என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 135129"

    வெள்ளலூர் பகுதியில் சிட்கோ அமைக்க 66 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இதனை தலைமையிடமாகக் கொண்டு 66 கிராமங்கள் உள்ளன. இதனால் இதனை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த 66 கிராம மக்கள் மேலூர் தாலுகா அலுவலகம் வந்து துணை தாசில்தார் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

    அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. வெள்ளலூரை சேர்ந்த 66 கிராம மக்கள் இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் மற்றும் வல்லடிகாரர் கோவில் திருவிழாக்கள் ெதாடங்குவதற்கு முன்பு சாமி கும்பிடுவது வழக்கம். அம்பலக்காரன் பட்டி, குறிச்சி பகுதியில் வெள்ளமலை பகுதியில் மான், மயில்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. 

    இந்த மலையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மலையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து அதனை வைத்து விவசாய பணிகள் நடந்து வருகிறது. 

    மேலும் இங்கே கால்நடை மேய்ச்சல் பகுதியும் உள்ளது. இங்கே சிட்கோ அமைத்தால் 66 கிராம மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் வன விலங்குகள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும். எனவே சிட்கோவை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதிபட்டனர்.
    மேலூர்

    மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. 

    கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அய்யாபட்டி, மங்க ளாம்பட்டி, கருங்காலக்குடி, உடப்பன்பட்டி, ஓட்டக்கோவில்பட்டி, காரியேந்தல்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக மாலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் காலை வரையிலும் வரவில்லை. 

    இதனால் மின்சாரவசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமம் அடைந்தனர்.தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். 

    மின்சார வசதி இல்லாமல் கைப்பேசிகள் மற்றும் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. சில நாட்களாகவே கொட்டாம்பட்டி சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்சார துண்டிப்பு பகலில் மட்டுமின்றி இரவிலும் அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். 

    விவசாய பகுதிகளில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியாமலும், குடிநீர் பிரச்சினைகளும் இதனால் ஏற்படுவதால், பராமரிப்பு பணிகளை மின்வாரிய பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருமங்கலம் பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    திருமங்கலம்

    கடந்த சில நாட்களாக  அக்னி வெயில் கொளுத்தி வந்த  அக்னி நட்சத்திரம் நேற்று முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென மதுரை மாவட்டத்தில் பல இடங்க ளில் பலத்த மழை பெய்தது.

    திருமங்கலம், சாத்தங்குடி, கப்பலூர்,மேலக்கோட்டை, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்து அவதிபட்டனர்.

     மேலும் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுகுளு காற்று வீசியது.கோடை காலத்திலும் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். 

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான   பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டியும், அனைத்து  கட்சியினர், உள்ளூர் அனைத்து ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடந்தது. 

    இதில்  பங்கேற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா, செயலாளர் துருக்கி ரபீக்ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் கூடி அங்கிருந்து  கோஷங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். 

    அதன்பின்  பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.  போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து   வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

    இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 4 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யவும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 

    விரைவில் தேதி அறிவிக்காமலேயே  சென்னையில்   தலை மை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஸ் நிலைய பிரசனைக்கு தீர்வு கிடைக்கும்வரை   போராட்டம் தொடரும் என்றார்.
    பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது. 

    இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி  பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  தொடங்கி வைத்தார். 

    துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.
    ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்றுவதை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரம் வீடுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சமீபத் தில் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அப்போது முதலே அரசு அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி வீடுகளை அகற்ற முற்பட்டனர்.

    இந்த மாதத்திற்குள்ளாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து விட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த பொங்கலை கருப்பு பொங்கலாக அனுசரித்தனர்.

    அரசு தங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கருப்பு உடை அணிந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 ஆண்டுகள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை உள்ள நிலையில் தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.மு.க. எம்.எல்.ஏ, அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
    திண்டுக்கல்:

    தை மாத பிறப்பை முன்னிட்டு நாளை தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தி வருகின்றனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக மக்கள் கூட்டம் இன்று கடை வீதிகளில் அலைமோதியது.

    கரும்பு ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையானது. காலை முதலே பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அனைத்து பூக்களும் கடுமையாக விலை உயர்ந்தது.

