என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும்.
    • காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையால் கட்சி வலுவடையும் என்று நம்புகிறேன்.

    புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது.

    காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன். இப்போது இந்தப் பொறுப்பில் இருந்து விடுபடுவதால் நிம்மதியாக இருக்கிறேன்.

    காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மறைந்த தலைவர் ஜெகஜீவன் ராமுவுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற 2-வது தலித் சமூக தலைவர் கார்கே ஆவார்.
    • காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

    அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த 17-ந் தேதி நடந்தது. இந்த பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே- திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

    கடந்த 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று புதிய காங்கிரஸ் தலைவரானார். அவருக்கு 7,897 வாக்குகள் கிடைத்தது. சசிதரூர் 1,072 ஓட்டுகள் பெற்றார்.

    மல்லிகார்ஜூன கார்கே இன்று முறைப்படி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையொட்டி அவர் காலையில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மற்றும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம் ஆகியோரது நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் முறைப்படி தலைவராக பொறுப்பேற்கும் விழா நடந்தது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மல்லிகார்ஜூன கார்கேவிடம் மத்திய தேர்தல் குழு தலைவர் மது சூதனன் மிஸ்திரி வழங்கி னார். கட்சியின் தலைவர் பதவியை விட்டு சென்ற சோனியா காந்தி அவரிடம் முறைப்படி தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.

    மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்கேவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற நேரு-காந்தி குடும்பத்தை சாராத நபர் கார்கே ஆவார். மறைந்த தலைவர் ஜெகஜீவன் ராமுவுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற 2-வது தலித் சமூக தலைவர் கார்கே ஆவார்.

    கடைசியாக காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு- காந்தி குடும்பத்தை சாராத நபர் சீதாராம் கேசரி ஆவார். இவர் கடந்த 1998-ல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சோனியா காந்தி தலைவர் பொறுப்பை ஏற்றார். 2017 முதல் 2019 வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார்.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. உள்கட்சி பூசல், குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் உள்ளிட்ட சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன. கட்சியில் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கார்கேவுக்கு இருக்கிறது.

    • குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
    • சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் 55 வார்டுகள் உள்ளன.இதில் பாளை மண்டலத்துக்குட்பட்ட 32-வது வார்டில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார்.

    ஆனாலும் இதுவரை சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். அந்த வார்டு பகுதியில் சுமார் 5,000 வீடுகள் இருக்கும் நிலையில் குடிநீர் வினியோகம் பாதிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி பெரும்பாலான வீடுகளில் உறவினர்கள் வந்திருக்கும் நிலையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வார்டை சேர்ந்த ஏராளமான பெண்கள், கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாளை பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    இதனை அறிந்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தன்ராஜ், ராமசாமி உள்ளிட் டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

    இதையடுத்து பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசாரும் வந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே குடிநீர் குழாயில் அடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி பஸ் நிலையம் அருகே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் அடைப்புகள் சரி செய்யும் பணி நடைபெற்றது. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு வதற்காக மாநகராட்சி லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • இந்து மதத்தை குறை கூறுவது, நேருவின் பழக்கம் என்று சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது.
    • நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று காந்தி சொன்னார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரசும் மதசார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. இந்து மதத்தை குறை கூறுவதும், சிறுமைப்படுத்துவதும் நேருவின் பழக்கம் என்றும் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

    காங்கிரஸ் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி. நேருவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. ஆனால் இந்து மதத்துக்கு எதிராக அவர் செயல்பட்டது இல்லை. நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், அதை அடுத்தவரிடம் திணிக்க மாட்டேன் என்று கூறினார். இதுதான் காங்கிரசின் தத்துவம். இதுதான் மதச்சார்பின்மை.

    பிரிவினைவாதம் பேசுபவர்கள், மதத்துக்கு எதிராக பேசுபவர்கள்,  இன உணர்வுகளை கிளப்புபவர்கள் காலப் போக்கில் தோல்வியடைவார்கள். இந்திய அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம்.

    அரசியல் சாசனத்தை காப்பாற்றவும், மதசார்பின்மையை காக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணுபிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • இமாச்சல் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் பிரச்சார குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
    • சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் தொடங்கிவிட்டனர்.

    இந்நிலையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் கட்சி இன்று ஒப்புதல் அளித்தது.

    சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 43 பேர் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
    • அவரது கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    சென்னை :

    தி.மு.க. செய்தித்தொடர்பு செயலாளராக இருந்து வந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில், ''காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. தகுதியுள்ள சிலர், சில காரணங்களால் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அரசியலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, நேர்மை மட்டுமல்ல, அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன'' என்று கூறியிருந்தார்.

    அவரது இந்த கருத்து, தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்.'' என்று கூறப்பட்டுள்ளது.

    • இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும்.
    • டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 46 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சில தினங்களுக்கு முன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 17 பேர் கொண்ட 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    • சோனியா, ராகுல் இருவரும் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது.
    • எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியில் எல்லோரும் எதிர்பார்த்தது போல மல்லிகார்ஜூன கார்கே தலைவராக வந்து விட்டார். சோனியா ஆசி பெற்ற வேட்பாளர் என்பதால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதை உறுதிபடுத்துவது போல 88 சதவீத பேர் ஆதரவுடன் அவர் காங்கிரஸ் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து விட்டார்.

    137 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியை அலங்கரிக்கும் 2-வது கர்நாடக மாநிலத்துக்காரர், 3-வது தலித் இன தலைவர் என்ற சிறப்புகளை கார்கே பெற்று உள்ளார். ஆனால் இந்த சிறப்புகளையெல்லாம் மிஞ்சும் வகையில் அவரால் காங்கிரஸ் கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சி மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியுமா? என்பதுதான் மக்கள் மனதில் எழுந்துள்ள ஒரே கேள்வியாகும்.

    சோனியா, ராகுலை மீறி காங்கிரசை அவரால் தூக்கி நிறுத்த முடியுமா? அதற்கு ஏற்ப அவர் அதிரடியாக செயல்படக்கூடிய மன இயல்பு கொண்டவரா? அவரது உத்தரவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள், மத்தியில் உள்ள மூத்த தலைவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்களா? என்பதும் மக்கள் மனதில் ஒரு ஓரத்தில் சந்தேகமாக எழுந்துள்ளது.

    சோனியா, ராகுல் இருவரும் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில் இருந்து காங்கிரசை மீட்டு மீண்டும் அகில இந்திய அளவில் வீறுநடைபோடச் செய்ய மல்லிகார்ஜூன கார்கே என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதும் காங்கிரஸ்காரர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில் மல்லிகார்ஜூன கார்கே முன்பு 6 முக்கியமான சவால்கள் எழுந்துள்ளன. தோல்வியே சந்திக்காத தலைவர் என்று கர்நாடகாவில் புகழப்படும் கார்கே 50 ஆண்டுகள் அரசியலில் மிகுந்த அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தை பயன்படுத்தி அவர் தன் முன் எழுந்துள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.

    ஆனால் கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள் சாதாரணமானவை அல்ல. அடுத்த 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து, வலுப்படுத்தி, ஒற்றுமைப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும். அது ஒன்றும் மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் விசயமல்ல.

    ராகுல் மேல் கொண்டுள்ள அதிருப்தியால் முறுக்கி கொண்டிருக்கும் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். 80 வயதாகும் கார்கேவால் அது முடியுமா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுதவிர அவர் முன் உள்ள முதல் முக்கிய பணி காங்கிரஸ் பற்றி நாட்டு மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பணியாகும். காங்கிரஸ் நிர்வாகிகளே பல மாநிலங்களில் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களிடமும் நம்பிக்கையை உருவாக்கி காங்கிரசுக்காக பாடுபட செய்ய வேண்டும். இதற்கு அடிமட்ட அளவில் களபணி செய்ய வேண்டியது அவசியமாகும்.

    இந்த கள பணியை கார்கே எப்படி மேற்கொள்ள போகிறார் என்பதை பொறுத்துதான் காங்கிரசின் எதிர்காலமே இருக்கிறது. எனவே கட்சியின் இந்த சீரமைப்பு கார்கேவுக்கு உள்ள முதல் சவாலாகும். அடுத்து 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மாநில சட்டசபை தேர்தல்களும் காங்கிரசுக்கும், கார்கேவுக்கும் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

    குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் தேர்தல்களில் காங்கிரசை வெற்றி பெற செய்ய வேண்டிய நிர்பந்தம் கார்கேவுக்கு இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம்இழுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கார்கே தோளில் விழுந்துள்ளது.

