என் மலர்
நீங்கள் தேடியது "Yercaud"
- வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது.
- காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது. அதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய சாரல் மழை இன்று காலையும் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டியது.
இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையின் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
இதே போல சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
- இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
- சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வளர்க்கப்படும் பூச்செடிகள் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அங்குள்ள சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
இந்த பூங்காக்களில் 650-க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டபுள் டிலைட், மார்கோ போலோ, மேஜிக் லேண்டர், பேமிலி, மூன் ஸ்டோன், சம்மர் ஸ்நோ, ரெட் பிரான், சம்மர் டைம், பர்புல் மூன், மில்கி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண்டைன், புளோரி போன்ற ரகங்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதழ்கள் விரிந்து பூத்து குலுங்குகிறது.
அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா போன்ற இடங்களில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இனிவரும் காலங்களில், சூழல் பூங்கா மற்றும் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளை வருகை அதிகமாக இருக்கும் என்பதால், ரோஜா தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளது.
- கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
- ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம்.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இதேபோல், பள்ளி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
நடப்பு ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதையொட்டி, ஏற்காட்டு சுற்றுலா தலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுகிறது.
எனவே இந்த இதமான சூழலை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் இங்குள்ள பூங்காக்களிலும் வண்ணமயமான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் வகைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றனர்.
- தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.
- சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
ஏற்காடு:
தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம் உள்பட பல மாவட்டங்களில், 103 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகரிப்பு மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் சொகுசு விடுதி, ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து ரசிக்கின்றனர். ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்ததால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
தற்போது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன.
குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
கிட்டத்தட்ட 2 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்தனர்.
மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோரிமேடு வழியாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 24-ந்தேதி தொடங்கின.
இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதர இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அயோத்தி யாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலை வழியாக சென்றன.
15 நாட்களுக்கும் மேலாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் . இதனிடையே சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்நிலையில் சாலை பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் இன்று அதிகாலை முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் குப்பனூர் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்பு போல சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் கூடுதலாக காவலர்களை சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.
- சமீபகாலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.
சில குடும்பங்களில் வார இறுதியில் ஒரு மினி சுற்றுலா போவதை வழக்கமாக வைத்திருப்பர். சில குடும்பங்களில், சேர்ந்தாற்போல் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா போய்விடுவர். ஆனால் பல குடும்பங்களில் பள்ளி ஆண்டு விடுமுறை தான் சுற்றுலா செல்லும் நேரம். அவ்வாறு விடுமுறையை கழிக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சொர்க்கமாக திகழ்வது ஏற்காடு மலைவாசஸ்தலம்.
தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் தான் ஏற்காடு. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.
சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதனாலேயே ஏழைகளின் ஊட்டி என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது.
மரங்களின் நிழலும், தென்றலின் சுகமும், வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகான கவர்னராக இருந்த சர் தாமஸ் முரோ என்பவரால் 1842-ம் ஆண்டு ஏற்காடு கண்டறியப்பட்டது. ஏற்காடு அதன் பெரும்பான்மை சாகுபடியான காபி, ஆரஞ்சு, பலாப்பழம், கொய்யா, ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு தோட்டங்களுக்கு பெயர் போனது. காபி ஒரு முக்கிய உற்பத்தியாகும். இது ஆபிரிக்காவில் இருந்து 1820-ல் ஸ்காட்டிஷ் கலெக்டர் எம்.டி. காக்பர்ன் மூலம் ஏற்காடு வந்தது. மேலும் இங்கு அரிய வகையான மரங்களும் வனவிலங்குகளும் உடைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம், தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன. மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகளும் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.
தென்னிந்தியாவின் ஆபரணம் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. மே மாதத்தில் இங்கு வர நேர்ந்தால் இந்த கோடை திருவிழாவை தவறவிட்டுவிட கூடாது. மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல ஏற்காட்டில் உள்ளன.
எம்ரால்ட் ஏரி
அதில் முதலாவதாக ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படுவது, அதன் நடுவே அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். இது மிகவும் பிரபலமாக எமரால்டு ஏரி என்று அழைக்கப்படுகிறது. அற்புதமான மலைகள் மற்றும் அழகிய தோட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த ஏரி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏரியில் படகு மூலம் சவாரி செய்யும் வசதிகள் நியாயமான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. உங்கள் தேவைக்கு ஏற்ப சுயமாக இயக்கப்படும் படகுகளையும் தேர்வு செய்யலாம்.

