search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirunelveli district"

    • நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.

    விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
    • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    நெல்லை மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித் தீவுகளாகின. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்தனர். ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    தற்போது மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். எனினும் சில இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை அகற்றும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு அதிகாரிகள் கூறியதாவது:-

    கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து கடந்த 18,19-ந் தேதிகளில் தாமிரபரணியில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தின் கடைசி அணைக்கட்டிற்கு 1.65 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

    மழை வெள்ளத்தால் 7,417 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதே போல் 2,785 மாடுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 7 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதே போல் 2 லட்சத்து 34 ஆயிரத்து 602 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 20 நிவாரண மையங்களில் 6,500 பேர் தற்போதும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில கிராமங்களில் ரூ.1,000-மும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
    • பொதுமக்கள் ஏராளமானோர் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகாவில் சில பகுதிகளில் மட்டும் அதிகம் பாதிக்கப்பட்டதாக அறிவித்து ரூ.6 ஆயிரமும், சில கிராமங்களில் ரூ.1,000-மும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமொத்தான்மொழி பஞ்சாயத்து மக்கள் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு தங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இதேபோல் தாலுகாவுக்கு உட்பட்ட சுவிஷேசபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனைக்குடியில் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திசையன்விளை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் சில கிராமங்களில் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தலா ரூ.1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கயத்தாறு தாலுகா ஆத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திகுளம் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் உடமைகளும் சேதம் அடைந்துள்ளது. எனவே அதிகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதியாக அறிவித்து எங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறினர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தாலுகா அலுவலகத்தில் முறையாக மனு வழங்கும் படியும் பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
    • டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது.

    இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி, நிவாரண பணிகள் நடைபெற்றது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள சேதங்கள் ஏற்பட்ட நெல்லை, தூத்துக்குடியை கடந்த 21-ந் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையை அறிவித்தார்.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதி மக்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் அறிவித்தார். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரண தொகையாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக அளவு வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.


    அந்த டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பை ஆகிய தாலுகா பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.

    ராதாபுரம் தாலுகாவில் லெவிஞ்சிபுரம், செட்டி குளம், கூடன்குளம், விஜயாபதி மற்றும் திருவம்பலாபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்கள், திசையன்விளை தாலுகாவில் திசையன்விளை, அப்பு விளை, உருமன்குளம், கரைசுத்து, புதூர், உவரி, குட்டம் ஆகிய 6 வருவாய் கிராமங்களை சேர்ந்த 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்கள் முழுவதும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 ரேஷன்கார்டு தாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இதற்காக ரூ.398 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் மாநில பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்து உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி தாலுகாக்கள் முழுவதும், ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் பெரும் 6 வருவாய் கிராமங்களை தவிர மற்ற பகுதிகள் என 1 லட்சத்து 63 ஆயிரத்து 705 ரேஷன் அட்டை தாரர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு என 5 தாலுகாக்கள் முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 717 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, திருவேங்கடம், வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் முழுவதும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 939 ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    இன்று நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கியதை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன்கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் நிவாரண தொகையை பெற திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண தொகையை பெற்று சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகையை வழங்கும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பகுதியில் வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ஸ்மார்ட் கார்டு, டோக்கன், ஆகியவற்றுடன் ரேஷன் அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் கைரேகையை வைத்து தங்களுக்கான நிவாரண தொகையை பெற்று சென்றனர்.

    வெள்ள நிவாரண தொகையை மேற்கொள்ளும் பணிகளுக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து ரேஷன்கடைகளும் வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)செயல்படும் எனவும், 1-ந் தேதி ( திங்கட்கிழமை) விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

    • குளத்தில் தண்ணீர் அதிகரித்து சாலையை மூழ்கடித்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
    • போக்கு வரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சிகளின் நீர் ஆதார குளமாக புத்தன்தருவை குளம் விளங்கி வருகிறது.

