search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srivilliputhur"

    • ஆடிப்பூர தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெற்ற திருத்தலம்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இந்த திருத்தலமும் ஒன்று. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் தான், ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற சிறப்பு பெயர் கிடைக்கப்பெற்றது.

    இங்குள்ள மூலவர் வடபத்ரசயனர் (ரெங்கமன்னார்). இவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரு சேர காட்சி அளிப்பது இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா 12 நாட்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும்.

    கொடியேற்றுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ம் தேதி (சனிக்கிழமை) நிறைவடைகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்று விளங்குகிறதோ, அந்த அளவிற்கு இவ்வாலயத்தின் தேரும் பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது.

    தேரோட்டத்திற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே, தேரை தயார்படுத்தும் பணி, அலங்கரிக்கும் பணி தொடங்கி விடும். இந்த ஆண்டு தேரில் உள்ள பழைய வடங்கள் அகற்றப்பட்டு புதிய வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக் கோலத்தில் காட்சி அளிப்பார்கள். அதனால், இவ்வாலயத்தில் ஒரே ஒரு தேர்தான்.

    அதில்தான் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந்தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு ஆகும். மணக்கோலத்தில் வீற்றிருக்கும் ஆண்டாளை தரிசித்தால், நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகள் பல சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்த தேரில் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர் 94 அடி உயரம் கொண்டது. தேரில் 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரமும் 1 டன் எடை கொண்டது. பழங்காலத்தில் இந்த தேருக்கு 9 மரச் சக்கரங்கள் இருந்தன. ஆனால் தற்போது 4 இரும்பு சக்கரங்கள் உள்ளன.

    தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய தேர் இதுவாகும். தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து பரிவட்டம் வருவது வழக்கம்.

    பழங்காலத்தில் இவ்வாலயத்தின் தேரோட்டம் ஆடி மாதத்தில் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடந்துள்ளது. சுமார் 4 மாதங்கள் கழித்து தான், தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த நான்கு மாத காலமும், ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும் என்பதுதான் உச்சபட்ச சிறப்பு.

    அதுபோல முன்காலத்தில் சுற்றுவட்டார கிராமத்தில் எங்கு இருந்து பார்த்தாலும் தேர் தெரியுமாம். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஆடிப்பூர கொடியேற்றம் நடைபெறும் அன்றே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைவார்கள்.

    ஆண்டாள் கோவிலை சுற்றியுள்ள மண்டபங்கள், நந்தவனங்களில் குடும்பத்துடன் தங்குவார்கள். கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள், அப்படியே ஆங்காங்கே தங்கி இருந்து தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வர்.

    பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பர். தேர் நிலைக்கு வந்த பிறகுதான் அனைவரும் தங்களின் ஊருக்கு புறப்பட்டுச் செல்வார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். அந்த வகையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    விழாவின் ஆரம்ப நாள் முதல் தேரோட்டம் வரை, அதாவது 9 நாட்கள் இங்கு தங்கியிருக்கும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதனை 'ததீயாராதனம்' என்று அழைப்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தோரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    பெருமாள் அருகில் கருடாழ்வார்

    பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னிதிக்கு எதிரில் தான் கருடாழ்வார் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் பெருமாளுக்கு அருகில், அவரை வணங்கியபடி கருடன் காட்சி தருகிறார்.

    சூடிக்கொடுத்த நாச்சியார்

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையானது, வருடத்தில் ஒரு முறை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது அங்குள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. மதுரையில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது கள்ளழகருக்கும் இந்த மாலை சாற்றப்படுகிறது.

    அதேபோல தினமும் வடபத்ரசயனருக்கும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயர் ஏற்பட்டது.

    • உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
    • காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.

    இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.

    திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
    • உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.

    கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.

    கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.

    • நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.

    இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

    இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
    • ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.

    அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

    இதனை, "பச்சைப்பரத்தல்" என்பர்.

    கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர்.

    திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.

    ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.

    அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரத்த தான முகாம் நடந்தது.
    • 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி யில் அனைத்து இளைஞர் அமைப்பு கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலா, ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரிஜா, தேவர் மகாசபை தலைவர் சித்தானந்தன், செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தேவர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரய்யா, சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    75-வது சுந்திர தின விழா, வள்ளலாரின் 200-வது பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி, பெரியமாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் 4 ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் பேரணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா காரியவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்புத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி அதி காலை 5 மணிக்கு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆண் டாள் கோவில் முன்புள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செப்புத் தேரில் வைத்து நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்து கொள்ள திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரமும் இன்று ஆண்டாளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச் சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆண்டாள் கோவில் பட்டர்கள், வேத பிரான் பட்டர், ஸ்ரீராமுலு, அனந்த ராமகிருஷ்ணன் முத்து பட்டர், சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. ராஜா, நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகக்கனி. இவர் கிருஷ்ணன் கோவில் பஸ் நில யம் அருகில் மதுரை- செங்கோட்டை சாலையில் ஒரே கட்டிடத்தில் கடைகள் வைத்துள்ளார். கீழ் தளத்தில் செருப்பு கடையும், மேல்தளத்தில் பரிசுப் பொருட்கள் கடையும் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு முருகக்கனி வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை மாடியில் இருந்த பரிசுப்பொருட்கள் கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனே முருகக்கனிக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் தீ கீழே உள்ள செருப்பு கடைக்கும் பரவியது.

    தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் விருதுநகரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 கடைகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திக்குளம் ரெயில்வே கேட் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நசுங்கி பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடைபெற்றது. இதில் தற்கொலை செய்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாலசுப்பிரமணியம் (35) என தெரியவந்தது.

    தொழிலாளியான அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பால கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அய்யப்ப பக்தர்கள் வேன் மோதியது. இதில் சலவை தொழிலாளி பலியானார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன்கள் ராமர் (வயது 28), கருப்பசாமி (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர்கள் 3 பேரும் சலவை தொழிலாளிகள்.

    இன்று காலை 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சலவை செய்த துணிகளை எடுத்துக்கொண்டு ராஜபாளையம் சத்திரப்பட்டிக்கு சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் -ராஜபாளையம் சாலையில் தியேட்டர் அருகே சென்ற போது சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    ராமர் மற்றும் தங்கப்பாண்டி காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வேன் டிரைவர் குமார் கைது செய்யப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்த போர்வை சாற்றும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பல்வேறு சிறப்புகளை கொண்ட தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விளங்குகிறது. அங்கு கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு முன்அறிவிக்கும் வண்ணமும் ஆண்டாள் கோவிலில் தெய்வங்களுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இதே போல் இந்த ஆண்டுக்கான 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது நேற்று ஒரு நாள் மட்டுமே சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் கருடாழ்வார் எழுந்தருளினார்.

    அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள் என தெய்வங்களின் விக்ரகங்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
    ×