பகோடா பாயின்ட்
ஏற்காடு பிரதான பஸ் நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகோடா பாயின்ட், ஏற்காட்டிலியே மிகவும் உயரமான தளமாகும். இதன் உச்சியில் இருந்து ஏற்காட்டின் மொத்த அழகையும் கண்டு களிக்கலாம். இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள், இங்கு கற்களால் ஒரு ராமர் கோவிலை கட்டியுள்ளனர். இதன் அழகை கண்டு கழிக்க, இரவு 7 மணிக்கு முன் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும், இந்த 300 அடி உயர நீர்வீழ்ச்சியின் மயக்கும் மற்றும் வசீகரிக்கும் அழகு, உங்கள் மனதிலும் இதயத்திலும் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் அனுபவமாக இருக்கும்.
இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது. கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த அருவியை ட்ரெக்கிங் பயணம் மூலமாக அடர்த்தியான வனப்பகுதியினுள் பயணித்தும் சென்றடையலாம்.
லேடிஸ் சீட்
ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான இடம் லேடிஸ் சீட். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். வானிலை சரியாக இருந்தால், இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள். இந்த தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.
கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மணி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்து கொண்டிருந்ததால் லேடிஸ் சீட் என்ற பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஜென்ஸ் சீட், சில்ட்ரன் சீட் ஆகியவையும் இங்கு மிக பிரபலம். இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும். அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளை நோக்கியவாறு அமைந்துள்ளன.
அண்ணா பூங்கா
ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும். இதேபோல் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.
தாவரவியல் பூங்கா
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அற்புதமான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் இந்த பூங்கா ஒரு கடவுளின் பரிசு போல காட்சியளிக்கும்.
சேர்வராயன் கோவில்
கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் உள்ளது இக்கோவில். மே மாதத்தில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம். இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும், காவிரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவிரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.
இவை தவிர கரடி குகை, ஆர்தர் இருக்கை, மாண்ட்ஃபோர்ட் பள்ளி, மீன் காட்சியகம், திப்பேரேரி காட்சி முனை, கொட்டச்சேடு தேக்கு காடு, கிரேஞ்ச், ரெட்ரிட் இல்லம், மஞ்சகுட்டை வியூ பாயிண்ட், தலைசோலை அண்ணாமலையார் கோவில், நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகியவையும் ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும்.

எப்படி ஏற்காடுக்கு செல்வது?
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால், விமானம், ரெயில் மற்றும் சாலை என அனைத்து போக்குவரத்து முறைகளாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சேலம் விமான நிலையம் ஏற்காடுக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். சேலம் விமான நிலையத்திலிருந்து ஏற்காடு சுமார் 47 கி.மீ. ஆகும். பயணிகள் விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து இலக்கை அடையலாம்.
இதேபோல் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கேரளா, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு தினசரி ரெயில்கள் உள்ளன. ரெயில் நிலையத்திலிருந்து ஏற்காடு செல்ல வாடகை வண்டியில் செல்லலாம். இல்லையெனில் ரெயில் நிலையத்திலிருந்து சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் பஸ்சில் ஏறுங்கள். அங்கிருந்து ஏற்காடு செல்லும் பஸ் கிடைக்கும்.
தமிழ்நாடு மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக ஏற்காடு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை அல்லது சேலம் போன்ற நகரங்களில் இருந்து ஏற்காட்டுக்கு வாகனத்தில் வார இறுதியில் மக்கள் செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சேலம் - ஏற்காடு செல்லும் பஸ்கள், ஏற்காடு ஏரிக்கரையில் நின்று செல்லும். ஏரியில் ஒரு வண்டி ஸ்டாண்ட் உள்ளது, அங்கு நீங்கள் சுற்றுலாவிற்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்புறம் என்ன அப்பிடியே ஜாலியா ஏற்காட்டுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்க..!
ஏற்காட்டில் என்ன கிடைக்கும்?
ஏற்காடு ஒரு மலை வாசஸ்தலம் என்றாலும் தீவிர வெப்ப நிலை மாற்றம் இங்கு இருப்பதில்லை. எனவே சுற்றுலா பயணிகள் சுமப்பதற்கு கடினமான தங்கள் குளிர் கால உடமைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இலகுவான உடைமைகளை கொண்டு வந்தால் போதுமானது. ஆண்டு முழுவதும் லேசான மற்றும் இதமான வெப்பநிலையே இங்கு காணப்படுகிறது. ஏற்காட்டின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.
