search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transport workers"

    • போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
    • ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-.

    சென்னையைத் தவிா்த்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம், வாயிற் கூட்டம் நடத்தப்படும். ஜூன் 18-ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் ஊழியா்களின் முக்கிய பிரச்சனைகளை போக்குவரத்துக்கழக நிா்வாகங்களுக்கு வலியுறுத்த உள்ளோம்.

    போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுநா், நடத்துநா்களைத் தாக்குவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    காவல்துறை, ஓட்டுநா் பிரச்சனைக்கு தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்போம். இதை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன.
    • பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்த மக்கள், வேறு ஊர்திகளில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்கள். அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது.

    பழுதடைந்த பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25 சதவீத பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில பணிமனைகளில் மேலாளர்களே தங்களின் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி பழுது நீக்க வேண்டியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டு கின்றன. 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்துக் கழகங்களின் நிதிப்பற்றாக் குறையை 2022-ம் ஆண்டு முதல் ஈடுசெய்வது என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகைகள் சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகம் செலவு செய்துவிட்டது.

    இதன் காரணமாக பணி ஓய்வின் போது தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. சுமார் 18 மாதங்களாக 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் கடந்த 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு வேலை முறையாக வழங்கப்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும்.

    ஊதிய ஒப்பங்நதம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்துவிட்டது. எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.

    பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

    இவற்றை தொழிலா ளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில் ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும் ஜூன் 24-ந் தேதி காலை 10 மணி முதல் 25-ந் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் 24 மணிநேரம் உண்ணா விரதம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.

    இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்து உள்ளது.

    இந்த குழுவில் நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வருகிற 21-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கடிதம் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
    • தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என தகவல்.

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வரும் பிப்ரவரி 6ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
    • அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    சென்னை:

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.

    இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி நிபந்தனையுடன் ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


    இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து இருந்தது.

    அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.


    வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

    எனவே யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, "இது அரசின் முடிவு. கோர்ட்டு உத்தரவை மதித்து நடவடிக்கை கைவிடப்படும். தற்போது பொங்கல் பஸ்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறோம்"என்றார்.

    • நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
    • நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பொங்கல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு

    * தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக தெரியவில்லை.

    * நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.

    * நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வரும் 19-ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    * நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    • காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
    • விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.

    இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.

    அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.


    இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
    • காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    விளாத்திகுளம்:

    தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டி செல்லும் 78ஏ அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் சுப்ரமணியன் இன்று ஓட்டி சென்றார். வழக்கமாக இந்த பேரிலோன்பட்டி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்து வழக்கம்.

    அதன்படி இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் சிங்கிலிபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இறங்கி சேற்றில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் இருக்கை கம்பி மீது மோதியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர். பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    இந்த பஸ் சாலையோரத்தில் சிக்கி சேற்றில் சிக்கி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்கப்பட்டு விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் மாற்று டிரைவர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

    ×