search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி"

    • வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள்.
    • சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள். மேலும் பலர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனியார் விடுதிகளிலும் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக கோவை போலீசார் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போதைப் பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒரு கும்பல் மாணவர்கள் மத்தியில் சப்ளை செய்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரெயிலில் கோவைக்கு கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன், மாணவர்கள் அல்லாத சிலரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 450 தனிப்படை போலீசார் செட்டிபாளையம், மதுக்கரை, கே.கே. சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அறைகளில் கஞ்சா, போதை மாத்திரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் தானா? அவர்களது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்கள் வைத்துள்ள வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், பைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் போதைப்பொருள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

    இதில் மாணவர்கள் சிலர் நேரடியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இவ்வாறு போதைப்பொருள்கள் விற்பனை செய்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இவர்களின் பெற்றோர் சமூகத்தில் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து, போதைப்பொருளும் விற்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த மாணவர்களை கண்டுபிடித்து இந்த நெட்வொர்க்கை உடைக்கவும் அவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    கல்லூரி பஸ்சில் சிக்கி மாணவர் பலி: கைதான டிரைவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் அப்துல்கலாம் (வயது 20), இவர்  சேலம் சின்ன திருப்பதியில் உள்ள  ஜெயராம்  கல்லூரியில்  பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம்  கல்லூரி முடிந்து  வீட்டிற்கு செல்ல கல்லூரி  பஸ்சில் ஏறினார். 

    அப்போது கல்லூரியை  விட்டு சற்று தூரத்தில் வந்ததும் வளைவில் சென்ற போது பஸ்சில் இருந்து அப்துல்கலாம் நிலை தடுமாறி கீேழ விழுந்தார்.  இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து   டிரைவர் மணியை கைது செய்தனர்.

    இந்தநிலையில்   கல்லூரி  மாணவர்கள்  அந்த  கல்லூரிக்கு உள்ளே பஸ்சை  விடாமல்   பஸ்சை சிறைபிடித்து    நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  கல்லூரி  நிர்வாகத்தினர்   மற்றும்போலீசார்  சமாதானப்படுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டிரைவர் மணியை  நேற்று   கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார்     அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 
    ×