என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97772"

    • சுவாமி, சீதேவி-பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
    • நாளை (திங்கட்கிழமை) திருத்தேரேற்றம் நடைபெறுகிறது.

    பழனி அருகே பாலசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற அகோபில வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று அகோபில வரதராஜபெருமாள், சீதேவி-பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக மாலை 6 மணி அளவில் சுவாமி, சீதேவி-பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க வரதராஜபெருமாள், சீதேவி-பூதேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு சுவாமி சீதேவி-பூதேவியுடன் பவளக்கால் சப்பரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு திருத்தேரேற்றம் நடைபெறுகிறது. காலை 7.15 மணிக்கு வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தாயாருடன் பெருமாள் வீதியுலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
    • பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தோப்புதுறை அபீஷ்ட வரதராஜ பெரு மாள் கோவிலின் ஆண்டுப்பெருவிழா கொடி இறக்கம், விடையாற்றியுடன் நிறைவடைந்தது.

    இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. நாள்தோறும் உபயதாரர் சார்பில் பல்லாக்கு சேவை, கருட சேவை, அனுமந்த வாகனம், யானை, இந்திர விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    • ராஜபாளையம் அருணாச்சலேசுவரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் அருள்பாலிக்கும் அருணாச லேசுவரர்-உண்ணாமலை அம்மன், ஸ்ரீலஸ்ரீ சாது அருணாச்சல சுவாமிகளுக்கு ஆவணி மூலத் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் கும்ப பூஜை, அபிஷேக பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு 16 வகை அபிஷேம் அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் அருணாச்சலேசுவரர்- உண்ணாமலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. கார்த்திக்பட்டர் தலைமையில் குழுவினர் திருக்கல்யாண வழிபாடுகள் நடந்தது.

    விழாவில் பழைய பாளையம், புதுப்பாளையம் சமூக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தலைவர் காளிமுத்து, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ், துணை தலைவர் பாலமுருகன், துணைச் செயலாளர் ராஜா, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சரவணன், கண்ணன், நாகரத்தினவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இன்று மதியம் 3.30 மணிக்குமேல் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • நாளை தீர்த்தவாரியும், பக்தர்கள் பூ இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

    ராமநாதபுரம் அருகே உப்பூரில் ராமர் வணங்கிய பெருமையுடைய வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தி திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து விநாயகர் சித்தி, புத்தியுடன் கோவில் அருகே உள்ள அலங்கார கொட்டகைக்கு நேற்று மாலை 3 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் விநாயகர் சித்தி, புத்தியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் பூஜைகளை சுப்பிரமணியன், மணிகண்டன் சந்திரசேகர் சிவாச் சாரியார்கள் செய்தனர். பக்தர்கள் விநாயகருக்கு மொய் எழுதி காணிக்கை செலுத்தினர்.

    தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் மட்டும் தான் விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3.30 மணிக்குமேல் தேரோட்டம் நடைபெறுகிறது.

    நாளை(புதன்கிழமை) உப்பூர் கிருஷ்ணன் மண்டகப் படியார் நிகழ்ச்சியாக விநாயகர் கடலில் தீர்த்தமாடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இதனைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூ இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். இரவு வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் இரவு 7 மணி அளவில் விநாயகர் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற உள்ளது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், உப்பூர், கடலூர் கிராமத்தார், வெட்டுக்குளம் வாசுதேவன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உப்பூர் கிருஷ்ணன், குமரய்யா, கடலூர் ஊராட்சி தலைவர் முருகவள்ளி பாலன், அரிராம், சத்துணவு கணேசன், நாகநேந்தல் முருகானந்தம்,வளமாவூர் திருமலை, மயிலூரணி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் உதவியாளர் தேவதாஸ் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருமண சடங்குகளை நடத்தினர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான ராமசாமி கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதனையொட்டி ராமர் மற்றும் சீதா தேவி சிறப்பு மலர் அலங்காரத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர்.

    இதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருமண சடங்குகளை நடத்தி ராமபிரான்- சீதாதேவிக்கு மாங்கல்யம் அணிவிக்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • தேவபுரீஸ்வரர் சாமி, மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    கீழ்வேளூர் அருகே தேவூரில் மதுரபாஷினி அம்மன் சமேத தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. இதை இரவில் தேவபுரீஸ்வரர் - மதுரபாஷினி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் கொடி மரத்தடியில் இருந்து ஏராளமான பெண்கள் பழங்கள், மஞ்சள், குங்குமம் இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசை எடுத்து வந்தனர். தேவபுரீஸ்வரர் சாமி, மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. பின்னர் மதுரபாஷினி அம்மன் சன்னதியில் தேவபுரீஸ்வரர் சாமிக்கும் மதுரபாஷினி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் 20-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி அன்று மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு புனிதநீர் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு துர்க்கை அம்மன், செல்வ விநாயகர், வன்னீஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு முளைப்பாலிகை, மங்கள சீர்வரிசை கொண்டுவருதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள், நிர்வாக அறங்காவலர்கள், பரிபாலன சபை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காசியாத்திரை, மாப்பிள்ளை அழைப்பு போன்ற வைபவங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்களால் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

    பின்பு சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் திருமண கோலத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலா வந்தார். விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட உயர் அலுவலர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    • சுவாமி-அம்பாள் மற்றும் பெருமாள் தங்க கேடயத்தில் எழுந்தருளினர்.
    • கோவிலில் பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 3-ந்தேதி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் மற்றும் பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் தெற்கு, மேற்கு ரத வீதி சாலை, திட்டக்குடி சாலை வழியாக கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாத மண்டகப்படிக்கு மறுவீட்டிற்கு எழுந்தருளினர்.

    தொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள், பெருமாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்ற பின்னர், மீண்டும் அங்கிருந்து தங்க கேடயத்தில் புறப்பாடாகி சுவாமி-அம்பாள் நேற்று இரவு 10 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோவிலில் பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.

    கோவில் நடை அடைப்பு பற்றி தகவல் தெரியாததால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியிலும், ரதவீதிகளில் நின்றும் கோவிலை நோக்கியும், கோபுரத்தை நோக்கியும் தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

    ஏராளமானோர், மறுவீடு நிகழ்ச்சி நடந்த ராமர்பாதம் மண்டகப்படிக்கு சென்று சுவாமி-அம்பாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    • வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
    • 8-ந்தேதி சாமி-அம்பாள் கெந்தமாதனபர்வத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக நேற்று அதிகாலை 2 மணிக்கு ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகபடியில் இருந்து பர்வத வர்த்தினி அம்பாள் பலவகை பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தங்க பல்லக்கில் எழுந்தருளி திட்டக்குடி சாலை, நடுத்தெரு, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி சாலை வழியாக கோவிலுக்கு வந்தடைந்தார்.

    தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக ராமநாதசாமி- பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்கு தெற்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள மணமேடைக்கு எழுந்தருளினர்.

    தொடர்ந்து அங்கு திருக்கல்யாணத்திற்கான பூஜை நடைபெற்றது. பின்னர் 8.20 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருக்கல்யாண திருவிழாவில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி சாமி-அம்பாள் கெந்தமாதனபர்வத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் திருக்கல்யாணத்தையொட்டி மொய் எழுதி விருந்து சாப்பிட்டு சென்றனர்.

    திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி சாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி சாமி, அம்பாள் கோவிலில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த மணமேடையில் சாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுடன் காட்சி அளித்தனர். தொடர்ந்து சினேக வல்லி அம்மனுக்கு சப்த கன்னிகா பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஆலய குருக்கள் சவுந்தர தியாகராஜ குருக்கள், சுப்பிரமணிய சிவாச்சாரியார், சந்திரசேகர சிவாச்சாரியார், வைரவ சுப்ரமணிய ஆச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர்.

    தொடர்ந்து சாமி-அம்மனுக்கு காப்பு கட்டுதல், மாலை அணிவித்தல், வஸ்திரம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமி-அம்பாள், பெருமாளுக்கு திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சிவாச்சாரியார் சாமியின் கையில் இருந்த தாலியை எடுத்து அம்பாளுக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் சாமி-அம்பாள் திருக்கல்யாணத்தையொட்டி மொய் எழுதி விருந்து சாப்பிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், தேவகோட்டை இரட்டை அரு நகரத்தார்கள் வகையறாக்கள், நாட்டார்கள் நகரத்தார்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராமேசுவரம் கோவிலில் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் இன்று மாலை நடக்கிறது.
    • கடந்த மாதம் 23-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கடந்த மாதம் 23-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது காலை, மாலையில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை மாற்றுதல் நடைபெற்றது.

    ராமதீர்த்தம் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படியில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளி மாலை மாற்றி கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (3-ந் தேதி) இரவு நடைபெறுகிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி-அம்பாளுக்கு இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×