என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94677"

    • ஆஸ்பத்திரிக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது.
    • போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப், யாசின் ஆகியோருடன் சேத்துப்பட்டுக்கு காரில் புறப்பட்டார். யாசினின் காரில் 3 பேரும் வந்தனர். காரில் சதீசின் பணம் ரூ. 13 லட்சம் இருந்தது.

    சேத்துப்பட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காகவே 3 பேரும் ஒன்றாக காரில் வந்தனர்.

    இந்த நிலையில் தனது பணத்தை நாளை வாங்கி கொள்கிறேன் என கூறி விட்டு சதீஷ் வளசரவாக்கத்தில் இறங்கி விட்டார்.

    இதைத் தொடர்ந்து மற்ற இருவரும் சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று காரை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது. அதனை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி சேத்துப்பட்டு போலீசில் புகாார் அளிக்கபட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும். இது அம்மாவின் கட்டளை.
    • ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

    தேனி:

    சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த கோஷம் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    தலைமை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும். இது அம்மாவின் கட்டளை, கட்சியை வழிநடத்த தகுதியான தலைமை என்ற பல்வேறு வாசகங்களுடன் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் அ.ம.மு.க.வை சேர்ந்த ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
    • மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே பேசி வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடக்க இருக்கிறது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும், என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாக நேற்று அ.தி.மு.க. தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற விவாதம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எழும்பியதுமே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது இல்லங்களில் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் , நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வேளச்சேரி அசோக் மற்றும் 2 மாவட்ட செயலாளர்கள் என அவரது ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு கருத்துக்களும் வலியுறுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஒற்றை தலைமையுடனேயே செயல்படுகின்றன. அ.தி.மு.க.வில் மட்டுமே இரட்டை தலைமை உள்ளது.

    இரட்டை தலைமையால் முடிவுகளை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கட்சிகளின் நலன் சார்ந்த விஷயங்களிலும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் முடிவுகள் எடுப்பதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.

    மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே பேசி வருகிறார்கள்.

    ஆனால் அதே நேரத்துல ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதய குமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறி ஆலோசனை செய்தனர்.

    இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒற்றை தலைமை கோஷம் மூலம் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபடும் அபாயமும் உருவாகி உள்ளது.

    • ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளது
    • அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன

    சென்னை:

    அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் கட்சியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 

    • தலைமை பதவியை பிடிக்க 2 தரப்பினரும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
    • இன்று சேலம் வரும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையில் கீழ் கொண்டு வர வேண்டும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

    இந்த விவகாரம் தற்போது கட்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வருகிற 23-ந் தேதி கூட உள்ள பொதுக்குழுவுக்கு முன்பாக பழனிசாமியை முன்னிலைபடுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த கோஷத்தை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு போட்டியாக இதுவரை விட்டு கொடுத்தது போதும் இம்முறை விட்டு கொடுக்க கூடாது என்று ஒ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதே போல ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் தலைமை பதவியை பிடிக்க 2 தரப்பினரும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதில் பழனிசாமி சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் சாதாரண அ.தி.மு.க. தொண்டனின் விருப்பம் ஒற்றை இலக்கு, தி.மு.க.வை வீழ்த்துவது, ஒற்றை தலைமை எடப்பாடி ஐயா, கழகம் வாழ்வது யாரால், கழகம் வீழ்ந்தது எவரால், தொண்டர்களே சிந்தியுங்கள் என்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது . இதனால் இந்த போஸ்டர் விவகாரம் தற்போது மேலும் சூடு பிடித்துள்ளது.

    இதற்கிடையே இன்று சேலம் வரும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    • தாய் தந்த தலைமகனே, ஒற்றை தலைமை ஏற்க வா! என்கிற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பல இடங்களில் 2 பேரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக ஒற்றை தலைமை குறித்து வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தென்காசியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், தென்காசியின் முக்கிய சிக்னல்கள், பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அவற்றில் தாய் தந்த தலைமகனே, ஒற்றை தலைமை ஏற்க வா! என்கிற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

    இதேபோல் நெல்லையில் சந்திப்பு பஸ் நிலையம், கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிகழ்கால பரதனே, ஒற்றை தலைமை ஏற்க வா என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

    • பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினால்தான் வலுவான தலைவராக முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.
    • அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் திடீரென்று உருவாகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்பயே இருக்கும். அந்த பதவிகளை வைத்து கட்சியை வழி நடத்தி செல்லலாம் என்றே நினைத்திருந்தனர்.

    ஆனால் திடீரென்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை என்ற கோஷத்தை முன் வைத்துள்ளனர். இந்த ஒற்றை தலைமை கோஷத்துக்கான பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

    ஒன்று.... அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை வகித்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எடப்பாடி பழனிசாமியும் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினால்தான் வலுவான தலைவராக முடியும் என்று நினைக்கிறார்.

