என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- திமுக அமைச்சருமான பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
- முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி மக்களின் விருப்பம். மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும், திமுக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசு செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை.
- தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நெல்லை:
தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
இதில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை. தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்திய-இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை அறிய தேர்தல் வரை காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இப்போது கூட்டணி என சொல்லலாம். பிறகு மறுக்கலாம். எனது அடுத்த கட்ட முடிவை விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்து எனது முடிவு இருக்கும்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போன்று இல்லை. அமைச்சரின் பேச்சு அருவருக்கத்தக்கதாக உள்ளது. பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
- அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர் வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது,
சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமையிலான சிறப்பான கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். அவருக்கு 1½ கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் விலைவாசி உயர்வு, தி.மு.க. ஆட்சியின் வேதனைகள், கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சி எப்போது முடியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வருங்காலம் நமது காலம். நமது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இடங்களை பிரித்துக் கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்தது. எனவே நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கவுசல்யா கீழே விழுந்தார்.
- ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார்.
ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அதனை இயக்குபவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.
உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர், ஆபரேட்டர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அமைதியான மாநிலம் என்பதால் தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு.
- சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ் நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
நீட் தேர்வை-இந்தித் திணிப்பை-மும்மொழிக் கொள்கையை-வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அ.தி.மு.க.-இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை.
அ.தி.மு.க. தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக தி.மு.க.வையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.
மாநில உரிமை-மொழியுரிமை-தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ் நாட்டின் சுயமரியாதையை-தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.
நீட் தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பியபோது அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்ல முடியவில்லை. 'நீட் தேர்வு சரியானது' என்றாவது தனது வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது' என்ற திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
20-க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கிறார்கள். இவர்களும் திசை திருப்பும் வகையில் தான் தற்கொலை செய்து கொண்டார்களா? இங்கு மட்டுமல்ல, பீகாரிலும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இதற்கு உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?
5 மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவதும், மாணவர்கள் சிலரும் பெற்றோர் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாவது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? சிபிஐ யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? விசாரிக்கவும். அதன் பிறகு 'நீட் தேர்வு எதிர்ப்பு' என்பது திசை திருப்புவதற்காகச் சொல்லப்படுகிறதா மருத்துவக் கல்வியைக் காப்பதற்காகச் சொல்லப்படுகிறதா என்பதை உள்துறை அமைச்சர் அறிவார்.
உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு' என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை பா.ஜ.க. ஆண்டது. அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார்.
அமைதியான மாநிலம் என்பதால் தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு. இதனை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன. ஆனால், சட்டம் ஒழுங்கு மோசம் என்று உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்பிச் சென்றி ருக்கிறார்.
அ.தி.மு.க.வுடன் கூட் டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ் நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா.
பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?
இன்றைய அ.தி.மு.க. பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பா.ஜ.க. தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்ததே 'ஊழல்' தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.
தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை-எனத் திட்டமிட்டு தமிழ் நாட்டை அனைத்து வகையி லும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க.,வின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பா.ஜ.க. நிறைவேற்றப் பார்க்கிறது. பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மாலை முதல் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.
பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்தது. அம்மாபேட்டை அடுத்துள்ள நத்தமேடு, மணக்காடு தோட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் 5 நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று மழை பெய்த பொழுது மாடுகளை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் இடி பிடித்து மின்னல் அங்கிருந்த 3 மாடுகளை தாக்கியது. இதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மற்றொரு மாடு அதிர்ஷ்டசமாக உயிர் தப்பியது. மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் இடத்திற்கு பூனாச்சி கிராம நிர்வாக அலுவலர் விரைந்து சென்று இருந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். இறந்த மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என விவசாயி முருகேசன் வேதனையுடன் கூறினார். மேலும் நஷ்ட ஈடு வழங்கவும் கோரிக்கை எடுத்துள்ளார். இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
- கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
- தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
கோத்தகிரி:
மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பில் கேரட் பயிர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது.
இங்கு விளையும் கேரட் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்து, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள கேரட் மண்டிக்கு நீலகிரியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான கேரட் வருகிறது. அதுவும் தினமும் ஆயிரம் டன் வரை மேட்டுப்பாளையம் மண்டிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 50 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விலை தொடர்ந்து குறைந்து வருவதால், கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், ஏற்றுமதி, வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை என்றனர்.
- திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.
- இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?
- குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?
சென்னை:
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே…
இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?
குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?
இந்தத் துரோகக் கூட்டணியை - தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்! என்று கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது!
- காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. தலைவரும், விடியா தி.மு.க. அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை தி.மு.க. பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது.
இன்றோ, அ.இ.அ.தி.மு.க.-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருந்தார்.
"என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!
அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்!
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்!
தமிழ்நாடு விரோத தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.