என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்"

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆண்டார்குளத்தை சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53). இவர் ஆண்டார்குளத்தில் இருந்து சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு 8 மணி அளவில் ஆண்டார்குளம் செல்வ தற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.

    உடனடியாக ஜோதி ரோஸ்லின் கூச்சலிடவே பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு
    • கொலைமிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி:

    நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவர் குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிகிறார்.

    சம்பவ தினம் மார்த்தா ண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் துறைமுகம் வழியாக செல்லும் பஸ்ஸில் பணிபுரிந்துள்ளார். அப்போது தேங்காப்பட்டணம் பஸ்நிறுத்ததில் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த பெல்லஸ்பர் என்பவர் பஸ்சில் ஏறி முள்ளூர்துறை என்ற இடத்துக்கு டிக்கட் எடுத்துள்ளார்.

    பஸ் அரையன்தோப்பு பகுதியில் செல்லும்போது பஸ்ஸை நிறுத்த கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பெல்லஸ்பர் ஓட்டுநர் இருக்கை சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜன் தேங்காப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின்பேரில் அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    இது போன்று பெல்லஸ்பர் அளித்துள்ள புகாரில் பஸ்ஸில் ஏறி, தேங்காப்பட்டணம் துறைமுகப்பகுதியில் இறங்க வேண்டும் என டிக்கட் எடுத்ததாகவும், குறிப்பிட்ட இடம் வந்ததும் நடத்துனர் விசில் அடித்தும், டிரைவர் நிறுத்தாமல் சென்றதாகவும், இதை கேட்டதால் டிரைவர், நடத்துனர் இருவரும் சேர்ந்து பெல்லஸ்பரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார். இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றும், நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அண்ணா பஸ்நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் அங்குள்ள கழிவறையை சென்று பார்வையிட்டார். அப்போது கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இதை தொடர்ந்து அதிகாரியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து நாகராஜா திடல் , மீனாட்சிபுரம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் மோசமாக காணப்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். பஸ் நிலையத்தில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதுடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளது.அந்த ஓடைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்தமோகன்,மண்டலத் தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரோசிட்டா, திமுக மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வாலிபர்கள் கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
    • வாலிபர்க்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளிப்புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி(வயது 27) .இவர் நேற்று கோவை சென்று விட்டு பல்லடம் வருவதற்காக கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அருகே வரும்போது இவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அந்த இரண்டு வாலிபர்களும் கார்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட, பஸ்சிற்குள் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பஸ்சை நிறுத்தினார். காயம் பட்ட கார்த்தியை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்(19) , சேது (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
    • மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 15 மாதத்தில், 6.85 கோடி பேர் இலவச பஸ்கள் மூலம் பயணித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கிளை 1ல் இருந்து, 43, கிளை, 2ல் இருந்து 27, பல்லடத்தில்இருந்து 51, காங்கயம், 45, தாராபுரம், 31, உடுமலை, 57 என மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.

    கடந்தாண்டு ஜூலை முதல், நடப்பாண்டு செப்டம்பர் வரையிலான 15 மாதத்தில் இந்த பஸ்களில், 6கோடியே, 81 லட்சத்து 59 ஆயிரத்து 815 பெண்கள், 3லட்சத்து 69 ஆயிரத்து 502 மாற்றுத்திறனாளிகள், 25 ஆயிரத்து 877 மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள், 38 ஆயிரத்து 186 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம், 6 கோடியே 85 லட்சத்து 93 ஆயிரத்து 380 பேர் பயணம் செய்துள்ளனர் எனமாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
    • இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும், இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்திட வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்ல வேண்டும் , பஸ்சில் செல்லும் மாணவர்களிடம் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட துணை தலைவர்பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பா ட்டத்தில் கோரி க்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர்.
    • அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.

