என் மலர்
நீங்கள் தேடியது "tag 130486"
- தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்த நிலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு உறுதி செய்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வளாகம் அமைக்க சட்டசபையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக 2 முறை இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மலையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தை அரசு ஒரு போதும் எடுக்காது. இந்த இடத்தை சீர் செய்து விரைவில் பணியை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் இதற்கான நில அளவை பணி தொடங்கப்படுகிறது.
66 ஏக்கரில் மலையில் இருந்து தண்ணீர் வரும் ஒரு குளமும் உள்ளது. அந்த குளத்தையும் பராமரித்து ஜல்லிக்கட்டு அரங்கில் கலந்து கொள்ள வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
மலையில் இருந்து வரும் தண்ணீரை எந்த வகையிலும் தடுக்க மாட்டோம். அந்த குளத்தின் பாசன பகுதிகளுக்கும் தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த பணிக்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.
3 பேர் நிச்சயம் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த டெண்டர் ரத்தாகிவிடும். ஒப்பந்ததாரர்கள் விரைவில் இந்த பணியை முடித்து தரும் வகையில் வர வேண்டும். அரசு பணிகளை பொறுத்தவரை 18 மாதங்கள், 24 மாதங்கள் என்று டெண்டர் கொடுக்கப்படுகிறது.
சில ஒப்பந்ததாரர்கள் 12 மாதங்களிலேயே பணிகளை முடித்து விடுகிறார்கள். சிலர் நியமிக்கப்பட்ட காலத்தையும் கடந்து பணியை முடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நோட்டீசு கொடுப்பதும், அபராதம் விதிக்கவும் தான் முடிகிறது.
இந்த பணியை பொறுத்தவரை விரைந்து முடிக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வருகிற 2024-க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அந்த வகையில் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உலக நாடுகளுக்கு இணையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
- ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் மலையடிவாரத்தில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பழனி வேல் தியாகராஜன், பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு மைதானம் மிகப் பிரமாண்ட அளவில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைய உள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது சில நாட்கள் மட்டும் நடைபெறும் நிலையில் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த பிரமாண்ட மைதானம் அமைய உள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் தனி மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
அதேபோன்று இந்த மைதானமும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு அனைத்து போட்டிகளும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இங்கேயே தனி மருத்து வமனை, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் வர உள்ளன. இங்கிருந்து 4 வழிச்சாலையில் சென்று சேரும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.
ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்; அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.
- சாகச விளையாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.
மதுரை
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
அப்போது கீழக்கரை, சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்த ப்பட்டன. இதில் கீழக்கரை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு 66 ஏக்கரில் ஜல்லிக் கட்டு மைதானம் அமைப்பதற்கான பணி களில் தமிழக சுற்றுலா த்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது.
மதுரையில் இருந்து 30 கி.மீ. தொலையில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மை தானம், அனைத்துவிதமான பாரம்பரிய விளையாட்டுக ளும் நடத்தும் வகையில் இருக்கும். அங்கு சாகச விளை யாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.
மைதானத்தை சுற்றிலும் ஜல்லிக்கட்சி அருங்காட்சி யம், கைவினை பொருட்கள் மையம் அமையும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழக பொதுப்பணி- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று மதுரை வருகிறார். அப்போது அலங்காநல்லூருக்கு செல்லும் அவர், கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
- மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
- 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
மதுரை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ் பெற்றது. இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் கண்டு களிக்க வசதியாக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கிடையே மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி 'மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு, 4 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கோரப்பட்டு உள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். இளைஞர்களின் ஆரவாரத்தால் காளைகள் மிரண்டு போய் குறுக்கு நெடுக்குமாக ஓடின.
அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விழாவில் முகாமிட்டிருந்த டாக்டர்கள் குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி தாலுகா போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விரும்பினார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க இருக்கிறார்கள். 2000 மாடுகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது.
கின்னஸ் சாதனைப் படைக்க இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
பிளாட்பார மனிதர்கள் பற்றி உருவாகி இருக்கும் படம் கபிலவஸ்து. கொள்ளிடம் படத்தை இயக்கிய நேசம் முரளி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இயக்குனர் சங்கத்தில் நடந்தது.
விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது கூறியதாவது:-
நேற்று என் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தின் தடை இல்லை என்பதற்காக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சென்றேன்.
மைலாப்பூரில் இருந்த விலங்குகள் நல வாரியத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே அரியானா மாநிலத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என தெரிய வந்தது. சினிமா என்றாலே சென்னை தான். இங்கே தான் ஆயிரக்கணக்கில் சினிமா எடுக்கப்படுகிறது.
இங்கு இருந்து எப்படி வடமாநிலத்துக்கு கொண்டு செல்லலாம்? சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஒரு காட்சியில் காக்கா குறுக்கே வந்தால் கூட படத்தை எடுத்துக்கொண்டு அரியானா ஓட வேண்டும். இது அநியாயம் இல்லையா? இது எல்லாம் பழி வாங்கல் தானே...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம். தமிழனைப் போல் விலங்கை நேசிப்பவர் யாரும் இல்லை. இதை எல்லாம் யார் கேட்பது? மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்.
தூங்கிக் கொண்டிருக்கும் போது நம் வீடு நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த மாதிரியான ஆட்சியில் மாட்டிக் கொண்டுள்ளோம். நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் நேசம் முரளி பேசும்போது ‘நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து தான் நான் படம் எடுத்து இருக்கிறேன். இந்த படம் பிளாட்பார மனிதர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கும்.
அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஆதரவில் தான் அனாதை ஆசிரமங்கள் இயங்குகின்றன. ஆனால் ஆதரவற்ற பிளாட்பார வாசிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. எங்கு திரும்பினாலும் பிச்சைக்காரர்கள்.
ஓட்டு வாங்க வரும் தலைவர்கள் அதன்பின்னர் ஒருநாள் கூட சுற்றுப்பயணம் வருவதில்லை. வெளி நாடுகளுக்கு தான் செல்கிறார்கள். வெளிநாட்டிலா நீங்கள் ஓட்டு வாங்கினீர்கள்?’ என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, ரமேஷ் கண்ணா இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. 100 மாடுபீடி வீரர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊரின் தெற்குத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஆக்ரோஷத்துடன் மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு சென்றன.
காளைகளை அடக்க முயன்ற போது கோவிலூரை சேர்ந்த ராகுல்(வயது 20), வைப்பூர் ஆசைத்தம்பி(34), தஞ்சாவூர் ஆனந்த்(19) சின்னப்பட்டாகாடு முருகானந்தம்(39), கீழஎசனை புண்ணியமூர்த்தி(24) உள்பட 11 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், மின் விசிறி, சைக்கிள், கட்டில், வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டில் விடப்பட்ட காளைகள் திரும்ப திரும்ப விடப்பட்டதாலும், சிறு கன்றுகள் விடப்பட்டதாலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தனர்.