என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 வழிச்சாலை"

    • 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
    • சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    மும்பை:

    மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.

    இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.

    அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    • அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
    • 2024 - ம் ஆண்டு மே மாதத்திற்குள் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கன்னடிகுப்பம் ,அய்யனூர் ரெயில்வே மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத் துறையால் ரூ .27.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . அந்தப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சுமார் 10 ஆண்டு காலம் நில எடுப்புப் பணிகள் நடைபெறாமல் இந்த திட்டம் நிலுவையில் இருந்தது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ் டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் நடைபெறாமல் உள்ளன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு , அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிறகு பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, கன்ன டிகுப்பம் அய்யனூர் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . அந்தப் பணியை தற்போது ஆய்வு செய்துள்ளேன். 2024 - ம் ஆண்டு மே மாதம் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்.

    இந்த பாலத்தால் வெள்ளக்குட்டை மற்றும் மலைப் பகுதிகளில் இருந்து விளைவிக் கக்கூடிய விவசாய பொருள்கள் உரிய நேரத்தில் நகர்ப் பகுதிக்கு கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்கும் , வேலைக்கு செல்லும் பணியாளர்கள் , தொழிலாளர்கள் , பள்ளி , கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் , வியாபாரிகள் பயன்பெறுவார்கள் . ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது .

    இதைத் தடுக்க விரைவில் திருப் பத்தூரில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் . அதேபோல நெடுஞ் சாலைத் துறை சார்பில் , மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்கான நிகழ்ச்சிகள் நடத் தப்படும் . வாணியம்பாடி நியுடவுன் ரெயில்வே மேம்பாலப் பணிக்காக நிலம் எடுக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    அந்தப் பணி நிறைவடைந்த உடன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் , எம் எல்ஏ - க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் , கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர்கள் சுந்தர், முரளி, உதவி கோட்டப் பொறியாளர்கள் யாகூப், பாபு, உதவி செயற் பொறியாளர்கள் ஜலாலுதீன், சிலம்பரசன், தாசில்தார் மகாலட்சுமி, ஆம்பூர் நகராட்சி கமிஷ்னர் ஷகிலா, பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது.
    • திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து ரேணிகுண்டா வரை,124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக அமைகிறது. இந்த சாலை அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு அப்போது ரூ. 571 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.

    சென்னை பாடியில் இருந்து, திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இரு வழிச்சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.

    திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் இரும்பு தொழிற்சாலை அருகில், இணைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளாக முடங்கியது.

    இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடத்தில், சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன.

    பெரும்பாக்கம், காக்களூர், தண்ணீர்குளம், ஈக்காடு ஏரிகளில் சாலை அமைக்க, பொதுப்பணித் துறை அனுமதி பெறப்பட்டது.

    இதில் நீர்வழிச்சாலையில் 3 பெரிய மேம்பாலம், 12 சிறிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை பணி மேற்பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:-

    திருவள்ளூரில் இருந்து, திருநின்றவூர் வரை, நான்கு ஏரிகளில் பொதுப்பணித் துறை அனுமதிக்காக காத்திருந்தோம். தற்போது நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏரியில் எங்களுக்கு அளந்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில், குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட திருநின்றவூர் வரை 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த இடங்களில் தற்போது, மேம்பால துாண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
    • 6 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து 6 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஊத்துக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

    இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றுப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

    6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 6 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து 6 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஊத்துக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா, எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அறிவுச் செல்வன், ஊத்துக்கோட்டை நகரப் பொருளாளர் ஜெபா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மஸ்தான், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலச் செயலாளர் கரீம், தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நாகராசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெரியசாமி, செஞ்சிறுத்தைகள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சலீம் பாய், கிழக்கு மாவட்ட செயலாளர் புகாரி மற்றும் பலர் கலந்து கொண்டு 6 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி கண்டன முழுக்கங்கள் எழுப்பினர். தமிழர் விடுதலை இயக்கத்தை சார்ந்த ஆனந்தன் நன்றி கூறினார்.

    • 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
    • 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைகிறது.

    இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளை நிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். எனினும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் பருத்தி மேனிகுப்பத்தில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபாமா ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்பட உள்ளது.
    • கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது.

    வேளச்சேரி:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இதில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை (இ.சி.ஆர்.) அகலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சாலையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கடைகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    இதே போல் கொட்டிவாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் சாலையேரங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகிறார்கள்.

    கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் ஒதுக்கியதும் 3 மாதத்தில் இந்த பணி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவது நீண்ட காலமாக நீடித்தது. ஏனெனில் அதிக நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருந்தது.

    கட்டிடங்கள் அகற்றப்பட்டதும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். தற்போது கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. சாலையோரத்தில் உள்ள மரங்களும் அகற்றப்படும்.

    கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி முதலில் முடிக்கப்படும் என்றார்.

    • சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • புதிய 6 வழிச் சாலைக்கான டெண்டர்களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் புறநகர் பகுதிகளில் இருப்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.

    இதனால் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நகர எல்லைக்குள் கனரக வாகனமோ, கார், வேன் போன்ற வாகனமோ செல்லாமல் சுற்று வட்டச் சாலையை பயன்படுத்தி கடந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு முன்னேற்ற கழகம் சார்பாக வெளிவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை வெளிவட்ட சுற்று சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கை 2017-ல் சமர்பிக்கப்பட்டது. இந்திய ரோடு காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் இரண்டு வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையும், ஒரகடம், தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    133 கி.மீ. நீளமுள்ள சென்னை வெளிவட்ட சுற்று சாலை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் தொடங்கி சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம் தச்சூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகம் வழியாக எண்ணூர் துறைமுகம் வரை ரூ.15,626 கோடியில் அமைகிறது. 5 பிரிவுகளாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான 25.50 கி.மீ. தூரமும், தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள தச்சசூரில் இருந்து திருவள்ளூர் புறவழிச் சாலை தொடங்கும் வரை 26.25 கி.மீ. மூன்றாவதாக 29.55 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் புறவழிச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையும் அமைகிறது. ஸ்ரீபெரும்புதூ ரில் இருந்து சிங்க பெருமாள் கோவில் வரை உள்ள 24.85 கி.மீ. தூரத்திற்கு 4-வது பிரிவு அமைகிறது. 5-வது பிரிவு சிங்க பெருமாள் கோவிலில் இருந்து மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் 27.50 கி.மீ. தூரம் இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் -சிங்க பெருமாள் கோவில் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்க ஒரு ஆலோகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 6 வழிச்சாலை அமைக்கப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் பிரிவு பணிகளின் ஒரு பகுதியாக திருவள்ளூர் பைபாஸ்- வெங்கத்தூர் மற்றும் வெங்கத்தூர் செங்காடு வரையிலான புதிய 6 வழிச்சாலைக்கான டெண்டர் களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்ட பின்னர் நீட்டிப்புகளுக்கான புதிய டெண்டர் அமைக்கப்பட்டுள்ளன என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது

    பெரியபாளையம்:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம்,பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

    இந்த சாலை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள ஆயிரத்து 300 ஏக்கர் நஞ்சை நிலம் பாதிப்படையும். மேலும் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஏழு கோவில்கள், 200 வீடுகள், இரண்டு அரசு பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆயினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது. இது பற்றி அறிந்த ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சாரதி தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் 6 வழிச்சாலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் அனைவரும் விளைநிலத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 10 கிராம விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×