ஆண்டு முழுவதும் இந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்றாலும் கூட, கோடை மற்றும் குளிர்காலத்தில் ஏற்காடு செல்வது ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்காட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்குறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பருவமழை பெய்கிறது. மழைப்பொழிவு காரணமாக, இப்பகுதியில் மலையேற்றம் செய்வதும் மற்ற இடங்களுக்குச் செல்வதும் கடினமாகிறது.
ஏற்காட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. இதனால் ஏற்காடு குளிர்காலத்தில் இனிமையான காலநிலை மற்றும் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளைக் கொண்டுள்ளது. எனவே அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் தான் ஏற்காடு செல்ல சிறந்த பருவம் ஆகும். ஏராளமான பட்ஜெட் மற்றும் நடுதரப்பட்ட ஹோட்டல்கள் ஏற்காட்டில் இருப்பதால், இங்கு தங்குவது ஒரு எளிதான விஷயமாகும்.
உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அழகிய சுற்றுப்புற காட்சிகள் நிறைந்த அறைகள், தனி பங்களா, காற்றோட்டமான அறைகள் என விரும்பியவற்றை நீங்கள் தேர்வு செய்து தங்கலாம். ஏன் வீடு போன்ற தங்கும் இடங்கள் கூட உள்ளன. ஏற்காட்டிற்கு வருபவர்கள், உள்ளூர் ஏற்காடு காபியை ருசிக்க வேண்டும். அதன் சொந்த சுவை மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. இதேபோல், இங்கு நூற்றுக்கணக்கான மிளகாய் பஜ்ஜி கடைகள் உள்ளன. இந்த பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர். அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது. இதுமட்மின்றி ஸ்பைசி மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி, பிரட் ஆம்லெட் போன்றவையும் மிக பிரபலம்.
ஆண் மற்றும் பெண்களுக்கு நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகையான முடவன் ஆட்டுக்கால் கிழங்கு இங்கு பரவலாக கிடைக்கின்றன. இந்த கிழங்கில் சூப் வைத்து விற்கின்றனர். இந்த சூப்பின் சுவையானது ஆட்டுக்கால் சூப்பின் சுவையை போலவே இருக்கும். இதையும் சுவைத்து பார்க்க மறக்காதீர்கள்.
- 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.
*** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.
- ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.
- 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது. இதை யொட்டி பிரமாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. நிறைவு விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.
விழாவில் புகைப்படப்போட்டி, இளை ஞர்கள் மற்றும் பெண்க ளுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டி கள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகை யில், 46-வது ஏற்காடு கோடை விழாவை சுமார் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர். ஏற்காட்டை சுற்றி பார்க்க சூழலியல் சுற்றுலா பேருந்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நாள்தோறும் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை புறப்பட்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலை, ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களையும் பார்வையிட்டு திரும்பும் வகையில் இந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஏற்காடு ஏரியில் வண்ண விளக்குகளுடன் கூடிய நீர் ஊற்று அடுத்த ஆண்டு கோடைவிழாவில் இடம் பெறும் என்றார். நிகழ்ச்சி யில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் (பொ) மாறன், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புராஜன், குணசேகரன் உட்பட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
- சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவும் ஏற்காட்டில் கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல முக்கிய சாலைகள் சேறும் சகதியுதாக காட்சியளிக்கிறது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பகல் நேரங்களிலும் குளிர் தாங்கும் ஆடைகளான சுவட்டர், ஜர்கின் உள்ளிட்டவற்றை அணிந்தே வெளியே வருகின்றனர்.
மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் மலைப் பாதையில் ஆங்காங்கே உள்ள நீர் வீழ்ச்சிகள், கிளியூர் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
பொதுவாக வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் முகாமிட்டு பொழுதை கழித்து செல்வர். ஆனால் நேற்று மழை பொழிவு காரணமாக குறைந்தளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்காட்டில் பெய்துவரும் மழை மற்றும் குடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஏற்காட்டில் தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கினார்கள். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகள், கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தப்படி உள்ளது. இதனால் பெரும்பாலான தங்கும் விடுதி அறைகள் முழுவதும் நிரம்பின. இதனால முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அவர்கள் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி அதில் உறங்கியதை காண முடிந்தது.
- மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
- சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.
அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.