search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் முறைகேடுகள்"

    • நீட் தேர்வின் முறைகேடுகள் நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது.
    • 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவேண்டும்.

    மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வலியுறுத்தி நேற்று (28-6-2024) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அதன் விவரம் பின்வருமாறு:-

    மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தமது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்

    இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள் நீட தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை இரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-6-2024 அன்று. நீட் தேர்வு முறையை இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டுமென்றும், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

    • நாடு முழுக்க 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
    • கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுக்க நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுக்க 24 லட்சம் பேர் எழுதினர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின.

    இதனிடையே நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதோடு ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

    இந்த வரிசையில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான பிரச்சினை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டு இருப்பதோடு, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என இது தொடர்பான அனைத்து பிர்ச்சினைகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ. துவங்கியுள்ளது.

    முன்னதாக போட்டி தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மேலும், மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

    ×