search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water shortage"

    • குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கரம்பை, 8 நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் 8 கரம்பை பகுதி மெயின் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    இது பற்றி தகவல அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தில் அணிவகுத்து நின்றன.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


    பின்னர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது.
    • ரெயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரணமாகவும, வெயில் காரணமாகவும் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.

    இதனால் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ரெயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.

    அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரெயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் தனியார் தண்ணீர் லாரிகளும் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

    வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 75 சதவீதமும் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது வார நாட்களில் சுமார் 25 சதவீதம்தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

    இதனால் ரெயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

    குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் நாற்றம் அடிக்கிறது. இதனால் தொலைதூரம் பயணிக்கும் பயணிகள் நிம்மதியை தொலைக்கிறார்கள்.

    இந்த பிரச்சினை பற்றி ரெயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ஒரு சில நீண்ட தூர ரெயில்களுக்கு வேறு ரெயில் நிலையங்களில் நீர் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரெயில் பெட்டிகளை கழுவுதல், சுத்தப் படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

    ஒரு ரெயில் தொலை தூரத்திற்கு சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தட்டுப்பாடு காரணமாக ரெயில் பெட்டிகளின் வெளிப்புறம் கழுவுவதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை.

    சென்னை பேசின்பிரஜ், பராமரிப்பு நிலையத்தில் 45-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பராமரிக்கப்படு கிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

    சென்ட்ரலுக்கு சுமார் 10 லட்சம் லிட்டரும், எழும்பூர் ரெயில் நிலையத்தற்கு 10 லட்சம் லிட்டரும் தேவைப்படும். ஆனால் தண்ணீர் தேவையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்கள்.

    • வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகித்து வரும் நிலையில், கோடை காலத்தில் வறட்சி நிலவும் என்பதால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில், பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

    பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

    இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.

    • வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் வீடுகளில் நீர் சேமிப்பு பற்றிய 4 யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திவ்யா சர்மா என்ற அந்த மருத்துவர் பூமியில் உள்ள நீர் சேமிப்பு அணுகுமுறை எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று கூறியுள்ளார். டாக்டர் சர்மா தனது பதிவில், ஒரு தோல் மருத்துவராக நான் எப்போதும் பக்கெட் குளியல் செய்வதை ஊக்குவிப்பேன். ஷவரில் குளித்தால் நிமிடத்திற்கு 13 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் பக்கெட் குளியலில் மொத்தமாக 20 லிட்டர் மட்டுமே ஆகும். 5 நிமிடம் ஷவரில் குளிப்பதையும், பக்கெட் குளியலையும் ஒப்பிடும் போது தோராயமாக 180 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது. இதே போல ஆர்.ஓ.வில் இருந்து வரும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அதனை வீட்டை துடைப்பதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சுமார் 30 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

    மேலும் வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 600 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பெங்களூர்:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    இதை குடிநீர் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர். இதுவரை 12ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ரூ.1800 முதல் ரூ.2ஆயிரம் வரை வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

    இதுகுறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறும்போது, பெங்களூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் டேங்கர்களை மாநில அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    மேலும் பெங்களூரில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எனது துறை மானியத்தில் இருந்து ஏற்கனவே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதுதொடர்பான சிறப்பு கூட்டம் இன்று மதியம் நடத்தப்படும் என்றார்.

    இதற்கிடையே பெங்களூர் மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு பகுதியில் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அனுமதி இன்றி இயக்கப்படும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    • 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • எல் நினோ தாக்கத்தால் கணிக்க முடியாத பருவகால நிகழ்வுகள் ஏற்படுகின்றன
    • எல் நினோவை எதிர்கொள்ள பெரு நாட்டதிபர் சர்வதேச கூட்டு முயற்சியை கோரியுள்ளார்

    அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா.

    மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது. இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைபொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி திகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன.

    இந்நிகழ்வை "எல் நினோ" (El Nino) என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். பல வருடங்களாகவே இந்த சிக்கலை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வானிலை நிபுணர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரு நாட்டில், செப்டம்பர் 13 அன்று அந்நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம், நீர் நிலை குறித்த தனது தொழில்நுட்ப அறிக்கையில் எல் நினோ தாக்குதல் 2024 கோடை காலம் வரை இருக்கும் என எச்சரித்தது.

    இதனையடுத்து பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் அதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே (Dina Boluarte) எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தினார்.

    • நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சமையல் செய்வதற்கு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்று மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுடன் இன்றுகாலை பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இறுதியாக ஒரு வழியாக பாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களை சந்தித்து ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் என உறுதி அளித்து சமாதானப்படுத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

    மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

    இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 145-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் குடிநீர் வாரியம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதே நேரம் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவரும், 145-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சத்தியநாதன் முயற்சியால் ரூ.12 கோடியில் 150 தார் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க சென்னை குடிநீர் வாரியம் பைப் லைன் பணிகளை முடித்து, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கினால் தான் தார்சாலை அமைக்க முடியும்.

    ஆனால் 110 சாலைகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை பலமுறை மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் சந்தித்து விரைவாக குடிநீர் பணிகளை முடித்து பணி முடிப்பு சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தார்.

    ஆனாலும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதனை அறிந்த சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, விஜயகுமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதனுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் 45 நாட்களுக்குள் குடிநீர் பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் பாதியில் முடிக்கப்பட்டது.

    ×