என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி கிருத்திகை"

    • திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார்.
    • ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.

    அமைவிடம் :

    திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.

    தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.

    மலையின் சிறப்புகள் :

    திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.

    மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.

    "குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

    தலச்சிறப்புகள் :

    இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.

    இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க்குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

    திருமுருகாற்றுப்படை தந்த-நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

    வள்ளலாரும், முருகப்பெருமானும் :

    வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி :

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

    திருவிழாக்கள் விவரம் :

    ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
    • காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள் :

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அவ்வையை சுட்ட பழம் :

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை :

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம் :

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம் :

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    • வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.
    • ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. 'ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    சேலம் ஏழுபேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

    திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

    கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளிபடும். பகல் 12 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளிபடும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

    • ஆறுமுகத்தானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருப்பூர்:

    ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆறுமுகத்தானுக்கு பன்னீர், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.

    • 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
    • 16 வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடந்தது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும். 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.

    அதன் பின்னர் 9.30 மணிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து, ரோஸ் உள்ளிட்ட 16 வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.

    பின்னர் அலங்கார தீபாராதனையும், விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்.
    • ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

    ஆடி அமாவாசை

    ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    இந்நன்னாளில் சுமங்கலி பூஜையும் செய்கின்றனர்.

    ஆடி கிருத்திகை

    ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள்.

    அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து, தண்டபாணியை வணங்குவர்.

    ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

    ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர்.

    அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

    இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடி மாதத்தில், இறைவழிபாட்டில் தோய்ந்து தெய்வ நிந்தனை பெறுவோம்.

    • இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.
    • பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை:

    தை மாதம் வரும் தை கிருத்திகை,

    கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடிக்கிருத்திகை தினத்தன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று

    புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    • கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.
    • ஆடி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும்.

    ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை அன்று காலை 6.30 மணிக்கு 2 மாடுகள் 181 படிகட்டுகள் ஏறி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும்.

    முருகப்பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும் கூட அவரை வளர்த்தெடுத்தது எல்லாம் கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.

    கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப்பெரிய புண்ணியத்தை தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும்.

    பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அடுத்த மாதம் 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு ஜூலை 29-ந்தேதி செயல்படவேணடும்.

    இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    • இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன்.
    • கால புருஷனுக்கு நான்காம் வீடான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும்.

    ஆடிப் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

    இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன்.

    கால புருஷனுக்கு நான்காம் வீடான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும்.

    காலச்சக்கரத்தின் நான்காவது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் உண்டு. சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன்.

    சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோகமாகவும், அதுவே ராகு-கேது, சனி போன்ற கிர கங்களுடன் சேரும் போதும் அவயோக தோஷமாகவும் மாறுகிறது. சந்திரன் தரும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையில் உச்சத்தை அடைய வைக்கும்.

    வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறிவிடும்.

    அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரனால் பாதிக்கப்பட்டால் வறுமை தண்ணீரில் கண்டம்,திருமணதடை, தோல்விகள், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

    கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும்.

    எனவே கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 4-ம் அதிபதி சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் தென் மேற்குப் பருவ மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதைத்தான் 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். அனைத்து நதிகளும் நீர் நிரம்பி காணப்படும்.

    • நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர்.
    • கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது.

    உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். அன்று புனித நதிகளுக்கு சீர் செய்து வணங்குவது சிறப்பு.

    நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர்.

    கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பிலுள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி.
    • பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதி யான அன்று கருட பஞ்ச மியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.மற்றவர்களுக்கு தீங்கி ழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள்.

    எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.

    பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    விபத்து, நோய் நீக்கும் ,மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாக திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் செய்வது நலம் தரும்.

    கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு, கேஸ் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.

    ×