    அதற்கு ஏற்ப கட்சியில் 80 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையிலான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியால்தான் கட்சியை வழி நடத்தி செல்ல முடியும் என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள்.

    இரண்டாவதாக, அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை பிடிக்க மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவேன் என்று சசிகலா கூறி வருகிறார். இந்த பொதுச்செயலாளர் பதவியால் சில சட்டரீதியான பிரச்சினைகளும் எழுகின்றன. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க பொதுச்செயலாளர் பதவி என்பதை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.

    மூன்றாவதாக, அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கள் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அசையா சொத்துக்காக உள்ளன. இந்த சொத்துக்களின் மூலம் கட்சிக்கு மாதம்தோறும் கணிசமான அளவுக்கு வருவாய் வருகிறது.

    இந்த சொத்துக்களையும் வருமானத்தையும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இந்த வருமானத்தை எடுத்து கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் சசிகலாவின் கையெழுத்து தேவைப்படுகிறது. அவர் கையெழுத்து போட்டால்தான் இந்த வருமானத்தை பயன்படுத்த முடியும் என்ற சட்ட பிரச்சினை இருக்கிறது.

    இதனை எடப்பாடி பழனிசாமி அறிந்துகொண்டு பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற நினைக்கிறார். அதன் மூலம் அ.தி.மு.க.வில் வரும் வருமானம் மூலம் கட்சி பணிகளை செய்யலாம், கட்சியை வளர்க்கலாம், கட்சி தொண்டர்களுக்கு உதவலாம், அ.தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் செலவிடலாம், புதிய திட்டங்களை செயல்படுத்தலாம் என்று எடப்பாடி பழனிசாமி கருதகிறார்.

    இதை செயல்படுத்த வேண்டுமென்றால் பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே முடியும். எனவேதான் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற தனது ஆதரவாளர்களுடன் பேசி ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். இதனால் தான் அ.தி.மு.க.வில் சர்ச்சை எழுந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த ரகசிய திட்டத்தை அறிந்த சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று அவர் சிறுதாவூரில் உள்ள பங்களாவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் சில திட்டங்களை சசிகலா சொல்லி கொடுத்துள்ளார். அதன்படி செயல்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் முயற்சிகளை முறியடிக்கலாம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

    வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் உள்ளே அனுப்பி பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தார்.

    அதற்கான கதவை எடப்பாடி பழனிசாமி அடைத்து விட்டார். அதோடு தனக்கு அதிகாரம் தரும் பொதுச்செயலாளர் பதவியை நோக்கியும் அவர் நகர்ந்து செல்கிறார். இதை தடுத்து நிறுத்துவதற்காகவே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை தூண்டி விடுகிறார்.

    எனவே அ.தி.மு.க.வில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற பரபரப்பு நாளுக்கு நாள் உருவாகி வருகிறது.

    • அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்ததாக ஓபிஎஸ் பேட்டி
    • ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பது விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர்.  ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

    டிடிவி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம்.

    தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதற்காகவே நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம். எனக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அது அதிகாரமற்ற பதவி. இருந்தபோதும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.

    இப்போது ஒற்றைத் தலைமை பேச்சு ஏன் எழுந்தது என்று எனக்கே தெரியவில்லை. 6 ஆண்டு காலம் நன்றாக கட்சியை வழிநடத்திச் சென்ற நேரத்தில் இந்த பிரச்சனை எழுந்தது சரியல்ல. எதிர்க்கட்சியாக நாம் இருக்கும் இந்த நேரத்தில் இந்த பிரச்சனை தேவையில்லை. நானோ, எடப்பாடி பழனிசாமியோ இதுபற்றி பேசியது இல்லை.

    ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு செய்திருந்தோம். பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவுக்கு கொடுத்த பதவியில் யாரும் வரக்கூடாது. மீண்டும் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
    • ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது.

    சென்னை:

    அதிமுகவின் ஒற்றைத் தலைமை கோஷம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

    பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி உடன்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்.

    ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. என்னை தொண்டர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை. தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இந்த விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள் என்றார்.

    • தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும்.
    • பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள்.

    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை.

    ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். அ.தி.மு.க. உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாஸ்கரன், முருகேசன், ஸ்ரீராம் ரங்கராஜன், வேல்முருகன், ஒத்தக்கடை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை.
    • நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

    ஆலந்தூர்:

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று வள்ளுவர்கோட்டம் அருகே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் இதற்கு அனுமதி அளிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை பி டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

    நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.
    • போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

    போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கபட்டனர்.

    இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அமைதி வழியில் போராட்டம் நடத்த முனைந்த கழகத்தினர் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் சென்னை முதல் குமரி வரை அனைத்து தொண்டர்களின் ஒற்றுமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுதி! உழைப்பு!! உயர்வு!!! என்பதை தாரக மந்திரமாக கொண்டு, மக்களின் துணையோடு இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற விரைவில் அம்மாவின் நல்லரசை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

    ×