ஆன்மிக களஞ்சியம்

சிறப்பான வேதாரண்யம் தலம்

Published On 2023-06-13 10:27 IST   |   Update On 2023-06-13 10:27:00 IST
  • பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம்.
  • அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வோர் மட்டுமின்றி, மற்றவர்களும் புனித நீராடலாம்.

மகாளய அமாவாசையை "முன்னோர் திருநாள்" என்றே அழைக்கலாம். இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் மனித உருக் கொண்டு, பூலோகத்திலுள்ள புஷ்பவனக் காட்டுக்கு வந்தன. இவை, அங்கு மலர் பறித்து, இத்தலத்து சிவனைப் போற்றி வழிபாடு செய்தன.

கலியுகம் பிறந்தவுடன், "இனி, நல்லதுக்கு காலம் இல்லை. அதனால், பூலோகத்தில் இருப்பது நல்லதல்ல' என்று இறைவனிடம் கூறிவிட்டு, இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச்சென்றுவிட்டன. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து, இறைவனை வழிபட்டு வந்தனர்.

பின்னர், இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி, கதவை திறந்தனர்.

வேதங்கள் இங்கு தங்கியிருந்து இறைவனை வணங்கியதால், இவ்வூர், "வேதாரண்யம்" என்று பெயர் பெற்றது. திருமறைக்காடு என்று தமிழில் சொல்வர். கடற்கரை ஓரத்தில் கோவில் இருக்கிறது. சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சிவத்தலம்தோறும் சென்று, சிவனைப் போற்றி, பதிகம் பாடி வந்தனர். அவர்கள் ஒரே சமயத்தில் வேதாரண்யம் வந்தடைந்தனர். மக்கள் பக்கத்து வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வழிபட்டதைக் கண்ட அவர்கள் வருத்தமடைந்தனர்.

நாவுக்கரசர் பத்து பாடல்கள் (பதிகம்) பாடியவுடன், கதவு திறந்தது. பின்னர் கதவை மூடுவதற்கு ஒரே ஒரு பாடலை சம்பந்தர் பாட, கதவு மூடிக் கொண்டது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம். இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதிசேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்தக் கடல் தீர்த்தம். இதில், ஒருமுறை நீராடுவது ராமேஸ்வரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிக விசேஷமானது. அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வோர் மட்டுமின்றி, மற்றவர்களும் புனித நீராடலாம்.

இங்கே சுவாமியும், அம்பாள் வேதநாயகியும் மணமக்களாக எழுந்தருளியுள்ளனர். கருவறையில் லிங்க வடிவத்தின் பின்புறம் இந்த திருமணக் காட்சியைக் காணலாம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, நோயற்ற வாழ்வு பெற இவர்களை வணங்குவர். நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. 

Tags:    

Similar News