என் மலர்
நீங்கள் தேடியது "காய்கறிகள்"
- தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.
- அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் என்னும் ஒரு மதத்தினர் உள்ளனர். இவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக சாலை என சேர்த்துக்கொள்வார்கள்.
இந்த மெய்வழி மதத்தில் 69 ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை, தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.
அதன்படி மெய்வழி தலையுக ஆண்டு புரட்டாசி மாதம், பிச்சை ஆண்டவர் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மெய்வழி ஆலய வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.
அப்போது மெய்வழி சபைக்கரர் சாலை வர்க்கவான் வந்து அனைவரிடமும் காய்கறிகள், அரிசி, பருப்புகளை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அனைவரிடம் பெறப்பட்ட காய்கறிகள், அரிசி, பருப்பை கொண்டு சமையல் செய்து, அனைவருக்கும் சபைக்கரசர் வர்க்கவான் பிரசாதமாக வழங்கினார்.
அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், தமிழகம் மற்றும் வெளிமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காய்கறிகளை படைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
- தக்காளியில் லைக்கோபீன்கள் காணப்படுகின்றன.
- புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை பிரக்கோலிக்கு உண்டு.
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் (மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா) மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். அவற்றில் பைட்டோ கெமிக்கல் என்னும் சேர்மம் உள்ளது. அவை ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்து நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வித்திடும்.
* வெங்காயத்தில் அல்லிசின் உள்ளது. அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் உடலில் உருவாகும் சில நச்சுக்களை தடுக்க உதவும்.
* ராஸ்பெர்ரி, புளூபெர்ரி போன்ற சிவப்பு, நீல நிற பழங்களில் அந்தோசயனிகள் காணப்படுகின்றன. அவை விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.
* தக்காளி, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு திராட்சைப்பழம் மற்றும் கீரை போன்ற அடர் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. தேயிலை, ஆப்பிள், முட்டைக்கோஸ், பீன்ஸ் ஆகியவற்றில் பிளேவனாய்டுகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
* தக்காளியில் லைக்கோபீன்கள் காணப்படுகின்றன. அவை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயல்படுகின்றன. உடலில் அதிக அளவு லைக்கோபின் உள்ளடங்கியிருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
* கிரீன் டீ உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மார்பக புற்றுநோய் அபாயத்தை தடுக்கவும் உதவும். கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் துணைபுரியும்.
* புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை பிரக்கோலிக்கு உண்டு. மார்பகம், சிறுநீர்ப்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
* பெண்கள் காளான்களை சமையலில் தொடர்ந்து சேர்ப்பதும் மார்பக புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள உதவிடும். மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் சாப்பிடுவது நல்லது.
கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. அப்படி உடலில் கரோட்டினாய்டுகளின் அளவு அதிகம் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் கேரட்டை தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது.
- தினசரி உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது அவசியமானது.
- தினசரி அவசியம் சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள்.
உடல் சோர்வு, செரிமான கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து அனுபவித்தால் தினசரி உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது அவசியமானது. அவை ஊட்டச்சத்து தேவைகளை திறம்பட நிறைவேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும்.
ஊட்டச்சத்தின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தினசரி அவசியம் சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள் இவை..
பீர்க்கங்காய்:
'டோரி' என்றும் அழைக்கப்படும் இந்த காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, ஏ, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் துணை புரியும்.
கோவைக்காய்:
வைட்டமின்கள் ஏ, சி, பி-காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்களால் இந்த காய் நிரம்பியுள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளது. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கும்.
புடலங்காய்:
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய், எடை மேலாண்மையை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவிடும் சிறந்த காய்கறியாகும். வைட்டமின் சி போன்றவைகளும் நிறைந்திருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.
சுரைக்காய்:
இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நீரேற்றத்துக்கும், உடல் எடை குறைப்புக்கும் சிறந்தது. மேலும் சுரைக்காயில் வைட்டமின்கள் சி, கே, கால்சியம், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
பாகற்காய்:
தனித்துவமான கசப்பான சுவை கொண்ட இந்த காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும். பாகற்காயில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அபரிமிதமாக நிறைந்துள்ளன.
