கங்கையின் புனிதத்தை நிரூபித்த சிவபெருமான்!
- “என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்” என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.
- இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.
கங்கையின் புனிதத்தை நிரூபித்த சிவபெருமான்
ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம், சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்.
இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.
அதற்கு விசுவநாதர் "சரி வா" போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.
நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு "புண்ணியவான்கள் தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்வாய்" என்றார்.
கங்கைக்கரையில், தீர்க்க சுமங்கலியாய் விசாலாட்சி நிற்கிறாள். பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுசநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார்.
"என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்" என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.
நீர் கொள்ளாத மனிதத் தலைகள். சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே என தவிக்கின்றனர்.
"ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும். பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கி மாள்வார்கள்" என்றாள் பார்வதி.
பலர் பின்வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள்.
"நீங்கள் பாவமே செய்த தில்லையா?" என்று கேட்டாள் அன்னை
"தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது. என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை.
என்றாயிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்திற்காக முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு போனால் என்ன?" என்றான் ஒருவன்.
இரண்டாமவன், "அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்" என்றான்.
இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர்.
"தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?" என்றார் சதாசிவன்.
"ஆம் சுவாமி! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப் புனிதமானவள். தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்" என ஒப்புக்கொண்டாள் அன்னை.
அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.