    மாநகர, நகராட்சியில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    உள்ளூர் வாசிகள் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல டவுன் பஸ்களில் பயணம் செய்யும்போது அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சுதாரித்துக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் இறங்கி விடுவார்கள். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டவுன் பஸ்களில் பயணம் செய்தால், அவர்கள் இறங்க வேண்டிய இடம் எங்கு இருக்கிறது? என தெரியாமல் தடுமாறுவார்கள்.

    பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.

    கண்டக்டரை பார்த்து கேட்கனுமா? அவர் வேறு முன்னாடியே நின்னுக்கிட்டு இருக்காரு. இறங்க வேண்டிய நாம் முன்னால் அமர்ந்திருந்தால் கண்டக்டர் பின்னாடி இருப்பார். இந்த படபடப்பு தினந்தோறும் வெளியூரில் இருந்து நகரத்திற்கு வரும் பயணிகளின் மனதில் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது.

    பஸ்சில் தூக்கம்

    மேலும் ஒரு சில டவுன் பஸ்களில் கண்டக்டர் பேருந்து நிற்கும் இடத்தின் பெயரை சொல்வார். ஆனால் அது அவருக்கே கேட்காது. காரணம் பஸ் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் தான்.

    ஒரு சிலர் பஸ்சில் ஏறியதும் தூங்கி விடுகிறார்கள். சிலர் பயணத்தின்போது கவனக்குறைவாக இருக்கி றார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க வேண்டி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் நலன் கருதி அடுத்து வரும் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படுகிறது. மின்சார ரெயில்கள், பயணிகள் ரெயில்களில் டிஸ்பிளேயில் காண்பிக்கப்ப டுகிறது.

    ஜி.பி.எஸ்.கருவி

    இந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் உள்ள நகர பஸ்களிலும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சேலம், நெல்லை, மதுரை கோட்ட நகர பஸ்களில் முதல் கட்டமாக 100 பஸ்களில் ஸ்பீக்கர் பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    தற்போது இது விரிவுப்ப டுத்தப்பட்டு, மேலும் பல டவுன் பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டவுன் பஸ்களில் ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய ஸ்பீக்கர் டிரைவரின் அருகிலும், நடுப்பகுதி, பின் படிக்கட்டின் எதிரில் என 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

    பஸ்சை இயக்கியவுடன் பஸ் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை நிறுத்துமிடம் குறித்து ஒலி பெருக்கியில் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நிறுத்தம் நெருங்கும் முன்பாக பஸ் நிறுத்தம் குறித்து அறிவிக்கிறது. குறிப்பாக நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பாகவே அடுத்து வருவது அண்ணா பூங்கா என்று, ஒவ்வொரு இடம் வருவதற்கு முன்பாக ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கிறது.

    15 பஸ்களில்...

    சேலம் மாநகரில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சன், ஏற்காடு அடிவாரம் வரை இயங்கும் சுமார் 15 பஸ்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.

    இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    பாலப்பள்ளம் அருகே உள்ள வழுதலம்பள்ளம் ஒப்பிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி பகவதி (வயது 65). இவர் நேற்று திங்கள்நகர் பஸ் நிலையத்திலிருந்து பேருந்தில் மணவாளக்குறிச்சிக்கு சென்றார்.

    அப்போது மாங்குழி பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும்போது பகவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பஸ்சில் தேடி பார்த்தார். எனினும் செயின் கிடைக்கவில்லை. பகவதியிடம் இருந்து யாரோ மர்ம நபர் செயினை திருடி சென்று விட்டனர். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
    • இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்.

    நாமக்கல்:

    ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில், காவேரி ஆர்.எஸ், ஆயக்காட்டூர் கார்னர், ஓட பள்ளி, கொக்கராயன் பேட்டை வழியே அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு வரை செல்கிறது. இந்த பஸ்சில் திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.

    பேப்பர் மில் காலனி ரோட்டில் செல்லாமல் ஓட பள்ளி ரோட்டில் பஸ் சென்றது. இதனை கவனித்த திருச்செங்கோடு செல்லும் பெண்கள் சிலர், பஸ் வேறு பாதையில் செல்வதால், பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் கண்டக்டரை திட்டினார்.