    சுமார் 900 ஏக்கர் பரபரப்பளவில் உள்ள புத்தன்தருவை குளம் பெரிய நீர்பிடிப்பு குளமாக உள்ளது. இந்த குளம் மற்றும் அருகில் உள்ள வைரவம் தருவை, கொம்மடிக் கோட்டை தருவை, படுக்கப் பத்து தருவை நிரம்பினாலே இப்பகுதியின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் உள்ளது.

    இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்த மழை இல்லாததால் இக்குளம் நிரம்பவில்லை. கடந்த மாதம் வரை இப்பகுதியில் மழை இல்லாததால் சடையனேரி கால்வாய் மூலம் வரும் தண்ணீர் புத்தன்தருவை குளத்திற்கு விட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழைக்கு சாத்தான் குளம் பகுதியிலும் அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளன.

    இதில் முதலூர் ஊரணி, வைரவம் தருவை நிரம்பி புத்தன்தருவைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இக்குளம் நிரம்பி உள்ளன.

    இதற்கிடையே புத்தன் தருவை குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தையடுத்து தட்டார்மடத்தில் இருந்து போலீஸ் நிலையம் வழியாக புத்தன்தருவை செல்லும் சாலையில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இப்பகுதியில் இருந்து புத்தன்தருவை, குட்டம், உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    புத்தன்தருவை குளத்துக் கிடையே இந்த சாலை செல்வதால் இந்த குளத்தில் நீர் வரத்து அதிகரிக்கும் போதெல்லாம் போக்கு வரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள கிராம மக்கள் சாத்தான்குளம், தட்டார்மடம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தட்டார்மடம்-புத்தன்தருவை இடையே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது இக்கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை உள்ளது.

    இதுகுறித்து சாத்தான்குளம் ஒன்றியக்குழு துணை தலைவர் அப்பாத்துரை கூறுகையில், புத்தன்தருவை குளத்தில் தண்ணீர் அதிகரித்து சாலையை மூழ்கடித்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து ஆண்டு தோறும் விவசாயிகள் எதிர்பார்த்த மழை பெய்தால் இந்த குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து இந்த சாலை நிரந்தரமாக துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். அதற்கு அதிகாரிகள் இதனை ஆய்வு மேற் கொண்டு நிரந்தரமாக தடுக்கும் வகையில் உயர் மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் மேலும் துயரத்திற்கு உள்ளாகினர்.
    • ஆயில் மற்றும் ஸ்பார்க் பிளாக் மாற்றுதல் போன்ற வகை செலவுகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெருமழை பெய்தது.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பாதிப்புகள் இருந்தாலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டது.

    குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் மக்களின் உடைமைகளை அடித்துச்சென்றது. இந்த வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. தொடர் மழையால் வீடுகள் சேதமடைந்தது மட்டு மல்லாமல் மக்கள் தங்களது வீடுகளில் நிறுத்தியிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்டவைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்கனவே மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்து உயிரை காப்பாற்றிக் கொள்ளவே மக்கள் போராடிய நிலையில், அவர்களது ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் மேலும் துயரத்திற்கு உள்ளாகினர்.

    உயிரை காப்பாற்றிக் கொள்ள அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் சார்பிலும் உணவு, அரிசி, போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்ட நிலையில் உடைமைகளை மீண்டும் வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

    அவர்கள் தங்களது வாகனங்களுக்கு காப்பீடு செய்திருப்பார்கள் என்பதால் அதன் மூலமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பழுது பார்க்க அரசு சார்பில் வழிவகை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இந்த சூழ்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சிறப்பு முகாம்கள் நடத்தவும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தொகை வழங்க நடைமுறைகள் எளிதாக்கப்படும் எனவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் இன்று முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள், வீடுகளுக்கு காப்பீடு செய்திருந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் வெள்ள சேதார இழப்பீடு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதேபோல் பாளை போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் சார்பிலும், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் பாளை சித்த மருத்துவ கல்லூரி எதிரே அமைந்துள்ள தனியார் ஹாலிலும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் வீடு உள்ளிட்டவைகளுக்கான வெள்ள சேதார இழப்பீடு வழங்க முகாம்கள் நடைபெற்றது.

