என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sugarcane"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்தது.
இந்தியாவில் கரும்பு கொள்முதல் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை 2024-25 நிதியாண்டிற்கானது ஆகும். புதிய விலை உயர்வு அக்டோபர் மாதம் அமலுக்கு வரவிருக்கிறது.
குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 315-இல் இருந்து ரூ. 340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், "விவசாயிகள் நலன் மற்றும் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே எங்களது அரசு இயங்கி வருகிறது. வரவிருக்கும் கரும்பு சீசன் அக்டோபர் 1, 2024 அன்று துவங்குகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30, 2025 ஆண்டுவரை புதிய விலை அமலில் இருக்கும்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் இந்த விலை ரூ. 340 ஆக உயர்த்தப்படுகிறது," என்று தெரிவித்தார்.
- பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் “பொங்கல் சிறப்பு சந்தை” அமைக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் "பொங்கல் சிறப்பு சந்தை" அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு இன்று அதிகாலையில் ஏராளமான வாகனங்களில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
இதனால் கோயம்பேடு சிறப்பு சந்தையில் இன்று பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. தொடர்ந்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 150 லாரி களில் கரும்பு விற்பனைக்கு குவிந்த நிலையில், இன்று மேலும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு கட்டுகள் குவிந்ததால் கரும்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. கும்மிடிப் பூண்டி பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வாக னங்களில் மஞ்சள் கொத்து கள் குவிந்ததால் நேற்று ரூ.80 வரை விற்கப்பட்ட மஞ்சள் கொத்து கட்டு இன்று ரூ.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மிச்சாங் புயல் மழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக இஞ்சி கொத்துகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான இஞ்சி கொத்துகள் மட்டுமே கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது இதையடுத்து நேற்று ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.200 வரை விற்கப்பட்டு வருகிறது.
- கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
- பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.
போரூர்:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இ்ன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு சந்தைகளை கட்டி உள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், வெற்றிலைவள்ளிகிழங்கு, பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தார், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.
இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்துகளும், கும்பகோணம் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.500வரை விற்கப்படுகிறது, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600, 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.60 முதல் ரூ.80-க்கும், 8 முதல் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில்,
இன்று அதிகாலை முதல் கரும்பு விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது. மாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நள்ளிரவு முதல் மேலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய உள்ளது. இதனால் கரும்பு கட்டுகளின் விலை குறையவே வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
- பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.
விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.
பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.
தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.
தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.
பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
- நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
- சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.
நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.
இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.
நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17-ந் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதா கைகள் வைக்கப்ப ட்டள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
- பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.
இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-
இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.
ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.
தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.
- நாட்டு மருத்துவ குணம் கொண்ட சீனிஅவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் பயிரி ட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
- போதிய விலையில்லாமல் காய்கறிகளை விற்க மனமின்றி ெசடியி லேயே பறிக்காமல் விட்டு உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிரா மத்தில் மொச்சை, அவரை, பச்சைமிளகாய், கத்தரி க்காய், வெண்டைக்காய், சீனி அவரைக்காய், தக்காளி உள்ளிட்ட குறுகிய கால நாட்டுரக காய்கறிகளை விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது இங்கு சீனி அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் விளை ச்சல் அதிகமாக இருந்த போதும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் குறைந்த அளவே வருகின்றனர். நாட்டு மருத்துவ குணம் கொண்ட சீனிஅவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் பயிரி ட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
ஒரு சிலர் இதனை வாங்கி வற்றலாக தயாரித்து அதனை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது விளைச்சல் அதிகமாக இருந்தபோதும் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரையிலேயே வியாபாரிகள் வாங்க முன்வருகின்றனர். இதனால் விவசாயிகள் காய்கறிகளை விற்க மனமின்றி ெசடியி லேயே பறிக்காமல் விட்டு ள்ளனர்.
இதன்காரணமாக காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது. மற்ற காய்கறிகளுக்கு ஓரளவு விலை கிடைத்தாலும் சீனி அவரை, வெண்டை க்காய் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவ தாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
- மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும்.
- கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது.
குடிமங்கலம்:
கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பணப்பயிரான கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. இந்தநிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைகளுக்குட்பட்ட திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள கரும்புப் பயிரில் ஒருசில இடங்களில் வெண்புழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் காளிமுத்து, மடத்துக்குளம் தாலுகா கணியூர், காரத்தொழுவு, பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
வெண்புழு தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அவர் கூறியதாவது:-
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். வெண்புழு தாக்குதலால் கரும்பு பயிரின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போல மாறிவிடும். குருத்துப்பகுதி முழுவதும் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட கரும்புத்தூரினை இழுத்தால் எளிதில் கையோடு மேலே வந்துவிடும். அத்துடன் வெண்புழுக்கள் வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் அதிக அளவில் சேதம் உண்டாக்கும். வெண்குருத்துப்புழு தாக்குதலை தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்.
கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது. கோடை காலங்களில் அறுவடை முடிந்தவுடன் ஆழமாக உழவு செய்ய வேண்டும். வயலில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும். பயிர் சுழற்சி முறைகளை கடைபிடித்தும் வெண்புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம். வெண் புழுக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பிவேரியா பேசியானா ஆகிய உயிரியல் பூஞ்சானக் கொல்லிகளை தலா 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு 100 கிலோ மட்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து 10 நாட்கள் வைத்திருந்த பின் பாதிக்கப்பட்ட இடங்களில் தூவி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு குருத்துக்கு 2 முதல் 5 புழுக்கள் வரை இதன் பாதிப்பு தென்பட்டால் ஊடுருவி பாயும் ரசாயன பூச்சிக்கொல்லிகளான குளோர்பைரிபாஸ் ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் 80 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார்.
- காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி, இவர் தனது விவசாய தோட்டத்தில் கருப்பு சாகுபடி செய்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார். காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.
அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் விவசாயம் செய்யப்படாமல் பல்வேறு செடி கொடிகள் முளைத்து காய்ந்து இருந்த செடிகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக அருகில் இருந்த தோட்டத்துக்கும் பரவியது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர்.
தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெயின் கேட் முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மணப்பள்ளி பெருமாள் தலைமை வைத்தார். முன்னாள் மாநில விவசா யிகள் சங்கத் தலைவர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட செய லாளர் பெருமாள், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு இயக்குனர் தனலட்சுமி பாலசுப்ர மணியம் ,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ராமநாதன், பாலு, சேகர், நாமக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஜோதி ,சதாசிவம், ராஜேந்திரன், தங்க ரத்தினம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜேடர்பாளையம் கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
செஞ்சிஅருகே உள்ள பாலப்பாடி கூட்ரோட்டு செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். ஆலை மட்ட தலைவர் தினேஷ்குமார் பொருளாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் ,மாவட்ட துணைத் தலைவர் மாதவன், செஞ்சி வட்ட தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, வெங்கடேசன், நரசிம்ம ராஜன், சீத்தராமன், ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைராஜ் நன்றி கூறினார்
- தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியது.
- தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அழகிரி காலனி அரியப்பம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் மற்றும் மயில்சாமி ஆகியோருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியதால் அருகில் கரும்பு காடும் மற்றும் வாழை பயிர்கள் சிறிது சேதமடைந்தன .
உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வில நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் கரும்பு, வாழைத்தோட்டம் தப்பியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்