என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமநாதபுரம்"
- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
- தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
- மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு திரும்ப பெறப்பட்டது.
மண்டபம்:
தெற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வங்கக் கடல், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதனால் மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், இன்று (15-ந்தேதி) அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது எனவும் மீன் வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார்.
முன்னதாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டது.
அதன்பேரில் மண்டபம், பாம்பன், மூக்கையூர், ராமேசுவரம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட 30-க்கும் மேற் பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நங்கூர மிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் பகுதி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அதனை சார்ந்துள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மீன்பிடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- இந்திய கடற்படை, கடலோர காவல் படையினரும் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
மண்டபம்:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் தென்னிந்தியாவில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் இன்று அதிகபட்சமாக 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல் மண்டபத்தில் 12.20 மி.மீ. மழையும், பாம்பனில் 8.30 மி.மீ. மழையும், தங்கச்சி மடத்தில் 11.40 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய கடற்படை, கடலோர காவல் படையினரும் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் பாம்பன், மண்டபம், ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலானோர் நள்ளிரவில் முன் கூட்டியே கரை திரும்பினர். அதேபோல் இன்று காலையும் குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன.
- 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கு திடீர் சோதனையின் போது பணம் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேற்கண்ட லஞ்ச புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டிருந்த மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனடியாக சரிசெய்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு மாவட்டத்தில் லஞ்சம் கேட்டு பெற்றதாக 5 வழக்குகளும், திடீர் சோதனையின் போது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் மொத்தம் ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டு அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின் குறைகள் உடனே தீர்த்து வைக்கப்ப டும்.
மேலும் பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கொடுக்கலாம். அதன்படி 94982 15697 மற்றும் 94986 52159 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தெரிவித்தார்.
- ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர்.
- உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.
ஆறு, ஏரி, குளங்களில் உள்ள மீன்கள் உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் உயிர் வாழாது என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே வங்காள விரிகுடா கடலில் ஆறு மற்றும் ஏரிகளில் உள்ள ஜிலேபி மீன்கள் பிடிபட்டது. இதனைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறை பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் என்பவர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடலில் பாக் ஜலசந்தி பகுதியில் ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர். இந்த மீன்கள் கடலில் 2 முதல் 5 மீட்டர் ஆழத்தில் சுற்றி திரிகின்றன. 11 சென்டிமீட்டர் முதல் 23 சென்டிமீட்டர் வரை மீன்கள் வளர்ந்துள்ளன.
கடல் தண்ணீரில் இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்துள்ளன.
தன்னை சுற்றியுள்ள உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றின் வயிற்றில் உள்ள உணவை பார்த்தால் கடலில் உள்ள மென்மையான உயிரினங்களான கோப் காய்கள், மொல்லஸ்கள், சிறிய பிளாங்டன்கள், பாலி சீட் புழுக்கள் போன்றவற்றை சாப்பிட்டு வளர்ந்தது தெரிய வந்தது.
இந்த ஜிலேபி மீன்கள் கடலில் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருவதால் அவை உண்ணக்கூடிய கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வைகை ஆற்றில் இருந்து ஜிலேபி மீன்கள் கடலில் கலந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
- தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
- சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் ராமேசுவரத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தததால் தான் எனக்கு மக்கள் அதிக வாக்களித்தனர். எனவே பிரதமருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 52 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் வெற்றி பெற்று ஆட்சி செய்துள்ளது. ஆனால் தற்போது அனைவரும் பிரிந்து இருப்பதால் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா தொடங்கிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரிந்து கிடக்கும் சக்திகளை இணைப்பதற்காக சசிகலாவை விரைவில் சந்திப்பேன்.
தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது. எனவே அரசு கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது.
- ஜெல்லி மீன்கள் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரிய மான் சிறந்த பொழுது போக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க அரியமான் கடற்கரைக்கு வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்வதுடன் கடற்கரை ஓரமுள்ள சவுக்கு காடுகளில் குடும்பத்தினருடன் அமர்த்து உணவு சாப்பிட்டு விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை மற்றும் அரியமான் கடற்கரையில் கடற்கரை திருவிழா நடைபெற்று வருவதால் தினசரி திரளான சுற்றுலாப் பயணிகள் அரியமானுக்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இதனிடையே கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஒளிரும் தன்மையும், மெல்லிய உடல் அமைப்பும் கொண்ட இந்த மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றிக் கொள்ளும் தன்மையும் உள்ளதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன.
விஷத்தன்மை உள்ள இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதனை பிடித்து மகிழ்கின்றனர். அந்த மீன் ஒட்டிக்கொள்ளும் போது, அதில் இருந்து சுரக்கும் விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இன்று அரியமான் கடற்கரையில் குளித்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன் கடித்ததில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதுடன், ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது.
- பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த பகுதியில் கடல் பெரும்பாலான நாட்களில் கடல் சீற்றத்துடனேயே காணப்படும். இதனால், இந்த பகுதியில் துணை துறைமுகம் அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 70 அடி அகலமும், 70 அடி நீளமும் கொண்ட 'டி' வடிவிலான மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த இடத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என தெரிவித்தனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதன் பின்னர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது. இதன் பின்னர் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் படகுகளுடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து, மீனவர்கள் இந்த மீன் இறங்கு தளத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். இதன் பின்னர் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களில் செல்பி எடுக்கும் இடமாக இந்த பாலம் மாறியது.