    மல்லிகை கிலோ ரூ.3000 வரை விற்பனையானது. செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், வெள்ளை செவ்வந்தி ரூ.200, முல்லைப்பூ ரூ.2200, ஜாதிப்பூ ரூ.1800, வெள்ளை ஜாதி ரூ.2000 சம்பங்கி ரூ.400 என அனைத்து பூக்களும் விலை அதிகமாக விற்றது. மலர்கள் கொண்டு மாலைகள் தயாரிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    பிளாஸ்டிக் தடை காரணமாக தற்போது பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகளில் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாழை இலையும் கடுமையாக விலை உயர்ந்தது.

    கிழிந்த இலைகளை கூட ஒன்று சேர்த்து சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்துவதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    பெரிய இலைகள் குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதனால் வாழை இலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. #Bhogi #BhogiCelebration #Pongal2019 #Bhogifestival
    சென்னை:

    மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

    அவ்வகையில் இந்த ஆண்டின் போகிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர்.



    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் சென்னையில் போகி பண்டிகையை கொண்டாடினார்.

    ஆனால், காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொதுமக்களும் கவனமாக இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

    ஏற்கனவே அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் போகி புகையும் இணைந்ததால், பெருநகரங்களில் காலை வேளையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. சென்னையின் பல்வேறு இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. பனி மூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காற்றின் தரத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து ஆய்வு செய்தது.  #Bhogi #BhogiCelebration #Pongal2019 #Bhogifestival
    தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்க போராடுவதற்காக தி.மு.க. தமிழ்நாடெங்கும் இந்த ஊராட்சிசபை கூட்டத்தின் மூலம் மக்களை நேரிடையாக சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறது. இரண்டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப் புள்ளி. அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சிக்குவர நீங்கள் செலுத்தும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி.

    மக்களை நேரிடையாக சந்திக்க தி.மு.க.வைத்தவிர எந்தக்கட்சியாலும் முடியாது. தி.மு.க. ஆட்சியில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாகி பயனடைந்தனர். ஆனால் இன்று வேலைவாய்ப்பு இல்லாமை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க கமி‌ஷன் கேட்பதால் பல நிறுவன முதலாளிகள் இங்கு வர பயப்படுகின்றனர். அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்களோ மற்றும் நிர்வாகிகளோ பார்க்கவில்லை அவருடைய உடல்நிலைகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் கலைஞர் மருத்துவ மனையில் இருந்தபோது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து அவரை பார்த்தனர். அதுவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்த கட்சி அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.

    மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கும், இங்கு வந்துள்ள பெண்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னும் 4 மாதத்தில் வரப்போகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சிதேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. சார்பில் பரப்பப்படுகிறது. உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சிதேர்தலை நடத்தவேண்டும் என்றுதான் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தோம். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றினார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தலைநிமிர்ந்து நிற்க எண்ணற்ற மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது நானே முன்னின்று வழங்கியுள்ளேன். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மூலம் நுழைய முயற்சி செய்கிறது. மத்தியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுபற்றி சட்டமன்றத்திலும் தெரிவித்தோம். ஆனால் அ.தி.மு.க. கபடநாடகம் ஆடுகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது. ஆனால் தர்மபுரி பஸ் எரிப்பில் தண்டனைக்குள்ளானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மத்திய மாநிலத்தில் உள்ள இந்த 2 கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சி மலர தொடக்கபுள்ளி வைக்க வேண்டும்.

    ஊராட்சிசபை கூட்டத்தில் பேசிய அனைவரும் தங்கள் பகுதிக்கு பஸ்வசதி, மருத்துவமனை, புதிய பள்ளிக் கட்டிடம், சாலை வசதி, குடிநீர் மற்றும் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டனர்.

    முன்னதாக அங்கு நிறுவப்பட்ட புதிய கொடிக் கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். இதில் காஞ்சி வடக்கு மாவட்டசெயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றியசெயலாளர்கள் இதயவர்மன், சேகர், படப்பை மனோகரன், நகரசெயலாளர் தேவராஜ், மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #DMK

    2019-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடியும் ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். #2019NewYear #NewYearCelebration
    சென்னை:

    உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக ஆங்கில புத்தாண்டு விளங்கி வருகிறது. பரந்து, விரிந்த இந்த பூமிப்பந்தில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

    அவ்வகையில், பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலிசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
     
    இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

    நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    சரியாக 12 மணி அடித்ததும் நாட்டின் பல முக்கிய பெருநகரங்களில் புத்தாண்டு விழா களைகட்டியது. கடற்கரைகள், பூங்காக்கள், முக்கிய சாலைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மகிழ்ச்சி கேளிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    குறிப்பாக, சென்னையில் அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எட்வர்ட் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    அதைதொடர்ந்து, இன்று அதிகாலையில் இருந்தே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகளை செய்து இந்த புத்தாண்டு இனிதாக, வளமாக அமைய தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.



    உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்து மக்கள் கங்கை நதியில் புனித நீராடி, பூஜை புனஸ்காரங்கள் செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் தடாகத்தில் சீக்கிய மக்களும் புனித நீராடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், ஜைன மதத்தை சேர்ந்தவர்களும் இனிப்புகளை பரிமாறி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு இனிதாகவும், சிறப்பாகவும் அமைய ‘மாலைமலர் டாட்காம்’ வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #2019NewYear #NewYearCelebration
     
    மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு வடகாடு பகுதி மக்கள் மின் விளக்கு வெளிச்சத்தை கண்டனர். அப்போது அவர்கள் பகலில் வந்து ஆய்வு நடத்தும்படி கண்ணீர் மல்க வேண்டினர். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகாடும் ஒன்று. மின் கம்பங்கள், மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இந்த பகுதி மக்கள் கடந்த 9 நாட்களாக இருளில் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மத்திய குழுவினர் வடகாடு பரமன் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனர். புயலால் சரிந்து இருளில் விழுந்து கிடந்த மரங்களை அவர்கள் பார்வையிடும் விதமாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மின் விளக்குகள் எரிந்தன.

    இதனால் 9 நாட்களுக்கு பிறகு அப்பகுதி மக்கள் வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்திய குழுவினர் அங்கு புயலால் சேதம் அடைந்த மரங்கள், வீடுகளை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்திய குழுவினரிடம், “எங்கள் வீடு, தென்னை மரங்கள் என்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம். எங்கள் வாழ்வாதாரமே அழிந்து போய் விட்டது. நீங்கள் தான் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக ரோட்டில்தான் நிற்கிறோம். நீங்கள் வந்ததால்தான் எங்களுக்கு வெளிச்சமே வந்துள்ளது. எங்களுக்கு தண்ணீர் மட்டும்தான் தருகிறார்கள். ஆய்வு பணியை செய்ய பகலில் வாருங்கள்” என கண்ணீர் மல்க வேண்டினர்.

    பெண்களில் பலர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கைகளை மத்திய குழுவினர் கருணையுடன் கேட்டு விட்டு அடுத்த இடத்தை பார்வையிட கிளம்பினர். குழு செல்லும் வழி நெடுக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    வீடு வாசல், தோட்டம், துரவுகளை இழந்து தவிக்கும் வேதனையில் யாராவது ஆவேசப்பட்டு அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அதை தடுப்பதற்காக சாலை ஓரங்களில் கயிறு கட்டி பொதுமக்களை அதனை தாண்ட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மத்திய குழுவினரிடம் நேரில் தங்களது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் போனது. #GajaCyclone #CentralCommittee
    கஜா புயல் தாக்கிய பிறகு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. #GajaCyclone #DeltaDistricts
    சென்னை:

    தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட மக்களை கதற வைத்த கஜா புயலின் சோகம் இன்னும் தீரவில்லை.

    ஒரே நாளில் மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்து விட்ட கஜா புயல், ஒரு வாரம் ஆகியும் மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டுள்ளது.



    4 மாவட்டங்களிலும் சுமார் 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதில் சுமார் 40 லட்சம் தென்னை மரங்களாகும். இதனால் தென்னையை நம்பி வாழ்ந்து வந்தவர்கள் வாழ்க்கை தலைகீழாக புரண்டுள்ளது. இதே போல மா, பலா மரங்களை வளர்த்து வந்தவர்களின் நிலையும் பரிதவிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    நெற்பயிர்கள் மற்றும் வாழையை இழந்துள்ள விவசாயிகள், 1200 படகுகளை இழந்துள்ள மீனவர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சமாளித்து டெல்டா மாவட்ட மக்கள் எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்ற வேதனையும், கேள்விக்குறியும் தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது.

    வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள சுமார் 2 லட்சம் பேர் 650-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். தங்கள் கிராமங்களில் இயல்பு நிலை திரும்பாததால் அவர்கள் தொடர்ந்து முகாம்களையே நம்பி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரமாக டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவிப்புக்கிடையே உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதும் மக்களுக்கு கடும் சவாலாக உள்ளது.

    அமைச்சர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். சுமார் 3 லட்சம் பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் 4 மாவட்டங்களில் அனைத்து ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டு இருப்பதால் நிவாரணப் பணிகளை திட்டமிட்டப்படி செய்து முடிக்க இயலவில்லை. தடைகளை கடந்தே நிவாரணப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் நிவாரண பணிகள் மந்தமான நிலையில் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கஜா புயல் தாக்கப் போவதற்கு முன்பு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்திருந்த தமிழக அரசு, அந்த புயல் இந்த அளவுக்கு மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி விடும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்டா மாவட்ட மக்களும் தங்களை புயல் புரட்டி போட்டு விடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதனால் புயல் தாக்கும் பட்சத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் மிக, மிக குறைவாகவே இருந்தது.

    குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் கஜா புயலை நினைத்து மக்கள் பயப்படாமல் இருந்தனர். அந்த கிராமங்களுக்குள் நுழையக் கூட முடியாத அளவுக்கு சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப் பகுதிகளை நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் இன்னமும் சிரமம் நீடிக்கிறது.

    சரிந்து விழுந்துள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்களை முழுமையாக அகற்றினால்தான் நிவாரணப் பொருட்களை கிராமங்களுக்குள் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் உணவு மற்றும் குடிநீருடன் டெல்டா பகுதிக்கு செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    பெரும்பாலான இடங்களில் இடிந்த வீடுகள், சரிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றினால், நிவாரண உதவி கிடைக்காமல் போய் விடும் என்ற தவறான வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அத்தகைய ஊர் மக்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்து மரங்கள், இடிந்த வீடுகளை அகற்றி வருகிறார்கள். மரங்களை அகற்றும் உபகரணங்கள் குறைவாக இருப்பதும் நிவாரண பணிகள் தாமதமாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

    வேரோடு சாய்ந்த 2.17 லட்சம் மரங்களில் நேற்று வரை 91 ஆயிரத்து 960 மரங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. சரிந்து விழுந்த 1.03 லட்சம் மின் கம்பங்களில் 13 ஆயிரத்து 848 மின் கம்பங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. இவை முழுமையாக அகற்றப்பட்டால்தான் நிவாரணப் பணிகளை 100 சத வீதம் விரைவாக செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

    இதற்கிடையே கஜா புயல் சேத விபரங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வரும் அதிகாரிகள் மூலம் தினமும் அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. புயல் சீற்றத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்த மரங்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை.

    இந்த நிலையில் வீடுகளை இழந்து தவிப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் தாக்கிய பிறகு முதல் 2 நாட்களில் சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.

    நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தகவலில், புயலுக்கு 1½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று, டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.

    வீடுகளை இழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் முகாம்களில் தங்கி உணவு பெற்று அரசின் பல்வேறு உதவிகளையும் பெற்று வருகிறார்கள். மற்ற 60 சதவீதம் பேர் அதாவது சுமார் 2½ லட்சம் பேர் வீடுகளை இழந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவியை எதிர்பார்க்காமல் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களில் 6955 திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதில் 6204 குடிநீர் திட்டங்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது.

    அரிசி, கோதுமை மற்றும் உணவுப் பொருட்களும் தேவைக்கு ஏற்ப டெல்டா மாவட்ட பகுதிகளில் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலும் அதிகமாக அனுப்பப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடக்கிறது.

    ஆனால் இந்த நிவாரணப் பொருட்கள் கிராம மக்களிடம் விரைவாக, தினமும் சென்று சேரவில்லை என மனக்குறை 70 சதவீத மக்களிடம் உள்ளது. மின்சாரம் இல்லாததும் மக்களிடம் குமுறலை அதிகப்படுத்தி உள்ளது.

    மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்து, உணவு பொருட்கள் சப்ளையும் சீராகி விட்டால் டெல்டா மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும். ஆனால் அந்த சுமூக நிலை திரும்ப எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. #GajaCyclone #DeltaDistricts
    ×