search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல் தண்ணீர்"

    • விவசாய தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 532 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் விவசாய தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் இருப்பதால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடிக்குள் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிலிகுண்டுவுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 79.54அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9ஆயிரத்து 807கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2917 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 98.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 532 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணை இன்னும் சில நாட்களில் நிரம்பும் நிலையில் உள்ளது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையும் இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 39.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 818 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×