    குறைந்த காலத்தில் காப்பீட்டுத்தொகையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஏற்கனவே வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற்ற முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். அங்கு இருந்த சர்வேயர்கள் வாகனங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஆயிலின் தன்மை உள்ளிட்டவற்றை சர்வே செய்து காப்பீட்டு நிறுவனத்தாரிடம் கணக்கீட்டு தொகை விபரத்தை வழங்கினார்.

    அந்த தொகையை உடனடியாக காப்பீடு நிறுவனத்தினர் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கினர். முதல்கட்டமாக பழுது பார்க்க மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும், கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வணிக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. அவைகளுக்கு பேட்டரி மாற்றுதல், ஆயில் மற்றும் ஸ்பார்க் பிளாக் மாற்றுதல் போன்ற வகை செலவுகளுக்கு உடனடியாக தொகை வழங்கப்பட்டது.

    முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமாகிய வாகனங்கள் முழுவதுமாக சர்வே செய்யப்பட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்று புதிய வாகனங்கள் பெற வழிவகை செய்தல், அல்லது அதற்கான தொகையை வழங்குதல் குறித்து பரிசீலனை செய்யப்படும் என காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று முகாம்கள் நடந்த நிலையில், நாளை தூத்துக்குடியில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள அண்ணா நகர் மெயின்ரோட்டில் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ் செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. நிறுவனங்களின் உள்ளூர் அலுவலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 2 மாவட்டங்களிலும் அனைத்து அலுவலக விடுமுறை நாட்களிலும் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படும் எனவும், அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின்சாரம் வெளியில் கொண்டு செல்வதற்கு உயர்மட்ட மின்சாரகோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது.
    • 80 சதவீத பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு இதை திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடந்து வந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிமிக மிக வேகமாக நடந்து வந்தது

    உடன்குடியில் ரூ.9,250 கோடி மதிப்பீட்டில் 1,301 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்காக கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து முடிவடை யும் நிலையில் இருந்தது.

    கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடந்தன. கப்பலில் வரும் நிலக்கரியை அப்படியே எதிர்புறம் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நேரடியாக கொண்டு வருவதற்கு உயர்ந்த பாலம் ரோட்டில் குறுக்கே சுமார் 60 அடி உயரத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.

    மேலும் இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் வெளியில் கொண்டு செல்வதற்கு உயர்மட்ட மின்சாரகோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது.

    80 சதவீத பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு இதை திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடந்து வந்தது.


    இதை போல குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதல் கட்டமாக 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக ரூ.6 கோடியே 24 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு ஆரம்பகட்ட பணியும் தொடங்கியது.

    உடன்குடி அருகில் உள்ள கூடல்நகர் கிராமத்தில் 40 குடும்பங்களை இடம் மாற்றம் செய்ய உடன்குடி அய்யா நகரில் ரூ.4.5 கோடியில் வீடு கட்டும் பணியும் தொடங்கியது. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனல் மின் நிலையத்தை தொடங்கி வைப்பதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக அணுமின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளத்திற்கு வர வேண்டிய முக்கியமான மூலப்பொருட்கள் வெளியில் இருந்து கொண்டு வர முடியவில்லை என்பதால் பணிகள் தாமதம் ஆவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும் போது, பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கும் முன் இந்த இரு திட்ட விழாக்களும் நடைபெறும் என்றனர்.

    • சில இடங்களில் 2 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் உள்ளது.
    • ஷாலோம் நகரில் 5 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மெஞ்ஞானபுரம் பகுதியில் கனமழையால் மெஞ்ஞானபுரம் ஷாலோம் நகர், விஜி குமரன் நகர், கல்விளை, திருப்பணி ஆகிய பகுதிகளில் சடையநேரி குளம் உடைந்ததால் வெள்ளம் புகுந்தது.

    சுமார் 5 அடியில் இருந்து 10 அடி வரை தண்ணீர் சூழ்ந்திருந்தது. தற்போது தண்ணீர் வடிய தொடங்கி உள்ளது. சில இடங்களில் 2 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் உள்ளது.

