search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    • உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
    • மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த ஜூன் 12ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமானது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அமைந்துள்ளது.

    நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து பலரின் உயிரை பறித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. தீ விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் மீட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.



    உயிரிழப்பு:

    தீ விபத்து தொடர்பான விசாரணையில் சார்ட் சர்கியூட் காரணமாவே விபத்து ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு பேர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கட்டிடத்தில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.

    இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியானது. பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

     


    இழப்பீடு:

    இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.

    இதோடு 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த கேரளா மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்தது.

    தீ விபத்தில் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்குதாக தெரிவித்தது.

    • வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
    • மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ்.

    அசுரன், துணிவு திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நோட்டீசில், "மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த Footage படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது.

    அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது . ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று சீத்தல் தெரிவித்துள்ளார்.

    • டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
    • இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.

    யோகேஷ் சைகல் என்பவர் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மாமனாருடன் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.

    இலங்கைக்கு சுற்றுலா சென்ற அவரின் குடும்பம் கொழும்புவில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியில் மோதியுள்ளது. அந்த விபத்தில் சைகலின் மனைவி, மகன், மாமனார் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சைகல் மற்றும் அவரது மகள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர்.

    சைகலின் சுற்றுலா பயணம் தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி புக் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் இலங்கை சுற்றுலாவை ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனி தான் கவனித்து கொண்டது.

    இந்த விபத்திற்கு பிறகு டிராவல் கம்பெனிகளின் அலட்சியத்தால் எனது குடும்பத்தை இழந்து விட்டேன் என்று டெல்லி நுகர்வோர் ஆணையத்திடம் யோகேஷ் சைகல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் முடிவில் தாமஸ் குக் மற்றும் ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனிகள் சேர்ந்து 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், தற்போதைய சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதவிக்காக அரசாங்கம் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. கோண்டா (8957400965) மற்றும் லக்னோ (8957409292).

    காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார்.
    • இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    கடந்த 2009 ஆம் ஆண்டு கடுமையான குறைபாடுகள் இருந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனக்கு விற்றதாக பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார்.

    இந்த வழக்கில், பழுதடைந்த பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக புதிய காரை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

    ஆனால் பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். தனக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பழைய காருக்கு பதில் புதிய காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு.
    • மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த தனது மகனுக்கு இழப்பீடு வழங்க கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

    திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.

    கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணையின்போது மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், "சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    • 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
    • உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

    இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

    அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

    அப்படி கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் பலியாவது தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    அண்மையில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை இணை மந்திரி தாரக பாலசூரியா தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷிய அதிகாரிகளிடம் இதை பிரச்சினையாக எழுப்பியதாக இலங்கையில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    மேலும் போரில் காயமடைந்த இலங்கையை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தல், போர் முனையில் சிக்கி இருக்கும் இலங்கையை சேர்ந்தவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் இலங்கை அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
    • பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

    குவைத்சிட்டி:

    குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 12-ந்தேதி அந்நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

    பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி), சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்), சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்) முகமது ஷெரீப் (திண்டிவனம்), கருப்பணன் ராமு (ராமநாதபுரம்), ராஜூ எபநேசன் (திருச்சி) , ரிச்சர்ட் ராய் (பேராவூரணி) ஆகியோர் இறந்தனர்.

    பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரபு டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

    • இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை நீராலி என்பவர் ஆர்டர் செய்துள்ளார்.
    • அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வரும் நீராலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார்.

    அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது. அதை அறியாமல் அதை அவர் சிறிது சாப்பிட்டுள்ளார். பின்னர் இது சிக்கன் சாண்ட்விச் என்று தெரிந்ததும் ஆத்திரமடைந்த அவர் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

    தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் 50 லட்சம் வழங்கவேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இதனை விசாரித்த சுகாதாரத்துறை VRYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதே தவறை மீண்டும் செய்தால், உங்கள் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
    • தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    தாராபுரம்:

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிய பின்பும் இழப்பீடு வழங்காததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமம், நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கோனேரிப்பட்டி.பாலு ஆகியோர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 1997ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே நல்ல தங்காள் அணையை கட்டியது. அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது, விவசாயிகளும் முழு சம்மதத்தோடு நிலத்தை கொடுத்தார்கள்.

    இழப்பீடு மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், உரிமையியல் நீதிமன்றத்தில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் நீர்வள ஆதாரத்துறை மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.

    20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் ஒரு நிர்வாகம் இயங்கி வருவது என்பது, தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    எனவே நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று 1-4-2024 முதல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாலையில் நடந்த பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ₹4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சாலையிலேயே இரட்டைக் குழந்தைகளை அவர் பிரசவிக்க, ஒரு குழந்தை அங்கேயே உயிரிழந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை களைய ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    ×