என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Team India"

    • இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
    • முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

    • வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

    இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

    மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

    வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக கோப்பை தொடர்களுக்காக, இந்திய அணியை இப்போதே தயார்படுத்த வேண்டும்.
    • டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டயாவை நியமிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும். இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும். அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன்.

    1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் களமிறங்குகிறார்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில், டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    போட்டி ஒரு சில நிமிடங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. லேசான மழை என்பதால் விரைவில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

    • அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
    • இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து மணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர் பின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மென் 12 ரன்களில் வெளியறினார். அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பிலிப்ஸ் 54 ரன்களிலும், கான்வே 59 ரன்களிலும் அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களில் சுருண்டது.

    இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது.
    • இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 160 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. 9 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்தது. மழை விட்டதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணிக்கு தேவையான ரன்கள் இருந்ததால், போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, 3 போட்டி கொண்ட டி2௦ தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

    • குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர்.
    • ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.

    • மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிர்பூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

    இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒருவரே நிலைத்து நின்று ஆடினார். அதுவும் கடைசிகட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    இதேபோல பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இது அணியின் வெற்றியை பாதித்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு நம்பிக் கையை அதிகரித்துள்ளது.

    கேப்டன் லிட்டன் தாஸ், சகீப்-அல்-ஹசன், முஸ்பிகுர் ரகீம், ஹசன் மிராஸ், எபொதத் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    • வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
    • விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 271 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இப்போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பேட்டிங்கின்போது 9வது வீரராக களமிறங்கினார்.

    இந்தியா 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 46வது ஓவரில் தீபக் சாஹரின் விக்கெட்டை இந்தியா இழந்ததும், ரோகித் பேட்டிங் செய்ய வந்தார். விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் நிச்சயம் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்து வரை சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

    இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும், காயத்தின் வலியையும் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா ஆடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

    'தலை வணங்குகிறேன் ரோஹித் சர்மா. கட்டைவிரல் காயத்துடன் பேட்டிங் செய்வதற்கு துணிச்சலான முடிவை எடுத்தார். அத்துடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதும், அவர் தனது சக்தி முழுவதையும் கொடுத்து வெற்றியை நெருங்கினார். காயம்பட்ட கட்டைவிரலுடன் என்ன ஒரு அதிரடி..!' என ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி உள்ளனர்.

    • இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
    • காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. கேப்டனாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • வங்காளதேச வீரர்கள் ஜாகிர் ஹசன் 51 ரன்கள், லித்தன் தாஸ் 73 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
    • 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இந்தியா 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    மிர்பூர்:

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. இது வங்காளதேசம் ஸ்கோரை விட 87 ரன் கூடுதலாகும். இந்திய அணி ஒரு கட்டத்தில் 94 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான ரிஷப் பண்ட்-ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    ரிஷப் பண்ட் 93 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சகீப்-அல்-ஹசன், தஜி ஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே அஸ்வின் வங்காளதேச அணியின் தொடக்க ஜோடியை பிரித்தார். நஜிமுல் உசேன் 5 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 13 ஆக இருந்தது. 2-வது விக்கெட் டுக்கு ஜாகீர் ஹசனுடன், மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் நிலைத்து நிற்கவிடவில்லை. ஸ்கோர் 26ஆக இருந்தபோது வங்காளதேச அணியின் 2வது விக்கெட் சரிந்தது. மொமினுல்ஹக் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    3-வது விக்கெட்டுக்கு ஜாகீர்ஹசனுடன் சகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 23.1-வது ஓவரில் 50-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜெயதேவ் உனட்கட் பிரித்தார். சகீப்-அல்-ஹசன் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த முஷ்பிகுர் ரகீம் 9 ரன்னில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். வங்காளதேசம் 70 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது.

    நிதானமாக ஆடிய ஜாகிர் ஹசன் 51 ரன்களும், லித்தன் தாஸ் 73 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். நூருல் ஹசன், தஸ்கின் அகமது தலா 31 ரன்கள் சேர்க்க, வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது சிராஜ், அஷ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன், ஷூப்மான் கில் 7 ரன், புஜாரா 6 ரன், விராட் கோலி ஒரு ரன், என முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு  45 ரன்கள் எடுத்திருந்தது. அக்சர் பட்டேல் 26 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 

    • ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
    • வங்காளதேச பந்துவீச்சாளர் மெகிடி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 227 ரன்களும், இந்தியா 314 ரன்களும் சேர்த்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் (2), ஷூப்மான் கில் (7), புஜாரா (6), விராட் கோலி (1), என முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். வங்காளதேசம் தரப்பில் மெகிடி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட் எடுத்தார்.

    நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்திருப்பதால் நாளைய ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பவுண்டரியுடன் இன்றைய ஆட்டத்தை முடித்து வைத்த அக்சர் பட்டேல், நாளை தனது இன்னிங்ஸை மீண்டும் உத்வேகத்துடன் தொடங்குவார். அவரது ஆட்டம்தான் இன்று இந்தியாவை சற்று முன்னிலையில் வைத்துள்ளது. எனவே, நாளை அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், அஷ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து களமிறங்க உள்ளனர். வங்காளதேச அணி இந்த இன்னிங்சில் சரியான பதிலடி கொடுத்திருப்பதால், நாளை அதே வேகத்தில் கடும் நெருக்கடி கொடுக்கும். எனவே, ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×