இந்த நிலையில் தொடர்ந்து சூறை காற்று மற்றும் கடல் சீற்றத்தில் ஏற்படும் அலைகள் மீன் இறங்கு தளத்தில் மீது மோதி மோதி பாலம் சேதமடைய தொடங்கியது. இதன் பின்னர் அந்த பாலம் முழுமையாக அடைக்கப்பட்டது. தற்போது பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது. மீனவர்கள் பலமுறை எச்சரித்தும் அந்த இடத்தில் பாலத்தை கட்டி ரூ.15 கோடியை அதிகாரிகள் வீணடித்து விட்டதாக தனுஷ்கோடி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
- மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர்.
ஏர்வாடி:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 850 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் இன்று அதிகாலை நடைபெற்ற மதநல்லிணக்க சந்தனக் கூடு விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை மே9-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தொங்கியது.
மே 18-ந்தேதிஅடிமரம் ஊன்றப்பட்டது. மே 19-ந் தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடி யேற்றமும் நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதா யத்தினரும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களி லிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூன் 7-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்ன தானம் வழங்கப்படும்.
- பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது.
- பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி ரூ.535 கோடி மதிப்பிட்டடில் இரட்டை வழித்தடத்தில் புதிய ரெயில் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது. கப்பல்கள் வந்து செல்லும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் மையப்பகுதியில் கப்பல்களுக்கு விழிவிடும் வகையில் உயர் மின் அழுத்தம் கொண்ட மோட்டர்கள் மூலம் மேல் நோக்கி தூக்கும் வகையில் மையப்பகுதி அமைக்கப்படுகிறது.
பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இருந்து மையப்பகுதியில் பொறுத்தப்படும் பாலம் வடிவமைக்கப்பட்டு தற்போது மையப்பகுதி அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மையப்பகுதியில் பொறுத்தப்படும் தூக்கு பாலம் பொறுத்துவதற்கு வசதியாக கடலில் ராட்சத இரும்பு மிதவையில் கிரேன் பொருத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் காரணமாக தூக்குப்பாலம் கால்வாயில் கப்பல்கள் பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் வரை கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது என ரெயில் விகாஸ்நிகம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அருவிகளுக்கும், வனப்பகுதிகளுக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
- கோடையில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வெகுவேகமாக நிரம்பி வருகின்றன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
கடந்த மாதத்தில் வெளுத்து வாங்கிய கோடை வெயில் காரணமாக குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. தற்போது கோடை விடுமுறை என்பதால் அவற்றை பள்ளி மாணவர்களும், கல்லூரி இளைஞர்களும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த சூழலில் கத்திரி வெயில் தொடங்கிய ஓரிரு நாட்களில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த சுழற்சி காரணமாக வெப்பநிலை மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலமாக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் தெற்கே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளிலும், நீரோடைகளிலும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அருவிகளுக்கும், வனப்பகுதிகளுக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, திருவாடானை, தங்கச்சிமடம், மண்டபம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் அதிகனமழை பெய்தது.
இதனால் கோடையில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வெகுவேகமாக நிரம்பி வருகின்றன. நீரோடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கோடையை வாட்டி வதக்கிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக தட்ப வெப்பநிலை ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகள் நிரம்பி வருவதால் கோடை உழவு பயிரிட்டுள்ள விவசாயிகளும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கமுதி பகுதியில் கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. கமுதி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் கிராமங்களில் பெண்கள், ஆண்கள், முதியோர்கள் அனைவரும் தள்ளு வண்டியுடன் வெகு தொலைவு சென்று தண்ணீர் எடுக்கும் சூழ்நிலை இருந்து வந்தநிலையில் திடீரென பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. தொண்டி, திருவாடானை, தங்கச்சிமடம், மண்டபம், ராமேசுவரம், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், அபிராமம், கோவிலாங்குளம், புதுக்கோட்டை, மண்டலமாணிக்கம், பெருநாழி, கிழராமநதி ஆகிய பகுதியில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது.
ராமேசுவரம்,பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் காணப்பட்டது. நேற்று பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கியது. இந்த பகுதியில் மழை பெய்தால் மழைநீர் தேங்கி விடுவதாகவும் 500 மீட்டர் வரை சாலையை உயர்த்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று மழையின்றி மிதமான வெயில் காணப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக பெய்த மழையின் அளவு (மி.மீ) பின்வருமாறு:-
தொண்டி-96.40, தீர்தண்டதானம்-78.40, வட்டானம்-64.80, திருவாடானை-44.00, தங்கச்சிமடம்-22.00, மண்டபம்-20.60, ராமேசுவரம்-19.00, பாம்பன்-15.20, கமுதி-11.40, கடலாடி-9.40, ஆர்.எஸ்.மங்கலம்-3.00, ராமநாதபுரம்-2.00, பரமக்குடி-1.50, பல்லமோர்குளம்-1.50.
- பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர்.
- காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கீழக்கரை:
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி அரசு நகர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 28 ஆண்கள், 18 பெண்கள் உள்பட மொத்தம் 46 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆத்திமுத்து(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.
ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டி சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து அலட்சியமாக செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.
இந்த சூழலில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி கொடுப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக இறக்கினார்.
அப்போது திடீரென பஸ் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். மேலும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் விரைவாக உயிருடன் விரைவாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் காயமடைந்த சிலரை தனது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து குறித்து திருப்புலாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போனில் பேசியபடியே டிரைவர் பேருந்தை அலட்சியமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து
துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்