வெள்ளைப்பூசணி:
மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இதுவும் உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்டது. இதில் வைட்டமின்கள் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவைகளில் ஒன்றையாவது தினசரி உணவில் இடம் பெற செய்வது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடலின் ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
வெண்டைக்காய்
'பிந்தி', 'லேடி பிங்கர்' என்றும் அழைக்கப்படும் இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சுவையான காய்கறியாகும். உடல் எடை மேலாண்மைக்கும், செரிமானத்துக்கும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மிகுந்தது. உடலின் இணைப்பு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
- ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
- இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
ஒரு நாளைக்கு உண்ணக்கூடிய சர்க்கரையின் அளவு என்பது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளின் அளவு மற்றும் நமது செயல்பாடுகளை பொறுத்தது.
பொதுவாக முடிந்தவரை அதிகமான சர்க்கரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கவில்லை. அதிக சர்க்கரை சாப்பிடுவது தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
இது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் கலோரிகளை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் மற்றும் சர்க்கரைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பது மிகவும் முக்கியம்.
பழங்கள், காய்கறிகளில் நீர், நார்ச்சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் முற்றிலும் நல்லது, ஆனால் சேர்க்கப்பட்ட சர்க்கரைக்கு இது பொருந்தாது.
மிட்டாய்களில் சர்க்கரை முக்கிய மூலப்பொருளாகும். குளிர்பானங்கள், வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்களில் சர்க்கரை உள்ளது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
நாம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் வெறும் 10% மட்டும் தான் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கிறது.
மேலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளில் இயற்கை சர்க்கரையும் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் ஓட்ஸ் மீலில் தேனை சேர்த்தால், ஓட்ஸ் மீலில் இயற்கையான மூலத்திலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகளில் உள்ள இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்கள், பல் சிதைவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)படி, ஒரு நாளில் உண்ண வேண்டிய அதிகபட்ச சர்க்கரை அளவு:
ஆண்கள்: ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்)
பெண்கள்: ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்)
நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், மேற்கூறிய அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இந்த சிறிய அளவிலான சர்க்கரையை எரித்துவிடலாம்.
இருப்பினும் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன.
- நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்:
உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளன.
புரதங்கள்:
கோழி, ஒல்லியான இறைச்சிகள், மீன் மற்றும் பருப்பு வகைகளை உங்களில் குழந்தைகளின் உணவில் இணைக்கவும். இவை நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்கும்.
புரோபயாடிக்குகள்:
தயிர் மற்றும் புளித்த உணவுகளில் காணப்படும் புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. இது வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அம்சமாகும்.
முழு தானியங்கள்:
முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை நீடித்த ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
நட்ஸ் வகைகள்:
நட்ஸ் மற்றும் விதைகளில் துத்தநாகம், செலினியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
திரவங்கள்:
போதுமான நீரேற்றம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் நீர்த்த பழச்சாறுகளை வழங்குங்கள்.
மழைக்காலத்தில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுவகைகளை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம்.
- காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை.
- கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் இப்போது இருக்கும் வேலை பளுவால் ஈஸியா என்ன சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிட தொடங்கிவிட்டோம். ஆனால் அப்படி அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதால் நமக்கு சுவை என்னமோ நல்லாதான் இருக்கும்.. ஆனால் உடலுக்கு அத்தனையும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது.
இதனால் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், உப்பு சார்ந்த நோய்கள் இப்போ அதிகபடியாக பெருகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், கேன்சர் என பல்வேறு விதமாக உடல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.
சரி ஹோட்டல்ல சாப்பிட்டா தான் இப்படி ஏகப்பட்ட நோய்கள் வருது.. அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவோம் என்று கிளம்பினாலும் இப்படிதான் ஆகிறது.
ஆமாம்... நாம் எந்த அளவுக்கு எண்ணெய், உப்பு, சர்க்கரை என அதிக சுவையூட்டும் உணவுகளை எடுத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நோய்களுடன் வாழ்கிறோம் என்று தான் அர்த்தம்.
