என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.
    • உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்ட மோடி தமிழராகவே செயல்படுகிறார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.

    எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படாததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான். மருத்துவமனை வருவதற்கு துணை நிற்காமல், வராமல் இருப்பதற்கு துணை நிற்கிறார்கள். ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும். அதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.

    கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு தொடர்பாக எடுத்த முடிவுக்கு தி.மு.க. துணை போனது. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்த கூட்டணியாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உள்ளது.

    இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். மீனவ மக்களின் வாக்கு அவர்களுக்கு கிடைக்காது. தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி உள்ளது. 10 வருட காலம் மோடி அரசின் சாதனை எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இந்த வெற்றியானது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.

    இவர் அவர் பேசினார்.

    • நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
    • இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

    பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அ.தி.மு.க.வையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

    இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும்.


    தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

    அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

    அந்த ஆதரவின் உதவியுடன் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
    • அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?

    பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.

    எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.

    கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?

    பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?

    பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.

    கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?

    பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.

    தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.

    சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.

    கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?

    பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.

    இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

    எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான ‘சுப ஆசீர்வாத்’ நிகழ்ச்சி நடந்தது.
    • பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அதனை தொடர்ந்து நேற்றும், இன்றும் திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள். திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

    மேலும், 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா பச்சன் ஆகியோருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே போல நடிகர் ஷாருக்கான் தனது மனைவி, மகளுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப், வெங்கடேஷ், நடிகைகள் மாதுரி தீட்சித், ஹேமமாலினி, காஜல் அகர்வால், திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் அட்லீ, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியுடன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாக்கள் நிறைவு பெறுகின்றன.

    • மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
    • பிரதமர் மோடியும்-முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை.

    புதுடெல்லி:

    இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    மனைவி சஜிதாவுடன் தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.

    அதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.


    மாலத்தீவு அதிபரும், அவரது மனைவியும் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அவர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றார்.

    முகமது முய்சுக்கும், அவரதுமனைவி சஜிதாவுக்கும் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரி வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.

    பின்னர் மாலத்தீவு அதிபர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் வெளியுறவுத் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங்கும் உடன் சென்றார்.


    இதன் பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லியில் உள்ள ஐதரா பாத் இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

    அவரை கை குலுக்கி வர வேற்று பிரதமர் மோடி அழைத்து சென்றார். பின்னர் மோடியும்-முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நலன், மேம்பாடு, உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.


    இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜூன் மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் கலந்து கொண்டாலும் இதுவே அவரது முதல் அரசு பயணமாகும்.

    • ஐந்து நாள் சுற்றுப் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா சென்றார்.
    • பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார்.

    இந்திய பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

    முதலில் நைஜீரியா சென்ற அவர், அங்கிருந்து ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றார். பிரேசிலில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அங்கிருந்து கயனா சென்றார்.

    இந்த நிலையில் கயானா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுள்ளார்.

    ஐந்து நாள் பயணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா சென்றடைந்தார். கடந்த 17 வருடத்தில் நைஜீரியா சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார். அங்கு நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபு உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்திய சமூகத்தினருடன் உரையாடினார். நைஜீரியானாவின் உயரிய விருது (the Grand Commander of the Order of the Niger) பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

    பின்னர் பிரேசில் சென்று ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து பேசினார். அத்துடன் ஏராளமான உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின் கயானா சென்றார். 50 வருடத்தில் கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

    அங்கு நடைபெற்ற 2-வது இந்தியா-காரிகோம் மாநட்டில் கலந்து கொண்டார். இங்கு கயானா நாட்டின் உயரிய விருது மோடிக்கு வழங்கப்பட்டது. கயானா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    • குவைத்தில் என்னுடைய 101 வயது தாத்தாவை சந்திப்பீர்களா என வேண்டுகோள்.
    • நிச்சயமான சந்திப்பேன் என பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

    இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் சென்றுள்ளார். வளைகுடா நாட்டிற்கு 43 வருடத்திற்குப் பிறகு செல்லும் இந்திய பிரதமர் மோடி ஆவார். குவைத்தின் முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

    பிரதமர் மோடி குவைத் செல்கிறார் என்று தெரிய வந்ததும், எக்ஸ் பயனர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவிட்டிருந்தார்.

    அதில் "பிரதமர் மோடிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். என்னுடைய 101 வயது தாத்தா நானாஜி குவைத்தில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி. இந்திய வம்சாவளியினர் சந்திக்கும்போது அவரை சந்திப்பீர்களா? என்று கேட்டிருந்தார். மேலும், அவர் உங்களுடைய மிகப்பெரிய பிரியர். மற்ற விவரங்கள் அனைத்தும் உங்களுடைய அலுவலகத்தறி்கு அனுப்பி வைத்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பிரதமர் மோடி "நிச்சயமாக! நான் உங்கள் தாத்த மங்கல் செயின் ஹண்டாவை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என பதில் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் குவைத் சென்ற பிரதமர் மோடி, மங்கல் செயின் ஹண்டா சந்தித்தார். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபி மொழியில் வெளியிட்ட அப்துல்லாதீப் அல்னெசெஃப், மொழி பெயர்த்த அப்துல்லா பரோன் ஆகியோரையும் சந்தித்தார்.

    • யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களை அவர் சந்தித்து உரையாடினார்.
    • பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து குவைத் பிரதமர் வழியனுப்பி வைத்தார்.

    குவைத்:

    பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.

    அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்ற அவர்கள் பிரதமருக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.

    தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதன்பின்னர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

    இந்நிலையில், குவைத் நாட்டுக்கான 2 நாள் அரசுமுறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை காண விமான நிலையத்திற்கு வந்த குவைத் பிரதமர், பின்னர் அவரை வழியனுப்பி வைத்தார்.

    இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார். யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களையும் அவர் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



    பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழக அரசுக்கும், கவர்னருக்கும், இடையே நிலுவையில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்தும் கவர்னர் எடுத்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    ஜனவரி 6-ந்தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது.

    மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத தொடக்கம் முதலே பலமுறை டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இன்று [டிசம்பர் 25] 29வது நாளை எட்டியுள்ளது.

    உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து அவர் 15 கிலோ வரை வரை எடை குறைந்துள்ளார். புற்றுநோயாளியான தலேவால் விடாப்பிடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 19) அவர் மயங்கி விழுந்தார்.

    இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையாலும் டல்வாலின் நிலை மோசமாக உள்ளது. அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால் அவர் எந்த வித சிகிச்சையையும் மறுத்து வருகிறார்.

     

     

    விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது தனது கடைசி மூச்சு வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்று விவசாய சங்க உறுப்பினரான அவ்தார் சிங் தெரிவித்துள்ளார் . பட்டினியால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ள அவருக்கு அதிகரித்து வரும் குளிர் காலநிலையும் சவாலாக உள்ளது. 

     முன்னதாக கடந்த டிசம்பர் 2 ஆம் வாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த தலேவால், தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியிருந்தார்.

     

    தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் தலேவாலின் உயிரைக் காப்பாற்ற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் முறையிடுவது என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவருக்கு ஆதராக கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் மெழுகுவர்த்தி பேரணி நடந்தது. இதற்கிடையே டிசம்பர் 30-ம் தேதி பஞ்சாப் பந்த் நடத்துவதற்காக, டிசம்பர் 26-ம் தேதி கானௌரி எல்லையில் அனைத்து சமூக, வணிக, கலாச்சார மற்றும் மத அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
    • மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    • மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கும் என்றது மத்திய அரசு.
    • மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    மன்மோகன் சிங்கின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் 28ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்தது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×