search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U.N. resolution"

    • பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது

    உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே  வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. நேற்று [ ஜூலை 11] ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.

    கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடைபெற்ற இந்தியா- ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு ரஷியாவின் உயரிய விருதான ஆர்தர் ஆப் செயின்ட் ஆன்ரியூ தி அப்போஸ்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உக்ரைன் போருக்கு மத்தியில் மோடி ரஷிய அதிபர் புதினுடன் இணக்கம் காட்டுவது மேற்கு நாடுகளுக்கு கோபமூட்டியுள்ளது.

     

    மோடி ரஷியா சென்ற கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்தனர். கீவ் நகரில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்தியா புத்தரைத் தான் உலகத்துக்கு கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று மோடி தனது பயணத்தின்போது பேசினாலும், தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     

    முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மோடியின் ரஷியா பயணம் குறித்து விமர்சித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தற்போதைய சூழலில் எந்த போரும் தொலைவில் இல்லை. இந்தியா - அமெரிக்காவின் நட்புறவை மீண்டும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்க உறவை நினைத்து போல்  எடுத்துக்கொள்ளக்கூடாது  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீனத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் போரினால் உயிரிழந்துள்ளனர்
    • எங்கள் போர் மிக நியாயமானதுதான் என நேதன்யாகு அறிவித்துள்ளார்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீன காசா முனை பகுதி மீது இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது 60 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுவரை 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 48,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. சபையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, தனது "வீடோ" எனும் சிறப்பு அதிகாரத்தை (Veto) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

    இப்பின்னணியில் தங்களின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "அமெரிக்கா எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஹமாஸ் அமைப்பை ஒழிக்க நாங்கள் நடத்தி வரும் போர் மிக நியாயமானதுதான். அது மேலும் தொடரும்" என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் (Eli Cohen), "மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர், போர் இடைநிறுத்தம் ஏற்பட்டால் மீண்டும் காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்" என கூறினார்.

    இஸ்ரேலின் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) தங்கள் தாக்குதலில் இன்னமும் அழுத்தம் காட்டப்படும் என எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், காசாவில் 36 சதவீத வீடுகளில் உணவு பற்றாக்குறை நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் காசா முனை பகுதியில் பாதுகாப்பான இடம் என ஏதுமில்லை என்றும் காசா பகுதியின் சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன.
    • இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என்று தெரிவித்தது.

    காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.

     

    ராபர்ட் வுட்

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறும்போது, "நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்" எனத் தெரிவித்தார்.

    • காசா பகுதியில் இஸ்ரேல் குடியமர்வு நிகழ்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது
    • அமெரிக்கா, கனடா உட்பட 7 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி கூறியுள்ள இஸ்ரேல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா பகுதியில் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

    காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆக்ரமித்து குடியமர்வை செயல்படுத்த முயல்வதாக சில உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதை தொடர்ந்து ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவின் கோலன் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இந்த தீர்மானம் கண்டனம் செய்தது.

    தீர்மானத்தை ஆதரித்த 145 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

    அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா மற்றும் நவ்ரு உட்பட 7 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். 18 உறுப்பினர் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்பாக ஐ.நா. சபையில் ஜோர்டான் கொண்டு வந்திருந்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஏற்று கொள்ளாததால் கலந்து கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரவாத செயல்களை அத்தீர்மானம் கண்டிக்கவில்லை என இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    • இரு நாடுகளுக்கும் தேவைகள் உள்ளதால் பரஸ்பரம் உதவி கொள்ள முடியும்
    • ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இது எதிரானது என்கிறது தென் கொரியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

    கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவிற்கு ஆயுதங்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் வெளிப்படையான எதிர்ப்பை காட்டி வரும் வட கொரியாவிற்கு உணவு தானிய தேவையும், அந்நாட்டு ராணுவத்திற்கான அதி நவீன ஆயுதங்களுக்கான தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.

    எனவே, இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி கொள்ளும் நிலையில் உள்ளதால், ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியும். இப்பின்னணியில் சந்தித்து கொண்ட தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டின் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில், வட கொரியாவிற்கு ரஷியா வழங்கப்போகும் அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி, தென் கொரியாவில் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

    இது குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிம் சூ-சுக், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,

    "உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி விண்கலன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க முனைவது குறித்து தென் கொரியா கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை மேம்பாடு சம்பந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபடுவது ஐ.நா.சபையின் தீர்மானங்களுக்கு எதிரானது. வட கொரியாவிற்கு ராணுவ ஒத்துழைப்பு அளித்தால், தென் கொரியாவிற்கும் ரஷியாவிற்குமான உறவில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ரஷியா உணர வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×