    தற்போது ஷாலோம் நகரில் 5 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. தற்போது இந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் குடியிருக்க முடியாமல் உயரமான பகுதியில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

    சிலர் பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். சிலர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம் தண்ணீரில் மூழ்கி அனைத்து ஆவணங்களும் சேதமானது. இன்று வரை போலீஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

    • நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த அதி கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் பொருட்களை நிவாரணமாக வழங்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் துறை மூலமாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார், நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களாக நெல்லை, பாளை, சேரன்மகாதேவி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, மானூர் உள்ளிட்ட வட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 16 கிராமங்களும், நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் மாவட்டம் முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், அதன் அடிப்படையில் அரசு அறிவித்த நிவாரண தொகை எந்தெந்த கிராமங்களுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை.
    • சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சடையனேரிகுளம் கனமழையால் உடைந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டது.

    குளம் உடைப்பால் பாதிக்கப்பட்ட பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், வட்டன் விளை, மருதூர்கரை ஆகிய கிராமங்களில் இன்றும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை. தொடர் விடுமுறைக்கு பின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று திறந்து செயல்படுவதால், நேரடி போக்குவரத்து வசதி இல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    • ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து முகாம்களுக்கு சென்றனர்.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள், 1000 அடுப்புகளை தயாரித்து வைத்திருத்தோம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பெருமழை பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் குளங்கள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தென்திருப்பேரை, ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து முகாம்களுக்கு சென்றனர்.

    இந்நிலையில், வெள்ளம் வடிந்தாலும் தங்கள் வாழ்வாரத்தை பெருமழை அழித்து சென்று விட்டதால், பாதிப்பில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.

    ஆழ்வார்திருநகரி கண்டி குளம் பகுதியில் 40 குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 5 தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள்.

    நவதிருப்பதி கோவில்களுக்கு கலயம், கும்பகலசம் செய்வது உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் செய்து கொடுத்து வரும் இவர்கள் தயாரிக்கும் மண்பானைகள், மண்அடுப்புகள் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.


    தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே ஆயிரக்கணக்கான மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் தான் எதிர் பாராதவகையில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பேய்மழை இவர்களின் வீடுகளை மூழ்கடித்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக தயார் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மண்பானை, அடுப்புகள் என அனைத்தையும் சேதப்படுத்தி விட்டன.

    உயிர் பிழைத்தால் போதும் என கருதி குழந்தைகளுடன் நிவாரண முகாம்களுக்கு சென்ற இவர்கள் தற்போது வெள்ளம் வடிந்தாலும் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து தொழிலாளி மாயாண்டி கூறியதாவது:-

    நாங்கள் 5 தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். ஆழ்வார்திரு நகரியில் 40 குடும்பங்கள், தென்திருப்பேரையில் 25 குடும்பங்கள், ஸ்ரீவைகுண்டத்தில் 10 குடும்பங்கள் நாங்கள் அனைவருமே மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அணுமதி பெற்று குளங்களில் இருந்து மண் எடுத்து மண்பானை, மண் அடுப்பு செய்து வருகிறோம்.

    நவதிருப்பதி கோவில்களுக்கு கலயம், கும்பகலசம் செய்து கொடுக்கிறோம். மேலும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழாவுக்கான பானைகள் செய்து கொடுப்போம்.

    ஆனாலும் பொங்கல் பண்டிகை காலம் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும் காலம். பொது மக்கள் மண்அடுப்புகளை வைத்து, பானைகளில் பொங்கலிடுவார்கள் என்பதால் அதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள், 1000 அடுப்புகளை தயாரித்து வைத்திருத்தோம்.

    மேலும் வழக்கமான மீன் சட்டிகளும் செய்து வைத்திருந்தோம். ஆனால் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் ஆறு மட்டுமின்றி குளத்திலும் உடைப்பு ஏற்பட்டு, திடீரென நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடினோம்.