இப்போதெல்லாம் சிறு வயதிலேயே டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடுகிறது. இதை ஐசிஎம்ஆர், என்ஐஎன் ஆகிய சுகாதார அமைப்புகள் உணவின் வழிகாட்டி என்ற கருத்துகணிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.
நாம் அன்றாடம் வேக வைத்த காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள் நாம் எடுத்து கொள்வதால் உடல் சார்ந்த நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.
நான் ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடலுக்கு அதிக பாதிப்புக்களை தருகிறது. கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது.
இது போன்ற உணவு பழக்கங்களில் இருந்து நாம் எப்படி மாறுவது என்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்சட்டி சமையல் முறையில் சமைத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது.
காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை. ஆதலால் அரைபதம் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
நமக்கு வரும் நோய்களுக்கு நாம் தான் காரணமாக இருக்கிறோம். நமது சந்ததியும் இதையே பின்பற்றுவதால் அவர்களுக்கும் சிறு வயதிலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறன. ஆகவே நமது அடுத்த தலைமுறையை காப்பாற்றுவது தமது கையில் தான் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மகத்துவத்தை அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூற நாம் கடமைபட்டிருக்கிறோம்.
- சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
- ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தது.
வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பீன்ஸ் ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
அதேபோல் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிப்பால் கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், சவ்சவ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-
உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.200, அவரைக்காய்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.45, பீட்ரூட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.30, நூக்கல்-ரூ.30, சவ்சவ்-ரூ.50, சுரக்காய்-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.40, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50, மாங்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.50, தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.26, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.26, பச்சை மிளகாய்-ரூ.60, இஞ்சி-ரூ.135.
- தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.
பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.
எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.
எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
- அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
- 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
- மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
- ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
வானவில்லில் ஒளிரும் ஏழு வண்ணங்களை போலவே நிறத்தோற்றம் கொண்ட காய்கறிகள், பழங்களை உண்ணும் வழக்கத்தை பின்பற்றுவது `ரெயின்போ டயட்' எனப்படுகிறது. வெவ்வேறு நிறம் கொண்ட தாவரங்கள், மரங்களில் விளையும் பொருட்கள் வெவ்வேறு வைட்டமின்கள், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை.
சிவப்பு நிற உணவுகள்:
தக்காளி, தர்பூசணி, கிரேப் புரூட், கொய்யா, கிரான்பெர்ரி, ஆப்பிள், டிராகன் பழம் போன்றவை.
ஆரோக்கிய நன்மைகள்:
பக்கவாதம், மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகின்றன.
மஞ்சள்-ஆரஞ்சு உணவுகள்:
கேரட், மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணி, பப்பாளி, ஆப்ரிகாட், வாழைப்பழம் போன்றவை.
ஆரோக்கிய நன்மைகள்:
வீக்கத்தைக் குறைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாகவும், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகின்றன.
நீலம்-ஊதா-இண்டிகோ உணவுகள்:
நீல நிற பெர்ரி பழம், கத்திரிக்காய், கருப்பு நிற பெர்ரி, பிளம்ஸ் போன்றவை.
ஆரோக்கிய நன்மைகள்:
போலேட், வைட்டமின் பி நிறைந்த இந்த உணவுகள் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை எதிர்த்து போராட உதவுகின்றன. ஞாபகத் திறனை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன. இதய நோய்கள் மற்றும் மூட்டுவலி அபாயத்தையும் குறைக்கின்றன.
பச்சை உணவுகள்:
பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு, புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை.
ஆரோக்கிய நன்மைகள்:
இவைகளில் போலிக் அமிலம், வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளன. உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவிபுரிகின்றன.
இந்த உணவு ஆரோக்கியமானதா?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, `ரெயின்போ டயட்' எனப்படும் வானவில் வண்ண உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. அத்துடன் பிளாவனாய்டுகள் நிறைந்த வண்ணமயமான உணவுகள் மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும்.
- சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
- இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.
மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.