ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரகங்கள்-சந்திரன்!

Published On 2023-08-20 06:29 GMT   |   Update On 2023-08-20 06:29 GMT
  • சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்.
  • அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.

சந்திரன்

வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்கு உங்கள் ராசியில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

திறமைகள் இருந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிலருக்குத் திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாத காரணத்தினால் மந்தமாகவே இருப்பார்கள்.

சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்க எறும்பு போல் வேலை செய்வார்கள்.

இப்படி சுறுசுறுப்பாக இருக்க அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவானின் செயல்பாடுகள் கொண்டு மந்த நிலையும், சுறுசுறுப்பான நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. மன உளைச்சல், விரக்தி போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் பரிகாரம் உள்ளது.

சந்திர பகவானை வலுப்படுத்த வேண்டும்

ஒரு குடும்பத்தில் உணவிற்கான அடிப்படைத் தேவை அரிசி. இதை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்னைகள் இருப்பவர்கள் கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளவும். பின்னர் அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இது பச்சரிசி ஆக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு செய்தால் உங்கள் ராசியில் இருக்கும் சந்திர பகவானின் பலம் அதிகமாகும். மேலும் சிக்கல்கள் அதிகமாக இருப்பவர்கள் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கங்கை நதியின் தீர்த்தம் கிடைத்தால் அதனைத் தினமும் குளிக்கும் போது தண்ணீரில் கலந்து நீராடினால் சந்திர பகவானின் பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும். வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்னைகளும் தீர்வதற்குச் சந்திர பகவானும் பலம் மிக முக்கியமாகும்.

மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.

பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.

Tags:    

Similar News