என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Today TamilNadu News"
- குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.
- அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை.
கோவை:
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஐரோப்பியாவில் கண்டறியப்பட்ட குரங்கம்மையானது தற்போது உலகம் முழுவதும் 121 நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து உலகில் குரங்கம்மை என்ற நோய் பரவி வருவதால் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார இயக்குனர் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கம்மை தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் தனி வார்டும் தொடங்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை பாதிப்பு யாருக்காவது கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காய்ச்சல் பரிசோதனையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக காய்ச்சல் கண்டறியும் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலா 10 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக வார்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் முதல்வன் மருந்தகம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி வருகிற பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் 1000 முதல்வன் மருந்தகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயன் அடைவார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
- மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக கெங்கவல்லி, தம்மம்பட்டி, டேனீ ஸ்பேட்டை, எடப்பாடி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது. இதனால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
ஏற்காட்டில் நேற்று மதியம் மற்றும் மாலையிலும் மழை பெய்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு செல்லும் சுற்றலா பயணிகள் இயற்கையின் அழகு மற்றும் குளிர்ச்சியான சீதோ ஷ்ணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்கள்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர்-8.2, ஏற்காடு 12, வாழப்பாடி 2, ஆனைமடுவு 20, ஆத்தூர் 7.2, கெங்கவல்லி 41, தம்மம்பட்டி 36, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 8, வீரகனூர் 4, சங்ககிரி 15.4, எடப்பாடி 23, மேட்டூர் 10.2, ஓமலூர் 8, டேனீஸ்பேட்டை 24 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 229 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
- நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.
மதுரை:
மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், தற்போது பெண்கள் அதிக அளவில் படித்து முன்னேறுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களாக பெண்களே இருப்பார்கள்.
அந்த அளவுக்கு பெண்கள், மாணவிகள் அதிகமாக படிப்பின் மீது கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களை எடுக்கிறார்கள் என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வணிகவரித்துறையில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண்ணை ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யாரெல்லாம் தொழிலை செய்யாமல் ஜி.எஸ்.டி. நம்பர் வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 4,000 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. வணிக வரித்துறையில் இந்த ஆண்டு இலக்காக ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடி பதிவுத்துறைக்கு 23 ஆயிரம் கோடி என்று வைத்திருக்கிறோம். எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். மேலும் கல்விக்கடனை வங்கிகள் அதிகமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். வெகு விரைவில் எதிர்பாருங்கள் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆவார். வருகின்ற செப்டம்பர் 9-ந்தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது.
- கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ரூ.17 ஆயிரத்து 616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
மருத்துவக்கல்லூரிகள் 13-ல் முதல்வர்கள் பணி காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது. உடனே நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ந்தேதியே பா.ம.க வலியுறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக்கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இனியும் தாமதிக்காமல் முதல்வர் நியமிக்கவேண்டும்.
தமிழகத்தில் சன்ன அரிசி ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் தேவையாக உள்ளது. ஆனால் 72 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.
ரூ. 2 லட்சத்துக்கு 2 1/2 ஆண்டுகளில் ரூ.2.26 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மாதத்திற்கு 300 சதவீதமாகும். கந்துவட்டி திமிங்கலத்துடன் காவல்துறை இணைந்து செயல்படுவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடுமையான கந்துவட்டி சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும்.
தமிழகத்தில் மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்துகிறார்கள். 10 பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுகொள் என்று அரசு சொல்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கட்சியின் புதிய கொடியை கடந்த 22-ந்தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடி பற்றிய விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.
எனவே சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கட்சி சின்னத்தை தான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம்" என்றார்.
- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
- விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.
விழுப்புரம்:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.
முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.
அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.
சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.
தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.
- நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
- தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியிலும், கர்நாடகத்தின் கோலார் பகுதியிலும் செயல்பட்டு வரும் டாட்டா மின்னணு நிறுவனத்தின் ஆலைகளில் பணியாற்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 4000 பெண்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் வேலை கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து ஊழியர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது.
தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாட்டா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை.
இந்த நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக, டாட்டா மின்னணு நிறுவனம் தமிழ்நாட்டில் ஆலை அமைத்தால், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்பதால் தான்.
ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
- தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தி.மு.க. தற்போதும் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் தி.மு.க., மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
'ஒரே வார்த்தையில் அழைத்தோம் மத்திய ராணுவ மந்திரி நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய மந்திரிகளை வருந்தி அழைத்து, பா.ஜ.க.வுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (ஆர்.இ.டி.) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக் கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோல் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள்.
- 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2024-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார். அதில், பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்களை, வயது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்துவதை விட்டுவிட்டு, 12-19 வயது வரை ஒரே பிரிவாக அறிவித்திருப்பது, உண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு, தனது துறை குறித்த புரிதலோ, இந்த விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்ற தெளிவு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
உடனடியாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கும், பள்ளி மாணவர்கள் 12-19 வயது வரை ஒரே பிரிவு என்ற அறிவிப்பை மாற்றி, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு வகுத்திருக்கும் அடிப்படையான விதிமுறையின்படி, தமிழக முதல்-அமைச்சர் கோப்பை 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ’’கிளப்”களிலும் உறுப்பினர் அல்லாதவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு மது வழங்கப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம் செய்யும் தமிழக அரசு, நட்சத்திர விடுதிகளுக்கு குடிப்பக உரிமம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு வேகமும், ஆர்வமும் காட்டியது மர்மமாக உள்ளது.
சென்னையிலுள்ள தனியார் 5 நட்சத்திர விடுதிகளில் அமைந்துள்ள குடிப்பகங்களில், அந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சர்ச்சைக்குரிய விடுதிகளில் வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவற்றின் குடிப்பக உரிமங்கள் கடந்த சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை சரியானது தான்.
ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? குடிப்பகங்களில் எந்த விதிமீறலும் நடக்கவில்லையா? அல்லது மது வணிகம் என்பது 'தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி' என்பதால் நட்சத்திர விடுதிகளின் குடிப்பகங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும்.
ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமின்றி, சென்னையிலும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ''கிளப்"களிலும் உறுப்பினர் அல்லாதவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு மது வழங்கப்படுகிறது. இதுவும் விதிமீறல் தான். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும் கூட மது வணிகத்தில் எந்த விதிமீறலையும் அனுமதிக்கக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் மது வணிகத்தில் விதிகளை மீறும் அனைத்து கிளப்கள் மற்றும் விடுதிகளின் குடிப்பக உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் பலியானார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் 67 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கருணாபுரத்தை சேர்ந்த மோகன் (50) மட்டும் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.
கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனுவை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்ததால் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
மேயர் வேட்பாளராக போட்டியிடும் கவுன்சிலர்கள் நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மைய கூட்ட அரங்கில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் மீதான பரிசீலனை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், அதனை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மேயர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை வந்தனர்.
இன்று காலை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மாநகராட்சியில் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டியின்றி கட்சி தலைமை முடிவு செய்யும் மேயர் வேட்பாளருக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
பின்னர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அறிவித்தார். அவருக்கு கவுன்சிலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
கவுன்சிலர் கிட்டு அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். அவர் நெல்லை மாநகராட்சியில் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிட்டு, தனது வார்டு பகுதி முழுவதும் எப்போதும் சைக்கிளில் தான் பயணம் செய்யக்கூடியவர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்