    அப்போது அந்த பெண்கள், நாங்கள் திருச்செங்கோடு செல்ல வேண்டும், ஆனால் பஸ் நேராக செல்கிறது என்றனர். இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு பெண்களுக்காக இலவச பஸ்களை இயக்குகிறது. ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை மதிக்காமல் நடுவழியில் கீழே இறக்கி விடுவது வேதனையாக இருப்பதாக பெண் பயணிகள் தெரிவித்தனர்.

    • புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது.
    • 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சாவூர் மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதும் பல கோடி மதிப்பிலான யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வர உள்ளது. மாமன்னர் ராஜ ராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த மாமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி: தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திலேயே நிரம்பி வழிகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஏறும் பயணிகள் இடம் கிடைக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.

    இதனால் பலர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது போல் பழைய பஸ் நிலையத்தில் ஆரம்ப மையமாகக் கொண்டு கும்பகோணத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும். இதேபோல் திருச்சிக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க வேண்டும்.

    மண்டல குழு தலைவர் மேத்தா: சதய விழாவை அரசு

    விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் காமராஜ் மார்க்கெட்டை திறந்து வைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    மணிகண்டன் : ரூ.500-க்கு கீழ் வருமானம் உள்ள அம்மா உணவகம் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகளுக்கு பயன்படும் அம்மா உணவகத்தை மூடக்கூடாது ‌‌. தஞ்சை மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை மாநகரில் உள்ள சாந்திவனம், ராஜகோரி, மாரிகுளம் ஆகிய மூன்று சுடுகாட்டில் உடல்களை எரிக்க தனியார் அமைப்புக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் கூறும்போது, சுடுகாட்டில் உடல்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று நான் பதவி ஏற்றவுடன் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினேன். கடந்த முறை உடல் தகனம் செய்ய பணம் வாங்கப்பட்டது. ஆனால் நான் மேயராக பதவி ஏற்றவுடன் முழுக்க முழுக்க இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவித்தேன். இந்தத் திட்டத்தில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை.

    ஒருபோதும் முறைகேடு நடக்க விட மாட்டேன். ஒரு சுடுகாட்டுக்கு உடல்களை எரியூட்ட 27 டன் அளவுக்கு மரக்கட்டைகள், ரூ.12 ஆயிரம் வைக்கோல்கள் தேவைப்படுகிறது. மேலும் 2 உடலுக்கு 1 சிலிண்டர் எரியூட்ட தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அறியாமல் கவுன்சிலர் எந்த விதத்தில் பேசுகிறார் என தெரியவில்லை. இருந்தாலும் முழுக்க முழுக்க உடல்கள் இலவசமாக மட்டும்தான் தகனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்பட கூறுகிறேன். ஒருபோதும் முறேகேடு நடக்காது. மேலும் அம்மா உணவகம் மூடப்படாது என்றார்.

    தொடர்ந்து கவுன்சிலர் கோபால் பேசும் போது : 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும். தெற்கு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை சீரமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    யு.என்.கேசவன்: 30-வது வார்டு சவுராஷ்ட்ரா கீழ ராஜ வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அதை தடுத்து அங்கு வேலி கட்ட வேண்டும். கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    ஜெய் சதீஷ்: எனது வார்டில் ரூ.49 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தமிழ்வாணன் : மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் கிடையாது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை வைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து: சாலைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

    காந்திமதி : தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே உள்ள ரேஷன் கடை பகுதிக்கு வருகிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும். மேலும் மார்க்கெட் மற்றும் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    சரவணன் : சீனிவாசபுரம் அகழிபாலத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மாடுகள் அங்கேயே படுத்துக் கொள்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீலகண்டன் : பொது இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.

    ஸ்டெல்லா : கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இதற்கு மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×