search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar chaturthi"

    • பாபர் மசூதி- ராமர் கோவில் தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாக கூறினார்.
    • இந்த சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர்.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தனிப்பட்ட விஷயங்கள் மூலம் தான் வகிக்கும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது நீதித்துறையின் நடுநிலைமை மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக மக்கள் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    மேலும் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தான் 2018 இல் வழங்கிய தீர்ப்பு குறித்து சமீபத்தில் பேசிய அவர், அந்த தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாகவும் அதன்படி கடவுளிடம் வேண்டினால் அவர் வழிகாட்டுவார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வீட்டின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து சந்திரசூட் தற்போது பேசியுள்ளார்.

     

    டெல்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட், இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் நிகழும் சந்திப்பின்போது தொடர்புடைய வழக்குகள் மற்றும் நீதித்துறை சார்ந்த விஷயங்கள் பேசப்படாது.

    நீதித்துறை மீது அரசியல் தலைவர்கள் வைத்துள்ள மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நீதித்துறைக்கான நிதியை நீதிபதிகள் ஒதுக்குவதில்லை. அரசுகள் தான் ஓதுகின்றன. நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகளுக்கு அரசு நிதி தேவை. இதற்கு தலைமை நீதிபதிகள் மாநில முதலமைச்சர்களை சந்திக்க வேண்டி உள்ளது.

    நானும் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்துள்ளேன். அப்போது நான் முதல்வர் வீட்டுக்கு செல்வதும் முதல்வர் எனது வீட்டுக்கு வருவதும் சகஜமாக நடக்கும். இந்த சந்திப்புகளை நேரில் சந்திக்காமல் கடிதம் மூலம் நடத்த முடியாது. இந்த சந்திப்புகளின்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் எந்த கேள்வியும் கேட்கமாட்டார் எனவே நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசியுள்ளார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன.
    • லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் பரிதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    33-வது வார்டு காந்திநகர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன. இந்த லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஷேக் லத்தீப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விநாயகர் லட்டுக்களை அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    கடைசியில் 2 லட்டுகளையும் ரூ.20,016 மற்றும் 11,016-க்கு லத்தீப் குடும்பத்தினர் ஏலம் எடுத்தனர். லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

    விநாயகர் சிலை வைத்த விழா குழுவினர் லத்தீப் குடும்பத்தினரிடம் லட்டுக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த விநாயகர் லட்டு ஏலம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, திருவொற்றியூர் கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு 11, 14, (அதாவது நேற்று) மற்றும் 15-ந்தேதி (அதாவது இன்று) ஆகிய 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.

    சாலைகள், முக்கிய தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகளில் ஒரு பகுதி 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நேற்றும் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளது.

    இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்து செல்ல போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க, சிலை கரைப்பு இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெரிய சிலைகளை தூக்கி சென்று கடலில் கரைப்பதற்கு ராட்சத கிரேன்களும், படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் கரைக்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்ப்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை.

    தியாகராயநகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அடையார், கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நீலாங்கரை கடலிலும், வட சென்னை பகுதிகளான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், மாதவரம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரைக்கப்படுகிறது.

    திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, திருவொற்றியூர் கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

    * விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக திருவல்லிக்கேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும், செல்லும் வாகனங்கள், மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே.சாலை, வி.எம் தெரு இடது, லஸ் சந்திப்பு, அமிர்தஜன் சந்திப்பு, டிசெல்வா சாலை, வாரன் சாலை வலது, டாக்டர் ரங்கா சாலை, பீமனா கார்டன் சந்திப்பு இடது திருப்பம், சி.பி. ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ - ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * ஊர்வலம் ரத்னா கபே சந்திப்புக்கு அருகில் வரும்போது, ஜாம் பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * ஊர்வலம் டி.எச்.சாலைக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை, காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

    * மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு, ஆர்.கே. மடம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    * கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

    * விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    • கர்நாடகாவில் மசூதி அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
    • போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.

    இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    இந்த வன்முறை சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அரியானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    குருஷேத்ராவில் உரையாற்றிய மோடி, "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை தடுக்கிறது. இன்று இருப்பது பழைய காங்கிரஸ் கட்சி அல்ல. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் பேசுவதற்கு காங்கிரஸ் வெட்கப்படாது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் கணபதியைக் கூட சிறையில் அடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலத்தில் யாருடைய விநாயகர் சிலை முதலில் செல்ல வேண்டும் என்பது தொடர்பான தகராறு மோதலாக வெடித்துள்ளது. இந்நிலையில் மோதலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
    • தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய மந்திரி எல்.முருகன் முகாம் அலுவலகம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

    இந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

     

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கிவைத்தார். இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வீதி வீதியாக டாஸ்மாக் கடை திறந்து மக்களை தி.மு.க. அரசு மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது.

    ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று தமிழக அரசுக்கே தெரியாது. ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அரசு கைது நடவடிக்கை மேற்கொள்கிறது.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க தி.மு.க. அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஒரு ஆன்மீக பூமி அதனை தி.கவும், தி.மு.க.வும் அழிக்க நினைத்தால் அது முடியாது. இன்றைக்கு தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது.

    தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லை. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இவரும் இந்துக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

    ஒரே நாடு, ஒரே சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் அயோத்தியில் ராமர் கோவிலை பா.ஜ.க. அரசு கட்டி முடித்துள்ளது. 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம், பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என்.எஸ்.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
    • சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை யொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடந்தன. நேற்று இந்த சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.

    முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த மூக்கன் (வயது 45) என்பவர், ஒரு லட்டை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இதனால் ஆச்சரியம் அடைந்த கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

    லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம்.

    • விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது.
    • வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாகும். இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட்டில் வாழை இலையின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    அப்டா மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நெல்லை மாவட்டம் களக்காடு, ஏர்வாடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்காக வருகிறது. 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஆனால் இன்று விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனையானது. ஒரு இலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழைத்தார்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ரசகதலி வாழைக்குலை குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் அப்டா மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக வாழைக்குலைகளின் விலை உயர்ந்தே உள்ளது. தற்போது வாழைக்குலை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் வருவதால் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு வாழைத்தார் ரூ.450 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

    இதே போல் செவ்வாழை, ஏத்தன், நாட்டுப்பழம், பச்சை பழம் உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது. இதனால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு விலை உயர்ந்து காணப்படும். வாழைத்தாரை பொருத்தமட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாலைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.

    வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படாது என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். இருப்பினும் வாழைத்தார்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள் வருகிறார்கள். எனவே இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
    • அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,519 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு உள்ளன. ஆவடி கமிஷனர் அலுவலக பகுதிகளில் 683 சிலைகளும், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 600 சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் 2,800 சிலைகள் நிறுவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அனுமதியின்றி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் சிலை ஏற்பாட்டாளர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரும் ரோந்து சுற்றி கண்காணிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இன்று வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, நீலாங்கரை பல்கலைநகர் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை மாநகர பகுதியில் 16,500 போலீசார் 2 ஆயிரம் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் தாம்பரம், ஆவடி பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

    அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டும், 40 கிலோ சந்தனத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதலே புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதாமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.

    கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், உப்பிலிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதுதவிர கோவை மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பேரூர், அன்னூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் இருசக்கர ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் புறப்பட்ட சென்றனர்.

    சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது

    இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    • சிலைகள் கரைப்பு, ஊர்வலங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
    • பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடு.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், " சிலைகள் கரைப்பு, ஊர்வலங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

    பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட தமிழக காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழா சுமூகமாக நடைபெறுவதற்கு விழா ஒருங்கிணைப்பாளர்களும், பொது மக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    ×