    சில மணி நேரத்திற்குள் வீடுகளை மூழ்கடித்த வெள்ளத்தில் நாங்கள் செய்து வைத்திருந்த அனைத்து பானைகள், அடுப்புகள் உடைந்து சேதம் ஆனது. மேலும் நவநாகரீக காலத்திற்கு ஏற்ப மண்பானைகள் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த 6 எந்திரங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி விட்டது.

    இதேபோல பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொங்காலை திருவிழாவுக்கு பானைகள் செய்வதற்காக மண்லோடு அடித்து வைத்திருந்தோம். 5 டன் விறகு வாங்கி வைத்திருந்தோம். அனைத்தும் நாசமாகி விட்டது. ஒரேநாளில் ரூ.8 லட்சத்திற்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளதால் இதில் இருந்து எப்படி மீளப் போகிறோம் என்றே தெரியவில்லை.

    பொங்கல் காலத்தில் கிடைக்கும் வருமானம் தான் எங்கள் குடும்பங்களுக்கு 6 மாத செலவுக்கு வசதியாக இருக்கும். தற்போது அது கிடைக்காமல் போனதோடு, அடுத்த 3 மாதத்திற்கு தொழில் செய்ய முடியாத அளவுக்கு அனைத்து மூலப் பொருட்களையும் இழந்து விட்டோம். அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் அய்யப்பன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அருகன்குளம், மேலப்பாளையம் குறிச்சி, வண்ணார்பேட்டை, வீரவநல்லூர், கொழுமடை, களக்காடு, ராதாபுரம் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர கூனியூர் காருக்குறிச்சி பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக அதிக அளவு மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்திருநகரி, செய்துங்கநல்லூர், ஏரல், வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், அதற்காக மண்பாண்டங்கள் உற்பத்தி பணியில் தொழிலாளர்களாகிய நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்வோம்.

    இந்த ஆண்டு பொங்கலுக்காக பானைகள் தயாரிக்க தேவையான மண், விறகு, அடுப்பு, எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால் கூனியூரில் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. மேலப்பாளையம் குறிச்சியில் மண்பாண்டங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதுதவிர மண், விறகு உள்ளிட்டவையும் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீளா துயரில் நாங்கள் கண்ணீர் வடித்து வருகிறோம்.

    நெல்லை மாவட்டத்தில் ரூ.70 முதல் ரூ.80 லட்சம் வரை வெள்ளத்தால் எங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களால் இந்த மழையால் ஏற்பட்ட நிவாரணத்தை கூட சரிசெய்ய முடியவில்லை. இந்த மழை வெள்ளத்தால் நெல்லையில் 6 ஆயிரம் தொழிலாளர்களும், தென்காசியில் 4 ஆயிரம் மற்றும் தூத்துக்குடியில் 7 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது.

    எனவே எங்களுக்கு பொங்கல் நிவாரணமாக அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க வேண்டும். வெள்ளத்தால் நாங்கள் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் எந்திரங்களை இழந்துவிட்டோம். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் மண்பாண்ட சக்கரம் உள்ளிட்ட எந்திரங்களை இலவசமாக வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான மழை கால நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. எனவே உடனடியாக ரூ.5 ஆயிரம் மழை கால நிவாரணத்தை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
    • வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்கரலிங்க புரம். இங்குள்ள 2-வது தெருவில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரும் கண்பார்வை இழந்தவர்கள்.

    ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்வினை அடியோடு புரட்டி போட்டு உள்ளது.

    இவர்கள் வாழ்ந்த ஓட்டு வீடு ஏற்கனவே லேசாக சேதம் அடைந்து காணப்பட்ட நிலையில் தொடர் மழைக்கு முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. தொடர் மழையின் போது வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தது தெரியாமலும், மழைநீர் உள்ளே வருவது தெரியாமலும் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளனர்.

    தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விழக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்போது அந்த வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    தொடர்மழை காரணமாக ஏற்கனவே தங்களுடைய ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி விற்பனை செய்ய முடியாத நிலை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய வீடு என தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர்.

    தொடர் மழையின் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து, வீட்டையும் இழந்து பரிதவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மாற்றுத்திறனாளி தம்பதியினர்.

    ×