என் மலர்tooltip icon

    உலகம்

    • சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர்.

    என்ஜாமெனா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் மோங்கோ நகரத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தண்டனை கைதிகள் உள்பட சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அங்குள்ள கைதிகள் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் குவேரா மாகாண கவர்னர் மோங்கோ சிறைச்சாலையை பார்வையிட சென்றிருந்தார். அப்போது சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த சமயத்தில் சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.

    இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கவர்னர் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி 130-க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.

    ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது சாட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.

    ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது.

    இதனால் சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.

    இந்நிலையில், நாம் சாட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் சாட்ஜிபிடிக்கு பல மில்லியன் டாலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

    மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை. இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
    • 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.

    போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.

    ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.

    பொதுவாக போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.

    ஆனால், போப் பிரான்சிஸ் ஜிங்க-ஆல் பூசப்பட்ட சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.

    100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.

    மேலும், போப்பின் இறுதிச் சடங்கிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்தந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் கூடுவார்கள். ரகசிய பரிமாணம் செய்து ரகசிய வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.

    80 வயதிற்குட்பட்ட கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.

    புதிய போப்பை தேர்ந்தெடுக்க மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்.

    பின்னர் பெரும்பான்மையை பொருத்து புதிய போப் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்!
    • உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி, தீர்வு மற்றும் நம்பிக்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

    ஏழைகள் மீதான அக்கறை மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிப்பதன் காரணமாக, சேரிகளின் போப் என்று அழைக்கப்பட்ட,   போப் பிரான்சிஸ், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இன்று தனது 88வது வயதில் காலமானார்.

    இன்று போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் துக்கம் அனுசரிக்கும் வேளையில் நேற்று அவரின் கடைசி ஈஸ்டர் செய்தி உலக அமைதிக்கான கருத்துக்களை தாங்கி நிற்கிறது. இந்த செய்தி உலகிற்கு அவரின் ஒரு ஆழமான பிரியாவிடையாக மாறியுள்ளது.

    அவரது ஈஸ்டர் செய்தியில்,

    "எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.

    இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.

    பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கும், அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் எனது நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன்.

    உலகம் முழுவதும் யூத-விரோத சூழல் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், காசா மக்களையும், குறிப்பாக அதன் கிறிஸ்தவ சமூகத்தையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

    அங்கு பயங்கரமான மோதல் தொடர்ந்து மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தி, வருந்தத்தக்க மனிதாபிமான நெருக்கடியை உருவாக்குகிறது. போரிடும் தரப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும், அமைதியின் எதிர்காலத்தை விரும்பும் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவவும் அழைப்பு விடுகிறேன்.

    மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்காகவும், லெபனான், ஏமன் மற்றும் சிரியாவில் நெருக்கடியில் உள்ளவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

    உயிர்த்தெழுந்த கிறிஸ்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, ஈஸ்டர் பரிசு அமைதியை வழங்குவாராக, மேலும் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கட்டும்.

    தெற்கு காகசஸ், மேற்கு பால்கன், ஆப்பிரிக்கா, மியான்மர் மற்றும் வன்முறை, அரசியல் அமைதியின்மை மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில் மோதல்கள் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி, தீர்வு மற்றும் நம்பிக்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

    "நமது உலகில் அரசியல் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கிடைக்கக்கூடிய வளங்களை ஏழைகளுக்கு கொடுத்து உதவவும், பசியை எதிர்த்துப் போராடவும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேண்டும். இவை அமைதியின் ஆயுதங்கள். மரணத்தின் விதைகளை விதைப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஆயுதங்கள்!

    மனிதநேயக் கொள்கை நமது அன்றாட நடவடிக்கைகளின் அடையாளமாக ஒருபோதும் இருக்கத் தவறக்கூடாது. பாதுகாப்பற்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களைத் தாக்குவதன் மூலம் ஆன்மாவும் மனித கண்ணியமும் தாக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    இந்த ஜூபிலி ஆண்டில், போர்க் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஈஸ்டர் ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.  

    • நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து.
    • சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் (திருத்தந்தை) பிரான்சிஸ் இன்று தனது 88 ஆவது வயதில் காலமானதாக வாடிகன் அறிவித்துள்ளது.

    அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.

    அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.

     2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்.

    சேரிகளின் போப்

    ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.

    அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    சீர்திருத்தவாதி 

    பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.

    வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

    12 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்தி, கல்லீரல் அழற்சி நோயுடன் போராடிய பிறகு, பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) 88 வயதில் இறைவனடி சேர்ந்தார். தனது இறுதிச் சடங்கை எளிமையாக செய்ய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் முன்னரே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    பணியைத் குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.

    ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.

    டைம் லைன்

    2014 : பாலஸ்தீன மக்களின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக, மேற்குக் கரை நகரமான பெத்லகேமிலிருந்து இஸ்ரேலைப் பிரிக்கும் சுவர் அருகே பிரார்த்தனை செய்தார்.

    2015 : ஏழைகளைச் சுரண்டி பூமியை ஒரு பெரிய குப்பைக் குவியலாக மாற்றியுள்ள கட்டமைப்பு ரீதியாக வக்கிரமான உலகளாவிய பொருளாதார அமைப்பைச் சரிசெய்ய ஒரு கலாச்சாரப் புரட்சிக்கு அழைப்பு விடுத்து, "லாடாடோ சி" என்ற  அறிக்கையை வெளியிடுகிறார்.

    2015 : அமெரிக்காவைக் காலனித்துவ காலத்தில் கைப்பற்றியபோது, பொலிவியாவில் பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை செய்த பாவங்கள் மற்றும் குற்றங்களுக்காக மன்னிப்பு கோருகிறது.

    2015 : விவாகரத்து  பெற விரும்பும் கத்தோலிக்கர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்து கொள்ளும் வகையில், திருமண ரத்து செயல்முறை விரைவாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது.

    2016 : அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகப் பிரார்த்தனை போப் பிரான்சிஸ் செய்கிறார். எல்லைச் சுவரைக் கட்ட விரும்பியதற்காக அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு கிறிஸ்தவர் அல்ல" என்று போப் தெரிவத்தார்.

    2019: கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கூட்டு உறவுகளை ஏற்படுத்தி, அல் அசார் இமாமுடன் "மனித சகோதரத்துவம்" ஆவணத்தில் கையெழுத்திடுகிறார்.

    2021: ஈராக்கிற்கு விஜயம் செய்த முதல் போப் ஆன பிரான்சிஸ், உயர்மட்ட ஷியா முஸ்லிம் மதகுருவை சந்தித்தார்.

    2023: அசோசியேட்டட் பிரஸ் நேர்காணலில் "ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது குற்றமல்ல" என்று அறிவிக்கிறார்.

    2023: ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை அங்கீகரித்தார். இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பிற இடங்களில் உள்ள பழமைவாத பிஷப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் சந்தித்தார். 

    2025 ஏப்ரல் 20  (நேற்று) ஈஸ்டர் செய்தியாக, காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்பதை தனது உரையில் வலியுறுத்தினார்.  

    • 88 வயதான போப், நிமோனியா, சுவாசக் கோளாறுக்கு சிகிச்சை பெற்றார்.
    • கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போப் பிரான்சிஸ் இன்று (திங்கள்கிழமை) காலை காலமானார் என்று வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார். 

    "இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கெவின் ஃபாரெல் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

    88 வயதான போப், நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று, 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.

    நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர்  வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை தாக்கியது.
    • 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.

    ஏமன் தலைநகர் சனாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க விமானத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

    ஏமன் அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சனாவின் ஷூப் மாவட்டத்தில் உள்ள ஃபர்வா சுற்றுப்புற சந்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் கொல்லபட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை அமெரிக்க விமானத் தாக்குதல்கள் தாக்கி குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.

    • சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அமெரிக்கா அறிவித்தது.
    • சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது.

    பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இந்நிலையில் வரிச் சுமையை குறைப்பதாக கூறி சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் 'சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் (வர்த்தக) ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது.

    சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.

    • கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
    • காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் சமீபகாலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வான்கூவரில் உள்ள ஒரு குருத்வாரா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

    குருத்வாரா சுவர்களில் பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வான்கூவர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்ரே என்ற பகுதியில் லட்சுமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்கள். கோவிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு எம்.பி. சந்திரஆர்ய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட கண்டன பதிவில் கூறி இருப்பதாவது:-

    பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து கோவில் மீதான தாக்குதல் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
    • நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,  இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.

    மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.

    ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.

    நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறது.
    • அவரது நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.

    அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின

    இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

    அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடதுக்கீட்டை எதிர்த்து கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

    இதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமர் மாளிகையில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்று வரை அவர் இந்தியாவிலேயே உள்ளார்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடுகடத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×