போட்டியின்போது உருகிய மலை இருக்கிறது. அதன் அடிவாரத்தில் சிற்றாற்றங்கரை நடுவில் அகத்தியர் பாதம் உள்ளது. இங்கு சென்று அகத்தியர் பாதத்தினை வணங்கி விட்டு மீண்டும் பயணிக்கிறோம்.

    குற்றால மலையில் 2,500 மூலிகை செடிகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் வாசம் இவ்விடத்தில வீசுகின்றன. இந்த வழியாக நாம் கடந்து சென்றாலே போதும், நமது உடலில் உள்ள நாள்பட்ட நோய் தீர்ந்து விடும். தொடர்ந்து ‘அரிசிப்பட்டிப் பாறை.’ அதைத் தாண்டி கடினமானப் பயணம். இரண்டு முறை ஆற்றைக் கடந்து சென்றால் ஒரு பாறையில் போய் நிற்கிறோம். அந்தப் பாறையில் 2 அடியில் தண்டம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் அகத்தியர், அத்ரி, தேரையர் ஆகிய மகா முனிவர்கள் தவம் செய்வதாக நம்பப்படுகிறது.

    தண்டமானது, பாறை குழியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்றாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் இந்த தண்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது மிகப்பெரிய அதிசயம்தான். அங்கு தான் மழை வேண்டி சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இந்தபூஜையில் ரசமும், ரொட்டியும்தான் சிறப்பு பிரசாதம். இந்த பிரசாதத்தை தயார் செய்யும், பூசாரி வாயை கட்டிக்கொண்டு செய்கிறார்.

    அதன் பின் தண்டத்துக்கு சிறப்பு பூஜை அலங்காரம், ஆராதனை நடைபெறும். கூடி நின்ற மக்கள் எல்லோரும் அந்த தண்டத்தின் முன்ப விழுந்து நெடுஞ்சாண் கிடையாய் கிடந்து மழை வேண்டி பூஜை செய்வார்கள். அதில் சிலர் இறைவனின் அருள் வந்து, அருள்வாக்கும் கூறுவார்கள். மதிய வேளைக்குள் இந்த வழிபாடுகள் முடிவடைந்து விடும். அதன்பின் அனைவரும் மலையில் இருந்து கீழே இறங்குவார்கள். அவர்கள் கீழே வருவதற்குள் மழை பெய்யும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கண்கூடாக காணும் உண்மை.

    இந்த பூஜைக்கு பின்னர் தான், விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான விவசாய வேலையை ஆரம்பிக்கிறார்கள். ஆச்சரியமான இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் வந்து, காலை 7 மணிக்கு தங்களது ஆதார் அட்டையை வனத்துறையிடம் காண்பித்து, இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம்.
    ×