    பெரும்பாலான மாநிலங்களில் பல நல்ல தலைவர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகி உள்ளனர். அவர்களிடம் சமரசம் பேசி மீண்டும் அழைத்து வர வேண்டிய பணியும் இருக்கிறது. சமீப காலமாக ஆம் ஆத்மி கட்சி ஓசையில்லாமல் வட மாநிலங்களில் செல்வாக்கை வளர்த்து உள்ளது. ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரசைதான் பதம் பார்க்கும் என்று சொல்கிறார்கள்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி ஆம் ஆத்மியை ஒடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். காங்கிரசில் இருந்து விலகி உள்ள தலைவர்கள் அனைவருமே சோனியாவையும், ராகுலையும் சந்திக்க இயலவில்லை என்பதையே பிரதான குற்றச்சாட்டாக தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகளை கரைந்து போக செய்யும் வகையில் கார்கே தினமும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.

    இவ்வளவையும் செய்தால்தான் கார்கேவால் காங்கிரசின் உள் கட்டமைப்பை சீரமைக்க முடியும். அதன்பிறகுதான் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் பிரச்சினைகளை தீர்த்து வலுப்படுத்த முடியும். இந்த பணிகளை செய்வதற்கு கார்கேவுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வேண்டும். அது கிடைக்குமா என்பதை பொறுத்துதான் காங்கிரசின் செயல்பாடுகள் அமைய போகிறது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே திட்டமிட வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தேர்வாகும் 120 எம்.பி. இடங்களை கார்கே குறி வைத்தால்தான் காங்கிரசுக்கு அதிக வெற்றி தேடி தர முடியும். இதற்கு அவர் என்ன திட்டம் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    90 சதவீத மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றினால்தான் காங்கிரசை முன்பு போல சக்தி வாய்ந்த இயக்கமாக மாற்ற முடியும் என்ற ஒரு கருத்து கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு கார்கே எப்படி தீர்வு காண போகிறார்?

    மேலும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையே அனைத்து பிரிவுகளிலும் மோதல் உள்ளது. இதை தீர்த்தால்தான் கட்சி பணிகள் சுமூகமாக நடைபெறும். எனவே தலைமுறை இடைவெளி பிரச்சினையை தனது அனுபவத்தால் கார்கே சமாளிப்பார் என்று கருதப்படுகிறது.

    இவை அனைத்துக்கும் மேலாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை சிந்தாமல், சிதறாமல் ஒரே வரிசையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கார்கேவுக்கு இருக்கிறது. மாநில தலைவர்களில் மு.க.ஸ்டாலின், சரத்பவார், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் போன்றவர்களை ஒருங்கிணைத்து ஓரணியில் திரள செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

    9 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், 3 தடவையாக எம்.பி.யாக இருப்பவர் என்ற அந்தஸ்துடன் தலைவர் பதவியை அலங்கரிக்கும் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் 3 முறை முதல்-மந்திரி பதவியை பெற முடியாமல் ஏமாற்றத்துக்குள்ளானவர். அரசியலின் நிறைவு காலக்கட்டத்தில் அவர் காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டு உள்ளார்.

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர்மீது ஆரம்ப காலங்களில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்குள் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வந்து விட்டன. குறிப்பாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு அவர் சொத்து சேர்த்து விட்டதாக கர்நாடகா பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

    கர்நாடகாவில் சிக் மங்களூர் மாவட்டத்தில் 300 ஏக்கரில் காபி தோட்டம் வைத்திருப்பதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அந்த காபி தோட்டத்தின் மதிப்பு ரூ.1000 கோடி ஆகும்.

    அதுபோல பன்னர்கெட்டா என்ற இடத்தில் அவருக்கு ரூ.500 கோடியில் ஷாப்பிங் காம்பளக்ஸ் இருப்பதும் சமீபத்தில் அம்பலமானது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.5 ஆயிரம் கோடி பணபரிமாற்றம் விவகாரத்தில் இவரிடம் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டது. இவையெல்லாம் இவர் மீது சுமத்தப்பட்ட கரும்புள்ளிகள்.

    ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதால் கார்கே காங்கிரஸ் தலைவராக எப்படி செயல்படுவார் என்பதில்தான் இப்போதைய எதிர்பார்ப்பு உள்ளது.

