என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க"

    • நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர் குறிச்சி அருகே உள்ள உதயகிரி கோட்டையினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கன்னியாகுமரி கடற்கரை, லெமூரியா கடற்கரை, பூம்புகார் படகுதளம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகிறார்கள்.

    சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்வரைவு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உதயகிரி கோட்டையினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உதயகிரி கோட்டை வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகள் ரூ.13 லட்சம் மதிப்பில் வளாகத்திலுள்ள குளத்தினை தூர்வாரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு இப் பணிகளை விரைந்து முடித்திட பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து படைத்தளபதி டிலனாய் கல்லறையினை பார்வையிடப்பட்டது.உதயகிரி கோட்டை வளாகத்தினை தூய்மைப்படுத்து வது, தொங்குபாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தினை வகுத்திட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. வளாகத்திலுள்ள மீன் அருங்காட்சியகத்தினை மேம்படுத்துவது அதிகமான விலங்குகள், பறவைகளை இங்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் வனத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கூடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இச்சமையலறை பயன்பாட் டிற்கு வரும்போது பத்மநாபபுரம் நகராட்சி விலவூர் திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி ஆகிய நான்கு பேரூராட்சிக்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
    • இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறிஞ்சிக்குழாய் அமைக்காமல் கழிவுநீரை சாக்கடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த கழிவுநீரை விடும் பைப்பை அடைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் இடம் இல்லாதவர்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சிக் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் உறிஞ்சி குழாய்கள் அமைக்காத வீடுகளில் கழிவுநீர் குழாய்களை சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

    அதில் கட்டையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக உறிஞ்சி குழாய்கள் அமைப்பதால் ஏற்கனவே போர்வெல் அமைத்திருக்கும் இடங்களில் கழிவுகள் கலக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே மாநகராட்சி தனது முடிவை மறு பரிசீலனை செய்து தற்போது உள்ள நடைமுறைபடியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கட்டையன்விளை பகுதியில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் மாநகராட்சி சார்பில் சானல் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பால் இரு தரப்பினருக்கும் மோதல்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவருக்கும் லட்சுமாயூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (45) என்பவருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டபோது அந்த இடம் குணசேகரனுக்கு சொந்தமான இடம் என்பதால் அவர் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக சூர்யா தரப்பினருக்கும் குணசேகரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் இரு தரப்பயும் சேர்ந்த காளியப்பன்,  அப்புக்குட்டி, சேகர், செல்வம், மாதையன்,   சூர்யா, தாயம்மாள், சத்யா,  நஞ்சப்பன்,  சேட்டு, குருசாமி ஆகிய 11 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45-ம் ஆண்டு பேரவை கூட்டம் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

     பரமத்தி வேலூரில் 4 ரோடுக்கு அருகில் வெற்றிலை ஏல மார்க்கெட் உள்ளது. அதில் வெற்றிலை விவசாயிகளுடைய வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. மேலும் வியாபாரிகள் மிக அதிகமாக கமிஷன் எடுத்து கொள்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பரமத்திவேலூரில் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.

     இச்சங்கம் 1977 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது பொத்தனூரில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது . பின்னர் அது சிறுமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது .அதன் பின்னர் கோவை வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.அதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனுமில்லை. 

    முந்தைய அரசு இருக்கூர் கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அதனை செயல்படுத்தாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு அரசு வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை விவசாயிகள் .அவர்களுக்கு உகந்த வகையில் பயிர் கடன் கிடைக்க வழிவகை செய்யுமாறு மாநில அரசை இப்பேரவை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் 50 பேர் கொண்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்களும், அதில் 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    ×