    3 விதமாக அவர் செயல்படலாம். ஒன்று சோனியா சொல்வதை கேட்டு ரப்பர் ஸ்டாம்பு போல இருப்பது. 2-வது எல்லா முடிவுகளையும் சொந்தமாக எடுத்து அதிரடி காட்டுவது, 3-வது சோனியாவுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் பாலமாக இருந்து செயல்படுவது. இந்த மூன்று பாதைகளில் அவர் எந்த பாதைக்கு செல்வார் என்று தெரியவில்லை?

    • கடந்த 24 ஆண்டுகளில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத முதல் தலைவர் என்ற புதிய சரித்திரத்தை கார்கே படைத்துள்ளார்.
    • வருகிற 26-ந்தேதி மல்லிகார்ஜூன கார்கே தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். பதிவான 9,385 ஓட்டுகளில் கார்கேவுக்கு 7,897 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூருக்கு 1,072 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் கடந்த 24 ஆண்டுகளில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத முதல் தலைவர் என்ற புதிய சரித்திரத்தை கார்கே படைத்துள்ளார்.

    இந்நிலையில் வருகிற 26-ந்தேதி(புதன்கிழமை) அவர் தலைவராக பதவி ஏற்க உள்ளார். முன்னதாக நேற்று டெல்லியில் உள்ள கார்கே வீட்டுக்கு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சசிதரூர் ஆகியோர் நேரில் சென்று கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
    • ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    திருப்பதி:

    ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார்.

    கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

    அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாளாக ஆந்திராவில் ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
    • நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரசின் வரலாறே நமது நாட்டின் வரலாறு. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான். ஜனநாயகத்தை காப்பாற்ற காங்கிரஸ் போராடி வருகிறது. இதற்கு காங்கிரசின் உள்கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருப்பதே சாட்சி. நாங்கள் கட்சியிலும் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறோம். 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசில் உட்கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளது.

    இதற்காக கர்நாடக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம். நாடாளுமன்ற தோ்தலில் கட்சி தோல்வி அடைந்ததால் ராகுல் காந்தி அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தி அந்த பொறுப்பை ஏற்றி கட்சியை வழிநடத்தினார். நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் கட்சி தலைவராக வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    கர்நாடகத்தில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 78 லட்சமாக உயர்த்தியுள்ளோம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகத்தில் 500 நிர்வாகிகள் ஓட்டு போட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நிஜலிங்கப்பாவுக்கு பிறகு கா்நாடகத்தை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கட்சியின் தலைவர் பதவி கிடைத்திருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    மல்லிகார்ஜூன கார்கே 50 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எந்த கட்சியிலும் தலைவர் பதவிக்கு இவ்வாறு தேர்தல் நடந்தது இல்லை. அவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் கட்சிக்கு மாநில மற்றும் தேசிய அளவில் பலம் கிடைத்துள்ளது. சோனியா காந்தியின் ரிமோட் கன்ட்ரோல் என்று மல்லிகார்ஜூனா கார்கேவை பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள்.

    பிரியங்கா காந்தி

    அப்படி என்றால் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை என்னவென்று அழைப்பது?. சோனியா காந்தி 20 ஆண்டுகாலம் கட்சி தலைவராக இருந்துள்ளார். அவரது ஆலோசனையை பெறாமல் இருக்க முடியுமா?. கர்நாடகத்தில் மல்லிகார்ஜூன கார்கே 3-வது அதிகார மையமாக திழக மாட்டார். அவர் தேசிய அளவில் ஒரே அதிகார மையமாக இருப்பார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உள்ளது. ராகுல் காந்தி இன்னும் 2 நாட்கள் கர்நாடகத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    மேலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சித்தராமையா உள்பட கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • வெற்றி பெற்ற பிறகு, மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தியை சந்திக்க விரும்பினார்
    • சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்குச் செல்வது மிகவும் அரிது

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 21ம் நூற்றாண்டில் நேரு குடும்பத்தினர் அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற கார்கே, முன்னாள் தலைவரான சோனியா காந்தியை அவரது ஜன்பத் இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்தார். இதற்காக அப்பாயின்மென்ட் கேட்டார்.

    ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சோனியா காந்தியே ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்துக்குச் சென்றார். மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த சோனியா காந்தி, கார்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்குச் செல்வது அரிதான நிகழ்வு. இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழல் வழக்கில் 2015 ம் ஆண்டில் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு பேரணி நடத்தப்பட்டது. அப்போது சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் வீட்டிற்குச் சென்றார். அதன்பின்னர் அவர் சென்ற இரண்டாவது காங்கிரஸ் தலைவரின் இல்லம் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×